August 30, 2026·விமர்சனங்கள்· 5

மாற்று விசாரணைக் கமிஷன்! ஷோபாசக்தியின் கதைகளைக் குறித்த அவதானிப்பு

01

சிதைக்கவே முடியாது என்னையும் என்னுடைய ஆன்மாவையும். அழிக்கும்தோறும் உயிர்ப்பேன். உயிர்ப்பே எனது விதி. நான் என்பது, நான் மட்டுமல்ல, என்னுடைய சனங்களின் துயரம். என்னுடைய சனங்கள் சிந்திய கண்ணீர்த்துளியினதும் ரத்தத்தினதும் ஆறாச் சூடு. நானென்பது, இழைக்கப்பட்ட அநீதியின் சாட்சி. நானென்பது, தேசாந்திரியாக அலையும் கதியற்ற அகதியின் முகம். நானென்பது சிலுவையேற்றம். நானென்பது உயிர்த்தெழுதல். நானென்பது அணையாத ஒளி. நானென்பது பெருமுழக்கம். ஷோபாசக்தியின் கதைகளைப் படிக்கும்போது எழுகின்ற உணர்வே இது. இதிலுள்ள துயரம் நம்மைக் கலங்க வைக்கிறது. இதில் எழும் வலிமை, நம்மை எழுச்சி கொள்ளச் செய்கிறது. காலத்துக்கும் அழிக்க முடியாத உண்மையின், கொதிக்கும் சொற்களோடு ஒரு சொற்கலைஞர்  நம்முன்னே நிற்கிறார். 

“என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன” என்ற ஷோபாசக்தியின் வெளிப்படையான பிரகடனத்திலிருந்தே அவருடைய புனைவுலகத்தையும் இலக்கிய நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும். அப்படியென்றால்‘ஷோபாசக்தியின் கதைகள்’ முற்று முழுதாக அரசியல் ரீதியானவை – அரசியலை அடிப்படையாகக் கொண்டவை – என நேரடியாகவே வரையறுத்துக் கொள்ளலாம். இதையும் அவரே சொல்லி விடுகிறார்: “இன்றைய உலகச் சூழலில், ஒவ்வொரு தனிமனிதரின் மீதான அரசு இயந்திரத்தின் நெருக்கமான கண்காணிப்புக்குள், பெரு நிறுவனங்களின் அதிகார வலைக்குள் என்னைப் போன்ற தனிமனிதனால் கண்டபடியெல்லாம் கவிழ்த்துப்போட முடியாது. நானும் எண்ணற்ற சமரசங்களுடன்தான் வாழ்க்கையை ஓட்டியபடியிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்னால் கவிழ்த்துப் போட முடியாதவற்றை எனது கற்பனைகளில் உருவாகும் சிறுகதைகள், நாவல்களின் மூலமாக என்னால் கவிழ்த்துப்போட முடியும். மனித உயிரிக்கு வாய்த்த ஆற்றல்களிலெல்லாம் ஆகச் சிறந்த ஆற்றல் கற்பனையே என்றுதான் நான் கருதுகிறேன்.

ஈழ யுத்தத்திற்குள் வாழ்ந்தவர்களோடும் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களோடும் சேர்ந்திருப்பது ஒரு மனிதனாக எனது அறம். அவர்களைக் குறித்து எழுதுவது ஓர் எழுத்தாளனாக எனது கடமை” என்று.

இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, நம்முடைய துயர நிலையும் அதற்கான காரணமும் பளிச்சென உறைக்கிறது. இதைப் புரிந்தாலும் நாமெல்லாம் தனித்து எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை, கையறு நிலையைச் ஷோபாசக்தியைப்போலவே நாமும் உணர்கிறோம். குறைந்த பட்சமாக, யுத்திற்குள் வாழ்ந்தவராக, அந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருப்பதே குறைந்த பட்சமான ஆறுதல் என்றே நானும் உணர்கிறேன். இப்படி எண்ணும்போது துயரம் மேலிடும் முகம் மனதில் தோன்றுகிறது. இப்படி ஒரு முகமல்ல. கோடானு கோடி முகங்கள் இன்றைய உலகில் உண்டு. சக்கையாக்கப்படும் மனிதர்களுடைய முகங்களாக அவை வெளிறிப்போயுள்ளன. ஆனால், ஷோபாசக்தி, ஒரு புனைவெழுத்தாளராக இருப்பதால், நிஜவாழ்க்கையில் செய்ய முடியாததை, புனைவெழுத்தில் செய்கிறார். என்பதால் நியாயக்குரலின் வெம்மையோடு சுடரும் ஒளி முகமாக நம்முன் நிற்கிறார்.  

இடதுசாரியம் (ட்ரொஸ்கிஸ்ட்), தமிழ்த்தேசியம், பெரியாரியம், திராவிடம் என்பவற்றின் சாரத்தைக் கொண்டது ஷோபாசக்தியின் அரசியல். ஷோபாசக்தி முன்வைக்கும் அரசியலைக் குறித்து ஏற்பும் மறுப்புமாக விவாதங்களுக்கான இடமுண்டு. அது எவ்வாறானது என்பதொரு கேள்வி. இரண்டாவது, தன்னுடைய அரசியலை அவர் எப்படி – என்ன விதமாக இலக்கியத்தில் முன்வைக்கிறார்? அது எப்படி இலக்கியமாகிறது – கலையாகிறது? அதனுடைய இலக்கியத் தகுதி  – பெறுமானம் என்ன? என்பது. இது இன்னொரு கேள்வி.

ஷோபாசக்தியின் அரசியல் மேற்சொன்னவற்றின் அடிப்படையிலானது என்பதைத் தொகுத்து ‘ஒடுக்குமுறைகளுக்கு’ எதிரானது என வரையறுத்துக் கொள்ளலாம். கவனிக்கவும்: ‘ஒடுக்குமுறைகளுக்கு’ எதிரானது என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தத்தை. இதைப்பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். அப்படியென்றால், அதனுடைய மறுபக்கம் விடுதலைக்கானது என்றாகிறது. அதாவது சமவேளையில் ‘ஒடுக்குமுறைக்கு எதிரானதாகவும் விடுதலைக்கு ஊக்கமளிப்பதாகவும்’ என இரு நிலையில் வலுவுள்ள கருவியாக.

‘விடுதலைக்கு ஊக்கமளிப்பது’ என்பதை உடனடியாக நீங்கள் விடுதலையின் பெயரில் உள்ள அமைப்புகள், இயக்கங்கள் போன்றவற்றுடன் சம்மந்தப்படுத்திக் கற்பனை செய்து விடக் கூடாது. விடுதலையின் பெயரில் மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகின்ற – விடுதலைக்கு எதிரான அமைப்புகள், இயக்கங்களையே அவர்  கதைகளில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விடுதலையின் பெயரில் இயங்கும் அமைப்புகள், இயக்கங்கள், ஆட்கள் (தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்) வேறு. விடுதலைக்கான கருத்தியலும் அதற்கான செயற்பாட்டு முறைமைகளும் வேறு. இங்கே தூக்கலாக உணர்த்தப்படுவது, மக்களிடம் அதிகாரம் செலுத்த விளையும் அமைப்புகள், இயக்கங்கள் போன்றவற்றையும் அவற்றின் அதிகார நிலையையும் கேள்விக்குள்ளாக்குவதே ஷோபாசக்தியின் எழுத்தியக்கம் என்பதாகும். குறிப்பாக ஈழவிடுதலையை முன்னெடுப்பதாகத் தம்மை அடையாளப்படுத்திய இயக்கங்கள் செய்த, செய்து வரும் மக்கள் விரோத – அரசியல் விரோதச் செயல்களைக் கடுந்தொனியில் விமர்சிக்கிறார் ஷோபாசக்தி. சமனிலையில் மக்களுடைய குரலையும் வாழ்வையும் பிரதிபலிப்பதில் கவனம் கொள்கிறார். அவரால் எழுதப்பட்ட ‘காயா’ என்ற கதையில் ஷோபாசக்தியே இதைப்பற்றிக் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்: “என்னுடைய கதைகளில் என் கிராமத்து மனிதர்களைத்தான் சற்று மாறிச்சாறிப் பதிவு செய்கிறேன்” என.

ஒரு பாத்திரத்தின் கூற்றாக இவ்வாறு சொல்லப்பட்டாலும் இதுதான் ஷோபாசக்தியினுடைய கதைகளின் தொனிப்பாகும். மக்கள் எதிர்கொள்ளும் பாடுகள், அவர்களுடைய பிரச்சினைகள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய உளநிலை  போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் நோக்கை – நிலைப்பாட்டை – இலக்கியப் பிரதிகளாக்கிக் கொள்கிறார் ஷோபா. இந்த அரசியல் இலங்கையின் சிங்கள இனவாத ஆட்சி, தமிழ் பேசும் சமூகத்தினரின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை, இன அழிப்பு போன்றவற்றையும் ஈழவிடுதலைப்போராட்டத்தின் ஜனநாயக மறுப்பையும் சாரமாகக் கொண்டது. இதனால் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியில் புலம்பெயர் தேசங்களிலும் சனங்கள் (அகதிகளும் சாதாரண மக்களும்) படுகின்ற நெருக்கடிகளையும் அவலத்தையும் சாரப்படுத்திய எழுத்து ஷோபாவினுடையது.

1980 களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாக உருவாகியிருந்த ஷோபாசக்தி, 1990 களில் அந்த இயக்கத்தை விட்டு முற்றாகவே வெளியேறி விடுகிறார். வெளியேறியது மட்டுமல்ல, அந்த அமைப்பைக் கடுமையான முறையில் இலக்கியப் படைப்புகளின் வழியாகவும் தன்னுடைய பிற கலைச் செயற்பாடுகளிலும் விமர்சனம் செய்கின்றவராகவும் மாறுகிறார். இருந்தாலும் தன்னைப் ‘போராளி’ என்ற நிலையிலிருந்து மாற்றிக் கொள்ளவில்லை. 1980 களில் புலிகள் இயக்கத்தில் அவர் சேர்ந்தபோதிருந்த சூழலும் அன்றைய அறிவும் அனுபவமும் வேறு. 1990 களில் பிரான்ஸூக்குப் புலம்பெயர்ந்த பிறகு ஏற்பட்ட அரசியல் உறவுகளும் அவற்றினால் ஏற்பட்ட அனுபவங்களும் அவற்றின் மூலமாக உருவாகிய அறிவு நிலையும் வேறு. பின்னாளில் விரிந்த தளத்திலான ஒரு சர்வதேசப் பார்வையும் பன்முகச் சிந்தனையும் ஷோபாசக்தியிடம் உருவாகிறது. இது அவரை ‘ஆயுதந்தாங்கிய ஈழப்போராளி’ என்ற நிலையிலிருந்து ‘எழுத்தை ஆயுதமாகக் கொண்ட இலக்கியப் போராளி’ யாக ஆக்குகிறது. இதை அவர் பல நேர்காணல்களிலும் விளக்கியிருக்கிறார். மட்டுமல்ல, இது அவருடைய எழுத்துகளிலும் கருத்துகளிலும் துலக்கமாகப் பிரதிபலிக்கிறது. ஏன் அவருடைய வாழ்க்கையிலும் கூடத்தான்.

படைப்பாளிகளிடத்தில் இத்தகைய வளர்ச்சி நிலை ஏற்படுவது இயல்பு. அது நிகழ வேண்டும். அதுவே பரிணாமும் பரிமாணமுமாகும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று நன்னூல் சொல்கிறது. இதன் மூலமாகப் படைப்புச் செழுமையும் புதுமையும் நிகழும். வளர்ச்சியின் அடிப்படை இதுவல்லவா! எழுத்தாளர்கள் தேங்கிய குளமாகவோ குட்டையாகவோ இருக்கக் கூடாது. எல்லாக் கரைகளையும் தழுவியோடும் பேராறாக, பெருகிச் செல்லும் நதியாக இருக்க வேண்டும். ஆனால், பலரும் இந்த நிலைமாற்றத்தையும் வளர்ச்சியையும் பன்முகத்தன்மையையும் மறுதலிப்பதும் உண்டு. அவர்கள் வளராத மரமாக அப்படியே காலத்திலும் தமக்குள்ளும் உறைந்து விடுவர்.

ஈழப்படைப்பாளிகளில் பலர் தாங்கள் வரித்துக் கொண்ட நிலைப்பாட்டிற்குள் (சூத்திரத்திற்குள்) உறைந்து போவதுண்டு. அக –  புறத் தீண்டல்கள் அவர்களுக்குள் எதையும் நிகழ்த்துவதில்லைப்போலும். எத்தகைய விமர்சனங்களையும் ஏற்க விரும்பாமல், தமது நிலைப்பாட்டில் அப்படியே நிற்பது அறமென்றும் அதுவே அழகென்றும் கருதிக் கொள்கிறார்கள். இதனால் தம்மை அறியாமலே அவர்கள் உட்குவின்றனர். தாம் விரும்புகின்ற – நம்புகின்ற கொள்கையின் அல்லது அரசியலின் அல்லது அமைப்பின் அல்லது தரப்பின் மீதான பற்று அப்படி அவர்களை ஆக்கி விடுகிறது. அதுவொரு மோக நிலையின் வெளிப்பாடாகும். இப்படி ஒன்றுக்குள் உட்குவிந்து விடாமல் தன்னை வெளிவிரித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டவர் ஷோபாசக்தி. என்பதால்தான் தன்னை ஒரு ‘மாற்று நிலைப் போராளி’யாகச் ஷோபாசக்தியினால் உருவாக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. இதுதொடர்பாகப் பலரிடம் பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அதையெல்லாம் கடந்தும் ஷோபாசக்தி, அநீதிக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கலகக்காரனாக, எதிர்ப்புக் குரலுக்குரியவராகவே இருக்கிறார். குறிப்பாக மக்களின் துயர்நிலை நின்று எழுதி, அந்தத் துயரத்தைத் தீர்ப்பதற்கான நீதிக்குரிய சாட்சியாளராக, விடுதலை விரும்பியாக. 

சனங்களின் பாடுகளை மையப்படுத்தி எழுதும் பலர் உள்ளனர். அவர்கள் எந்த அதிகாரத் தரப்புகளோடும் மோதலுக்குப் போவதுமில்லை. அவற்றை நேரடியாகவும் கடுமையாகவும் விமர்சிப்பதுமில்லை. சனங்களின் துயரையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதோடு தங்களுடைய ‘உயர்ந்த – மகத்தான’ பணியைச் சிரமம் இல்லாமல் முடித்துக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு வகையான இலக்கியப் பெறுமானம் உண்டுதான். ஆனால், அது அந்தத் துயரத்துக்கும் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் காரணமான பின்னணிகளையும் அந்தப் பின்னணிகளில் இயங்கும் அதிகாரத் தரப்புகளையும் கண்டு கொள்ளாமல் விடுவதனால், பாதி நிலைப் பெறுமானத்தோடு அடங்கி விடுகின்றன. அத்தகைய இலக்கியப் பிரதிகளிலிருந்தும் அவற்றை உருவாக்கும் எழுத்தாளர்களிடமிருந்தும் ஷோபாசக்தியின் எழுத்துகளும்  ஷோபாசக்தியும் வேறுபடுவது, சனங்களைப் பாடாய்ப்படுத்தும் அரசியலையும் அந்த அரசியலை மேற்கொள்ளும்  அதிகாரத்தரப்புகளையும் ஈவிரக்கமின்றித் தாக்குவதாலும் நேர்நின்று  விமர்சிப்பதினாலுமாகும். போராளிக்குரிய ஓர்மமும் பொறுப்புணர்வும் அவரிடமுள்ளதால்தான் இப்படி அவரால் இயங்க முடிகிறது. என்பதால்தான் ஷோபாசக்தியைக் குறித்தும் அவருடைய எழுத்துகளைக் குறித்தும் நாம் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. அதற்காக ஷோபாசக்தியின் கதைகளை வெறுமனே ‘ஒடுக்குமுறைக்கு எதிரான எழுத்து, விடுதலைக்கான பரப்புரை  இலக்கியம்’ என்று எளிமையாகப் எளிமைப்படுத்திச் சொல்லிச் செல்ல முடியாது. அதைப்போல அதனுடைய அரசியற் தன்மைகளைப் பற்றி விமர்சிக்காமல் தவிர்க்கவும் முடியாது.

ஈழத் தமிழ்ச் சூழலில் இன ஒடுக்குமுறையை எதிர்த்து விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பலர் உள்ளனர். அவர்கள் சாதிய ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, பிரதேச ரீதியான வேறுபடுத்தல் போன்றவற்றுக்கு ஆதரவானவர்களாக இருக்கிறார்கள். அல்லது அவற்றைப் பொருட்படுத்தாதோராக உள்ளனர். அதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டே அல்ல. அவர்கள் தமக்கு இசைவான – வாய்ப்பான – அரசியலை மட்டும் வசதியாகத் தெரிவு செய்து கொள்கிறார்கள் (Choosing only the politics that suits them). எடுத்துக்காட்டாக தமிழ்த்தேசிய (விடுதலைப் புலிகளின் ஆதரவு) அரசியலை வலியுறுத்தும் எழுத்தாளர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வுநிலையான அல்லது விரோத அபிப்பிராயமே உண்டு. சிங்கள இனவாதத்தைப் பட்டியலிடும் படைப்பாளிகளால் சாதியப் பின்னிலைப்படுத்தல்களைப் பற்றி ஒரு சொல் எழுதவோ பேசவோ முடிவதில்லை.

ஷோபாசக்தி அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கிறார். விளிம்பு நிலை மக்களையும் கவனப்படுத்துகிறார். இதனால்தான் ஷோபாசக்தியின் அரசியல் ‘அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது’ என்று அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. கூடவே அது ஜனநாயகத் தளத்தைப் பலப்படுத்தி விரிவாக்கம் செய்வதுமாகும். என்பதால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட அனைத்து  ஜனநாயக மறுப்புகளுக்கும் எதிரான கடுமையான விமர்சனமாகவும் எதிர்ப்புக் குரலாகவும் அவருடைய புனைவுகள் உள்ளன. இதற்காக ஷோபாசக்தி ஒரு காலம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். கடுமையான அவதூறுகளால் தூற்றப்பட்டிருக்கிறார். இதைக்குறித்து ஷோபாசக்தியின் வார்த்தைகளே ஒரு சாட்சியமாகும்: ‘படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மீது அவதூறுகளை அள்ளிக்கொட்டும் சல்லிப் பயல்கள் நிரம்பிய உலகமிது என்பதால் கவலை ஏதுமில்லை. அவற்றை மயிரெனவும் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. எத்தனையோ அடக்குமுறைகளையும் எழுத்துச் சுதந்திர மறுப்புகளையும் மிரட்டல்களையும் நிராகரிப்புகளையும் நேரடி உடல்ரீதியான தாக்குதல்களையும் எதிர்கொண்டும் பணியாமல் எழுதிக்கொண்டிருப்பவன் நான். இந்தத் தொடர்ச்சியான எழுத்துப் போரை இலக்கிய அரிப்புகளால் சுரண்டிக் கூடப் பார்க்க முடியாது!’

ஆகவே, இதையிட்டெல்லாம் ஷோபாசக்தி கவலைப்படவுமில்லை. தன்னுடைய எழுத்தை மாற்றிக் கொள்ளவுமில்லை. பதிலாக மேலும் மேலும் தன்னையும் தன்னுடைய எழுத்தையும் தீவிரப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். நியாயமான எந்த எழுத்தாளராலும் அப்படித்தான் தொழிற்பட முடியும். தன்னுடைய அகத்தில் உயிர்கொண்டெரியும் உண்மையின் சுடரையே அவரால் ஏற்றக் கூடியதாக இருக்கும். மந்தைத் தனமான புறச் சூழலில், மிக இலகுவாக நிகழ்ந்து விடக் கூடிய ஆதரவு அலைகளில், தன்னுடைய படகைச் செலுத்திப் பலியிட முடியாது. அது இலக்கிய  வரலாற்றில் தற்கொலைக்குச் சமம். அப்படியான தற்கொலையாளர்களும் உள்ளனர். ஆனால், அறவுணர்ச்சியுள்ள எந்த எழுத்தாளராலும் அப்படிச் செய்வதற்கு ஒருபோதுமே முடியாது. எழுத்தாளர் நெளிவு சுளிவுகளோடு அலையும் அரசியல்வாதியோ வணிகரோ அல்ல.

எழுத்தாளராக இருப்பது என்பதே ஒரு வகையில் மறுத்தோடியாக இருப்பதுதான். ஆனால், அப்படி மறுத்தோடிகளாக இருப்போர் வரவரக்குறைந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே வளர்ச்சியடைகிறது. அப்படியென்றால் இது லாபங்களை நோக்கிச் சரியும் மினுக்க வாழ்வின் பிசாசாட்டமாகும். ஷோபாசக்தி இதற்கு வெளியே சிலுவையில் ஏற்றப்படுவோனாக, தானே விரும்பி ஏறும் தேவனாக இருக்கிறார்.

எந்த நிலையிலும் தன்னைச் சரிந்து விடாமல் வைத்துக் கொள்ளும் விதமாக இருப்பது படைப்பாளியின் உயரிய அறமாகும். இதைத்தான் ஷோபாசக்தி சொல்கிறார் எனக் கண்டோம். அதைக்குறித்துப் பார்க்கலாம்.

02

அரச பயங்கரவாதத்தையும் அரசு மேற்கொள்ளும் ஜனநாயக மீறல்களையும் சர்வதேச ஆதிக்கச் சக்திகளின் மேலாதிக்க விளைவுகளையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு பரந்த எதிர்ப்பு வடிவத்தில் ஷோபாசக்தியின் புனைவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது அவருடைய படைப்புகளின் இன்னொரு விரிவாகும். இன்னொரு தளத்தில் அய்ரோப்பிய நாடுகளில் காணப்படும் நிறவேற்றுமை, உலகெங்கும் அகதிகள் (தமிழ் அகதிகள் மட்டுமல்ல) எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அவர்களுடைய உளநிலை, மேற்கத்திய அரசுகளின் அணுகுமுறை போன்றவற்றையும் ஆழமாகக் கவனப்படுத்துகிறார். முக்கியமாக மேற்குலகில் கறுப்பினத்தவர்களின் நிலை, மாற்றுப் பாலினத்தோர், விளிம்பு நிலை மனிதர்கள் போன்றோரின் வாழ்க்கை மற்றும் தற்போது உருவாகியிருக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்கடி, என்று விரிந்த பரப்பிது. 

இதற்கு அவருடைய விரிந்த அரசியற் பார்வையே – பல்வேறு தரப்புகளோடும் அவர் கொள்ளும் தொடர்ச்சியான உரையாடல்களும் மாற்றங்களைக் குறித்த அவதானிப்புமே காரணமாகும்.

புனைவுகளில் மட்டுமல்ல, ஷோபாசக்தியின் நேர்காணல்கள், கட்டுரைகள், சினிமாத்துறைப் பங்களிப்புகள், பங்கேற்புகள், நாடகம் போன்றவையும் இத்தகைய அரசியல் உள்ளடக்கத்தை அல்லது வெளிப்பாட்டைக் கொண்டவையே. அதற்காக அவையெல்லாம் அரசியல் பரப்புரைப் பிரதிகளோ வெற்று எதிர்ப்புக் குரல்களோ அல்ல. சமூகப் பிரக்ஞை உடைய தீர்க்கமான கலைஞரின் எதிர்வினைகள், சாட்சியங்கள், கேள்விகள், மறுப்புகள், பிரகடனங்கள், துயரொலிகள், கேலிகள் எல்லாம் இணைந்த கலை வெளிப்பாடுகளாகும்.   

‘என்னுடைய கதைகள் எல்லாமே சற்று நீளமான அரசியற் துண்டுப் பிரசுரங்கள்தான்’ என்று ஷோபாசக்தி பிரகடனம் செய்தாலும், அவை அப்படி இல்லை. பதிலாக அவை வெற்றியடைந்த மிகச் சிறந்த கலை வெளிப்பாடுகள் என்பதே வாசகத் தீர்மானம். விமர்சகர்களுடைய நிலைப்பாடும் அதுவே. உலக இலக்கிய வரிசையில் வைக்கக் கூடியவை ஷோபாசக்தியினுடைய புனைகதைகள் என்பதைத் தயக்கமின்றிச் சொல்ல முடியும். கதையை உருவாக்கும் முறையில், கதை சொல்லுவதில், வாசகர்களுடன் நேரடியாகவே உரையாடுவதைப்போன்ற தன்மையைக் கட்டமைப்பதில் (அத்தகைய உணர்வை ஏற்படுத்துவதில்) வரலாற்றுப் பாத்திரங்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் புனைவாக்குவதில் எல்லாம் கற்றுக் கொள்வதற்கு (பயில்வதற்கு) ஷோபாசக்தியின் எழுத்துகளில் நிறையவுண்டு. முக்கியமாக, தன்னுடைய அரசியல் நோக்கைக் கலையாக்குவதில். மகத்தான எழுத்தாளர்களிடம் இத்தகைய சிறப்பம்சங்கள் இருப்பதுண்டு. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, அன்டன் செக்கோவ்,  துர்கனேவ், மாக்ஸிம் கார்க்கி, அலெக்சாண்டர் புஷ்கின் போன்ற ரஷ்யப் படைப்பாளிகள் தொடக்கம்  உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரையில் அனைவரிடத்திலும் இந்தச் சிறப்பிருக்கிறது.

இந்தச் சிறப்புத் தன்மையினால் ‘வரட்டு அரசியல் பிரதிகள்’ என்று தட்டிச் செல்ல முடியாத அளவுக்கு, அசாத்தியமான புனைவுத் தொழில் நுட்பத்தின் வழியாக அவற்றை வெற்றிகரமான கலையாக்கி விடுகிறார் ஷோபாசக்தி. கதையைப் படிக்கத் தொடங்கும்போதே சட்டெனத் தீவிரமடையும் ஒருவகையான எழுத்து முறைமை ஷோபாசக்தியினுடையது.

உயிரில் தீப்பிடிப்பதைப்போன்ற விடயங்களைத் தேர்வு செய்வது இதற்கொரு காரணமாக இருக்கலாம். வரலாற்றுக் குறிப்புகள், மெய்விவரச் சித்திரிப்புகள், அறிக்கைகள், தலைவர்கள், அறிஞர்கள்,  அரசுகள், அமைப்புகளுடைய கூற்றுகள், மக்களுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கதைகளில் சிறப்பாகப் பொருத்தி விடுகிறார்.

எந்தப் பொருளையும் கலைநுட்பத்துடன் ஆக்கும்போது அது வியப்பையும் ஈர்ப்பையும் ஒருங்கிணைத்துக் கவனம் பெற வைக்கும். தேங்காய்ச் சிரட்டையில் எளிமையாகச்  செய்யப்படுகின்ற ஒரு பொருள்கூட, அதில் உள்ள கலை நுட்பத்தினால், கலைப்பொருளாக மாறிப் பெறுமதியடைகிறது. தாளில் வரையப்படுகின்ற – சுவரில் தீட்டப்படுகின்ற ஓவியங்கள் எல்லாம் அவற்றின் நுட்ப வெளிப்பாட்டினால் கலையாகின்றன. இங்கேதான் ஷோபாசக்தி என்ற கலைஞரின் திறனை நாம் பார்க்க முடியும். நாம் சந்தித்த, அறிந்த சம்பவங்களும் மனிதர்களும் இடங்களும் வேறொன்றாக – வியப்பளிப்பனவாக மாறும் – மாற்றப்படும் – வித்தை இது. அந்த நாட்களின் வண்ணமே மாறி விடுகிறது. இப்படி இவற்றைப் பொருத்தும்போது அது சடத்தனமாக இருந்து விடாமல், உயிருள்ள – உயரிய கலைப்பொருட்களாக மாறி விடுகின்றன. பலவகையான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Collage போலப் கதைகள் உண்டு. Collage – Technique of artistic creation.  ‘ரம்ழான்’, ‘Cross Fire’ போன்றவை இதற்கு உதாரணம். இதற்கு அவரிமுள்ள படைப்புத்திறனும் புத்தாக்க விருப்புமே காரணமாகும். கூடவே, அவற்றைச் சொல்லும் விதத்தினாலும் (மொழிதலினாலும்) வாசிப்போரைத் தீவிரப்படுத்தி விடுகிறார். புதிதான மொழிதலையும் புதிய வடிவங்களையும் ஒவ்வொரு கதையிலும் அவர் பரீட்சித்துப் பார்ப்பது ஈர்ப்புக்கு இன்னொரு காரணம். ‘எலிவேட்டை’, ‘அந்திக் கிறிஸ்து’ எனப் பல கதைகள்…

ஆகவே ஷோபாசக்தியிடமுள்ள கதையாக்கத் திறன் (Creativity  – Storytelling skills), கலை நுட்பம் (artistic technique), படைப்புச் செழுமை (creative richness), மொழியின் உச்சமான சாத்தியங்களைப் பயன்படுத்திப் புனைவை நிகழ்த்திக் காட்டுதல் (and performing fiction using the highest possibilities of language) போன்றன கதைகளை வலிமையுடையனவாக மாற்றுகின்றன. இந்த ஆற்றலினால், இந்தக் காரணங்களினால் பலரும் அறிந்த சம்பவங்கள் கூட அவருடைய புனைவுத்திறனால், மிகச் சிறந்த கதைகளாகி, கலையாகி  வெற்றியடைகின்றன. இதனால்தான் இலக்கியத்தில் அரசியலின் இடம் (செல்வாக்கு) குறித்து எதிர்மறையாக விமர்சிப்பவர்களும் ஷோபாசக்தியின் புனைவுகளைக் குறித்து உயர்ந்த மதிப்புடனே பேசுகின்றனர். இப்படித் தன்னுடைய புனைவாற்றிலினால் தன்னையும் தன்னுடைய கதைகளையும் நிராகரிக்க முடியாத அளவுக்கு நிறுவி விடுகிறார் ஷோபா. இதன் வழியே தன்னுடைய அரசியலையும் வெற்றிகரமாக வாசக மனதிலும் வரலாற்றிலும் நிலைப்படுத்திக் கொள்கிறார்.

ஷோபாசக்தி பயன்படுத்தும் அல்லது மேற்கொள்ளும் கதைத் தொழில் நுட்பம் அவருடைய புனைவுகளை அழகியலாக்கி, கலைப்பெறுமானத்தை ஏற்றி வெற்றியடையச் செய்கிறது எனக் கண்டோம். அவர் புனைவுகளில் முன்வைக்கின்ற அரசியலை, அரசியல் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் அவருடைய முதன்மையான வாசகர்களாக இருப்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். இதுதான் அவர் எதிர்பார்த்ததும் பெற்ற வெற்றியுமாகும்.

எழுத்தாளரின் நோக்கானது அவருக்குரிய சிறப்புப் பரப்பொன்றை இலக்காகக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தாளரிடத்திலும் இது இருக்கும். அவர்களுடைய தனித்தன்மைகளில் இந்த அம்சம் ஒன்றாகும். ஆனால், இது ஆளுக்காள், ஆளுமைக்கு ஆளுமை வேறுபடும். சிலரிடம் இது உச்சச் சிறப்பைக் கொண்டமைவதுண்டு. அவர்கள் தம்முடைய உள்ளத்தில் கொண்டிருக்கும் மானுட நேசிப்பையும் அதற்கான அறத்தையும் தம்முடைய எழுத்திலோ கலைப்படைப்பிலோ வெளிப்படுத்துவர். அல்லது அது அவற்றில் வெளிப்படும். அது அவர்களுடைய அகத்தின் ஒளியை இருளுள்ள பிராந்தியத்தில் பரப்புவதாகும். இருளின் அடர்த்தியில் நிகழ்வனவற்றையும் புலப்படச் செய்தல் – உணரச் செய்தல் இலக்கியத்தின் பண்பாகும். இதைச் ஷோபாசக்தி கவனத்திற் கொண்டிருக்கிறார்.

ஆகவே புனைவின் (கதைகளின்) வழியே விருப்பத்துக்குரியவற்றையும் விருப்பமற்றவற்றையும் என எல்லாவற்றையும் வரலாற்றில் நிலைபெறச் செய்து விடுகிறார் ஷோபாசக்தி. இது ஒரு முக்கியமான விடயம். இதை வெளியார் எவ்வளவுக்குப் புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஈழத் தமிழர்கள் அதிகமாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதிலும் இந்தக் கதைகளோடு இணைந்த வாழ்வைக் கொண்டவர்களுக்கு இன்னும் கூடுதலான அதிர்வை இந்தக் கதைகள் உருவாக்கக் கூடியது.

1958 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனவன்முறையைப் பற்றிய சேதியை ‘கப்டன்’ கதையில் உள்ள பொன்ராசா என்ற பாத்திரத்தோடு இணைத்துச் சொல்லி விடுகிறார் ஷோபா. இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த, நடத்தப்பட்ட ஏராளம் வரலாற்றுச் சேதிகளும் சம்பவங்களும் சொல்லப்படுகின்றன. இரத்தமும் கண்ணீரும் அதிகமாகச் சிந்தப்பட்ட மிகக் கடினமான காலத்தின் எழுத்துச் சாட்சியங்கள் இவை என்பதால், இவற்றை அறிந்தோருக்கு, இவற்றோடு வாழ்ந்தோருக்கு இவற்றின் கனதி புரியும். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்திலும் சரி, அதற்குப் பிறகு இப்பொழுது இவற்றை மீளப் படிக்கும்போதும் சரி, ஒவ்வொரு கதையும் பல்வேறு பாதைகளால் நம்மை அந்தக் காலத்துக்கும் களத்துக்கும் கொண்டு செல்கின்றன. அந்தப் பாதைகள் வாழ்வில் மறக்க முடியாத பல நூறு நினைவுக் கற்களைக் கொண்டவை. அவை வெறும் நினைவுக் கற்களல்ல. உயிரை வாட்டிய வாதைகளைக் கொண்ட உயிர்க்கற்கள். அதிலும் இந்தக் கதைகளைத் தனித்தனியாக வாசித்தபோது ஏற்பட்டதையும் விட, முழுக்கதைகளையும் வாசிக்கும்போது ஏற்படுகின்ற பதைப்பு உச்சமானது. உளச்சுமை கூடியது. நாம் சந்தித்துக் கடக்க முடியாமற் கடந்த கொலைகளும் அழிவும் அவமானங்களும் துக்கமும் அலைச்சலும் நெருக்கடிகளும் கதியற்ற வாழ்வுமாக இருந்ததொரு கொடுங்காலத்தை மீள எழுப்பிக் கொள்கின்றன. அப்படி அந்தக் காலம் உயிர்ப்பாக எழும்போது அது எப்படி நமக்கு முன்னும் நமக்குள்ளும் கொடும்பாம்பாக எழுந்தாடியிருக்கிறது என்ற பதைப்பும் அவமானமும் துக்கமும் கையறு நிலையுமான உணர்வு ஏற்படுகிறது. மறுநிலையில் அது வேறு விதமாகவும்  தொழிற்படுகிறது. மக்களின் மீது அதிகார சக்திகளால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் கொடுமையை, அநீதியை,  உலக மனச்சாட்சியின் மீது (அப்படியொன்று இருந்தால் அதன் மீது) வைத்து, நீதியைக் கோரும் பீடமாக வானுயர உயர்த்துகிறது.

03

ஷோபாசக்தியின் கதைகளை மேலும் புரிந்து கொள்வதற்கு அவற்றின் பின்னணிச் சூழலையும் வரலாற்றையும் அறிந்திருப்பது நல்லது. இந்தக் கதைகளே அந்தச் சூழலையும் அதற்குரிய வரலாற்றையும் திறந்து காட்டுகின்றனதான். இருந்தாலும் குறித்த பின்னணியைத் தெரிந்தால், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது கூடுதலாகப் புரியும்.

இலங்கை அரசு, இன ஒதுக்கலையும் ஒடுக்குமுறையையும் ஆட்சி முறையாகக் கொண்டது. 1948 க்குப் பிறகான சுதந்திர இலங்கையின் ஆட்சி வரலாறு இதுவே. (இலங்கையின் அரசியலமைப்பே இனவாத்த்தை அடிப்படையாக்க் கொண்டது. சிங்கள பௌத்த்த்துக்கு முன்னிலை அளித்து, ஏனைய இனச் சமூகங்களைப் பின் தள்ளுவதாகும்). அந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் சாதாரணமானவை அல்ல. மிகக் கொடூரமானவை; பாரதூரமானவை. அதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டத்தை அது ரத்தம் சிந்தச் சிந்தக் கொடூரமாக ஒடுக்கியது. இதனால் பல ஆயிரம் மக்கள்  கொலையுண்டனர். பாதிக்கப்பட்ட மக்களோ லட்சக்கணக்கில். பல லட்சம் மக்கள் உலகமெங்கும் அகதிகளாகச் சிதறினர். இவற்றுக்கான நீதி விசாரணைகளும் நீதி வழங்கல்களும் உள்நாட்டில் அரசினாலும் நிகழவில்லை. சர்வதேச ரீதியாகவும் ஏற்படவில்லை. ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து நீதிக்கான குரல்கள் எழுந்து கொண்டேயுள்ளன. எதிர்காலத்தில் கூட இந்த மக்களுடைய குரல்களுக்கான மதிப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிகூட  இல்லை.

சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா வின் மனித உரிமைகள் பேரவை போன்ற பேரமைப்புகள் எல்லாம் சம்பிரதாயபூர்வமாக அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும், பிரேரணைகளை நிறைவேற்றும் சிறுமையைச் செய்யும் அளவுக்குத் தேய்ந்து விட்டன. ஷோபாசக்தியின் எள்ளலான மொழியில் சொல்வதென்றால், இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் செய்யப்படுகின்ற (சர்வதேச சமூகத்தை நோக்கிய) அழுதுவடியும் பிரேரணைகளுக்கும் கீழான அளவில்தான் இவற்றின் தீர்மானங்களும் பிரேரணைகளும் உள்ளன. சிரித்து விடாதீர்கள். இதுதான் உண்மை. இந்த நிலையில், ஒரு பொறுப்புள்ள கலைஞராகவும் அறச் சீற்றமுள்ள மனிதராகவும்  தன்னுடைய புனைவுகளினூடாக அதிகாரத் தரப்புகள் மேற்கொண்ட  மக்கள் விரோதச் செயல்களின் நீதியின்மையை வரலாற்றில் நிலைபெறச் செய்து விடுகிறார் ஷோபாசக்தி. இந்த உலகம் இப்படித்தான் மோசமானதாக உள்ளது என்கிறார் ஷோபா.  இதை இந்தக் கதைகளைப் படிக்கும்போது தெளிவாக நாமும் உணர்ந்து விடுகிறோம்.  

மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும் சிறப்புக்குமாக மனித குலம் பல்லாயிரம் கண்டுபிடிப்புகளையும் பல கோடி உற்பத்திகளையும் செய்து கொண்டேயிருக்கிறது. தத்துவம், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டங்கள், நிர்வாகங்கள் என்றெல்லாம் ஏராளமான ஏற்பாடுகள் உண்டு. இவையெல்லாம் இருந்தும் என்ன? கண்முன்னே ஒடுக்குமுறையும் அரசியற் பழிதீர்த்தலும் சுரண்டலும் புறக்கணிப்பும் கொலையும் இன அழிப்பும் ஆக்கிரமிப்பும், அகதியாக்குதலும் என்றுதானே உலகம் உள்ளது. இந்த வார்த்தைகளை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் அழும் குழந்தைளின் குரலும் விம்மும் அன்னையரின் விசும்பலும் கேட்கிறது. அங்கே கையறு நிலைக்குள்ளான தந்தையரின் கண்ணீரும் கொல்லப்பட்டவர்களின் இரத்தமும் கண்ணில் தெரிகிறது. இந்த நிலையில் உலகம் உய்வதும் மனித குலம் தளைத்தோங்குவதும் எப்படி?

ஷோபாசக்தி என்ற கலைஞரால் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் எழுதுகிறார். அவரால் இயலக்கூடிய வழியில், அவருக்குத் தெரிந்த மொழியில். கதைகள்… கதைகள்…. கதைகளாக…. ‘காணாமற்போனவர்’, ‘கண்டி வீரன்’, ‘மிக உள்ளக விசாரணை’, ‘அந்திக் கிறிஸ்து’, ‘பல்லிராஜா’, ‘ஆறாங்குழி’..… எனப் பல பத்துக் கதைகளில் இதைச் செய்திருக்கிறார்.

ஷோபாசக்தியின் இந்தப் பழியுரை (பழிப்புரை) காலம் முழுவதுக்கும் அழியாதிருக்கும். ஆட்சித்தரப்பின், அதிகார அமைப்புகளின் முகத்திரைகளைக் கிழித்திருக்கும். பாதிக்கப்பட்டோரின் ஆன்மாவாக காலத்தில் ஒளிரும். போர் முடிந்திருக்கலாம். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கடந்திருக்கலாம். ஆனால், இழைக்கப்பட்ட அநீதிக்கு (நீதி மறுப்புக்கு) எத்தகைய தண்டனையும் தீர்வும் கிடைக்காமல் இருக்கலாம். இதைக்குறித்து உலகத்துக்கு எந்த அக்கறையும் இல்லாதிருக்கலாம். ஆனால், அதையெல்லாம் எதிர்க்கும் – கேள்வி கேட்கும் தீர்க்கமுடைய குரலாக இருந்து, ஒரு ஓயாத சாட்சியாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறார் ஷோபாசக்தி. இங்கே தீர்க்கமுடைய குரல் என்று ஷோபாசக்தியைச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்குக் காரணம், திரட்டப்படும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளையும் விட ஷோபாசக்தியின் கதைகள் (புனைவுகள்) வழியாக நிறுவப்படும் உண்மையும் அநீதிச் சித்திரங்களும் வலுவானவை; கூருள்ளவை; உயிர்ப்பானவை.  இதுதான் கலையின் வெற்றியும் சாதனையுமாகும். இந்தக் கதைகள் இப்பொழுது வெவ்வேறு மொழிகளினூடாக பிற சமூகங்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப் பிற சமூகங்களில் பயணிக்கும்போது, அவை பெறுகின்ற இடமும் அவற்றின் குரலுக்குக் கிடைக்கின்ற மதிப்பும் அவை உருவாக்கும் அரசியல் விழிப்பும் தூண்டலும் அநீதியாளர்களுக்கு எதிரான இன்னொரு போர்முனையாகும்.

04

நிகழ்வுகளைக் கதையின் வழியாக நிலைபெறச் செய்தலில் ஷோபாசக்தி சிறப்பானவர் (Shobhasakthi excels at making events come alive through storytelling). இன்னொரு வகையாகச் சொன்னால், கதைசொல்லல் மூலம் முடிந்துபோன நிகழ்வுகளை உயிர்ப்பிப்பதில் ஷோபாசக்தி சிறந்து விளங்குகிறார் (Bringing past events to life through stories). என்பதால் ஷோபாசக்திக்கு வரலாற்றில் தனிச் சிறப்பிடமுண்டு. அவருடைய கதைகளில் வரும் ஒவ்வொரு சம்பவங்களும் அழிக்கவே முடியாத வகையில் நிலைபெறுகின்றன. மாதா, F இயக்கம், Cross Fire, ஆறாங்குழி என ஒவ்வொரு கதையிலும் வரும் சம்பவங்கள்… யாழ்ப்பாண இடப்பெயர்வு, அமைச்சர் மகேஸ்வரன் கொலை, மண்டைத்தீவுக் கொலைகள்…. எனப் பல சம்பவங்கள்….

‘போர் முடிந்து விட்டது. இனி வருவது அமைதிக்கான காலம்; அபிவிருத்தி யுகம்..’ என்று அரசும் அதனுடைய ஆதரவாளர்களும் வெள்ளை போர்த்தலாம். நிகழ்ந்தவற்றை நீதியினாலும் மெய்யான கருணையினாலும் அன்பினாலும் அரவணைப்பினாலும் தணிக்க முடியுமே தவிர, அதிகாரத்தினாலும் தந்திரங்களினாலும் அல்ல என்பதே ஷோபாசக்தியின் நிலைப்பாடு. வாசகர்களாகிய உங்களுடைய நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும். ஏனென்றால், எதையும் நீங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாது. அவை அப்படிக் கடந்து செல்லக் கூடியவையும்  அல்ல என்பதே அவருடைய தீர்மானம். இதை மனதிற் கொண்டே அவற்றையெல்லாம் உயிர்ப்பிக்கிறார் ஷோபாசக்தி. இலங்கை அரசின் முன்பாக மட்டுமல்ல, அனைத்துக் குற்றவாளிகளின் முன்பும் இதைச் சொல்லி நிமிர்கிறார். இதுதான் கலைஞர் ஒருவரின் அழகும் சிறப்பும் முக்கியத்துவமுமாகும்.

எனவே ஷோபாசக்தியின் புனைவுகள், நிகழ்வுகளை அடிப்படையாக அல்லது ஆதாரமாகக் கொண்டவை என்று வகுத்துக் கொள்ளலாம். ‘பல்லிராஜா’, ‘அந்திக் கிறிஸ்து’, ‘ஆறாங்குழி’, ‘வர்ணகலா’…… போன்ற பல கதைகள் இந்த வகை. பல சம்பவங்களைக் கதைகளுக்குள் இணைத்துக் கொள்வது இன்னொரு வகை. ‘குண்டு டயானா’  இதற்கு உதாரணம். இன்னொன்று, தானாகவே நிகழ்வுகளைப் புனைந்து கொள்வது. ‘மரச்சிற்பம்’, ‘கச்சாமி’ போன்ற கதைகள் அப்படியானவை. ஆனால், எல்லாவற்றிலும் வாசிப்போர் எந்த வேறுபாடுகளையும் காண முடியாது. கதை உருவாக்கத்தையும் கதைக்கட்டமைப்பையும் (Story creation and story structure) ஷோபாசக்தி அப்படிச் செம்மையாகச் செய்து விடுகிறார்.

05

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் ஷோபாசக்தியின் இதுவரையான (1997 – 2004) சிறுகதைகள் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளது. தொகுப்பில் 52 கதைகள் உள்ளன. சமகாலத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் ஷோபாசக்தி. சிறுகதைகளுக்கு அப்பால், ‘கொரில்லா‘, ‘ம்‘, ‘பொக்ஸ் – கதைப்புத்தகம்‘, ‘இச்சா‘, ‘ஸலாம் அலைக்‘ என ஐந்து நாவல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. எழுத்துக்கு அப்பால், நாடகம், சினிமா என வேறு தளங்களிலும் செயற்பட்டு, சர்வதேச அளவில் அறியப்பட்டவர். கதைகளும் நாவல்களும் ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், சிங்களம் போன்ற வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெருமாள் முருகன், ஜெயமோகன்,  சல்மா, சுந்தர ராமசாமி என மிகச் சிலரே புனைவின் வழியாகப் பல மொழிகளில் பயணிப்பவர்கள். இதற்கப்பால், ஷோபாசக்தியின் நேர்காணல்கள் தனித் தொகுப்புடையது. பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த ஆளுமைகளை அவர் செய்த நேர்காணல்கள் மூன்று நூல்களாக வெளிவந்திருக்கின்றன. தியாகுவும் ஷோபாசக்தியும் நடத்திய உரையாடல் தனியான ஒரு நூல். ‘அகாலம்’, ‘தனுஜா’, ‘குவார்ணிகா’, ‘இமிழ்’, ‘குழந்தைப்போராளி’, ‘கறுப்பு’ எனப் பல நூல்களின் பதிப்பாசிரியர்; தொகுப்பாளர். இந்த நூல்களும் ஒரு வகையில் மாற்றுப் பிரதிகள்தான். விளிம்பு நிலை மனிதர்களின்  பிரச்சினைகள், ஒடுக்கப்பட்டோரின் குரல், விடுதலைக்கான முனைப்புக் கொண்டவை என அமைந்தவை. இப்படியான ஒருவரின் முழுக்கதைத் தொகுதியைப் பற்றிச் சமகாலத்தில் விரிவாகப் பேசுவது அவசியமாகும்

சமகாலப்பரப்பில் அல்லது தமிழ் இலக்கியத்தில் ஷோபாசக்தியின் இடமென்ன? என்பதை நாம் சற்று விரிவாக நோக்கலாம்.

தான் வாழும் காலத்திலும் சூழலிலும் நிகழ்ந்தவற்றையும் நிகழ்வனவற்றையும் பற்றியே அதிகமாக எழுதுகிறார் ஷோபாசக்தி. ஒரு சாட்சியாக, எதிர்ப்பாளராக, நீதியுணர்ச்சியுடையவராக, ஜனநாயகவாதியாக, சர்வதேசியாக எனத் தன்னை உருவகித்துக் கொண்ட அடிப்படையில் இதை அவர் செய்கிறார்.

தாம் வாழும் காலத்திலும் சூழலிலும் நிகழ்ந்தவற்றையும் நிகழ்வனவற்றையும் இலக்கியமாகப் படைப்பது பொதுவாகவே நிகழ்வது. அதில் தமக்கான தேர்வுப் பரப்பை ஒவ்வொரு படைப்பாளியும் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதுதான் அவர்களுடைய அரசியலாகவும் படைப்பின் வழியான அடையாளமாகவும் உருவாகிறது. அவர்கள் எதிர்கொள்ள நேர்கின்ற எதிர்ப்பும் – பாதுகாப்பும் இதற்குள் அமைகிறது. இப்படிச் செய்யும்போது அங்கே ஒரு வகையான ஆவணமாக்கல் நிகழ்கிறது. இதை வரலாற்றின் சாரமாகவோ புள்ளிகளாகவோ கொள்ளலாம். ஒப்பீட்டளவில் இதில் ஓரளவுக்குச் சவால்கள் குறைவு. என்பதால் பாதுகாப்புண்டு.

ஆனால், இதில் பேசக் கடினமான, பலரும் பேசத் தயங்குகின்ற விடயங்களைப் பேசுவது சற்று வேறானது. அதுவே கலகக் குரலாகும்; மாற்று இலக்கியமாகும். அதைச் செய்வோர் குறைவு. அதற்கு கடுமையான Risk ஐ எடுக்க வேண்டும். அதிலும் சமகாலத்தை எழுதுவதென்பது அந்தக் காலத்துச் சக்திகளுடன் மோதுவதாகும். ஏனெனில் –

  1. சமகாலம் என்பது நிகழும் அதிகாரத்தைக் கொண்டது. நிகழும் அதிகாரம் என்பது வலுவானது. பிரயோக நிலைக்குரியது. அதாவது நிகழும் கருத்து நிலைகளையும் அதற்கான சமூகக் கட்டமைப்புகளையும் கொண்டிருப்பது. அதற்கும் மேல், அவற்றுக்கான அதிகார அமைப்புகளும் (சக்திகளும்)  ஆட்தொகுதியும் வலுவானதாக  இருக்கும். என்பதால் சமகாலத்தைப் பேசும்போது, உடனடியாக அதற்கு எதிர்ப்பும் எதிர்வினைகளும் உண்டாகும். என்பதால்தான் பல எழுத்தாளர்கள் சமகாலத்தை எழுதுவதை – அதில் இடையீடுகளைச் செய்வதைத் தவிர்த்து விடுகின்றனர். சமகாலத்தைத் துணிவுடன் எழுதுவோர், அதில் இடையீடுகளைச் செய்வோர் அதற்கான விலைகளைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்குத் துணிய வேண்டும்.
  2.  

என்பதால் –

  •  
  • சமகாலத்தைத் தேர்வது என்பது சிரமமானது. அது பெய்யும் மழைக்குப் பெருகியோடும் காட்டாற்று வெள்ளத்தைப்  போன்றது. அடித்துச் செல்லும் வேகமும் கலங்கலும் கொண்டது. உடனடியாக எத்தகைய மதிப்பீட்டுக்கும் வருவது கடினமானது. எனவேதான் கடந்த காலத்தைப் பற்றிய மதிப்பீடென்பது ஒப்பீட்டளவில் இலகுவானது என்கிறேன். அது அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை அல்லது நதியை ஒத்தது. அது தெளிந்த நீரோடையைப் போல நிதானம் கொண்டது. ஆகவே சமகாலமானது உள்மறைப்புகளையும் கொதிப்பையும் கொந்தளிப்புகளையும் கொண்டிருப்பதால், அதில் இடையீட்டைச் செய்யும்போது அதற்கான எதிர்வினைகள் – எதிர்விளைவுகள் மிகப் பலமாக – பயங்கரமானதாகவே இருக்கும். சமகாலத்தை எழுதிய பல எழுத்தாளர்களின் படைப்புகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்த சம்பவங்களை நீங்கள் நினைவிற் கொள்ளலாம்.

எனவே மிக உணர்ச்சிகரமான உளநிலைகளைக் கொண்ட தேசியவாதம், இனவாதம், மதவாதம், சாதியவாதம் போன்றவற்றில் சமகால இடையீடுகளைச் சமகாலத்தில் செய்வதென்பது எளிதானதல்ல. இவற்றின் கடந்த காலத்தைக் கூட எளிதில் பேசி விட முடியாது. அப்படிப் பேசினால், அது சொந்தச் சமூகத்திலிருந்தும் நெருங்கிய உறவுகளிலிருந்தும் கூட புறக்கணிப்பையும் நெருக்கடியையும் தரக்கூடியது.   ஷோபாசக்தியின் எழுத்துகள் மாற்று இலக்கியத்தைச் சாரப்படுத்தியவை. என்றால் எதிர்ப்புக் குரலுடையது. இந்த எதிர்ப்புக் குரலை, அதிகாரத்தையும் அந்த அதிகாரம் கட்டமைத்துள்ள  புனிதப்படுத்தல்களையும் எள்ளி நகையாடிச் சிரிப்புக்குரியவையாக்குவது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

06

இலங்கையின் கடந்த முப்பது  ஆண்டுகாலச் (1980 – 2010) சூழல் மனிதர்கள், மனிதர்களாக வாழக் கூடியதாக இருக்கவில்லை. தினமும் கொலைகள் என்றாகியிருந்த காலம். இரத்தத்தையும் கண்ணீரையும் தவிர, மற்றதெல்லாம் உச்சவிலையிலிருந்தன. அதிகார மோதல்களால் மனிதர்களும், மனிதர்கள் உருவாக்கிய அத்தனை விழுமியங்களும் அறமும் இல்லாதொழிக்கப்பட்டது. அவ்வாறானதொரு சூழலில் தன்னுடைய குரலை, மானுட நீதிக்கான ஒரு எழுச்சியாக, அறவுணர்ச்சியோடு முன்வைத்தார் ஷோபாசக்தி. அவருடன் கூடவே அந்தக் காலத்தில் சி. சிவசேகரம், வ.ஐ.ச. ஜெயபாலன், சு.வில்வரெத்தினம், மு. பொ, சேரன், சுகன், சக்கரவர்த்தி, ஜோர்ஜ் குருஷேவ், கற்சுறா, கலைச்செல்வன், திருமாவளவன், செழியன், நட்சத்திரன் செவ்விந்தியன், தமயந்தி, செழியன் உட்பட வேறு சிலரும் இவ்வாறு எழுத்தியக்கத்தில், மாற்றுக் குரலாளர்களாகத் தீவிரமாக ஈடுபட்டதுண்டு. ஆனாலும் அதில் சற்றும் தளராத விக்கிரமதாதித்தனாக இருப்பவர்கள்  ஷோபாசக்தியும் சிவசேகரமுமே. புனைவில் ஷோபாசக்தியும் கவிதையில் சிவசேகரமும் முதன்மையாளர்கள். சுகன், சக்கரவர்த்தி, ஜோர்ஜ் குருஷேவ், கற்சுறா, நட்சத்திரன் செவ்விந்தியன், செழியன்  போன்றோர் புலிகளின் மீதான எதிர்ப்பையே அதிகமாக முதன்மைப்படுத்தினர். சிவசேகரமும் ஷோபாசக்தியும் அனைத்து ஜனநாயக மீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் சமரசமின்றி எதிர்ப்பிலக்கியத்திற்குள் கொண்டு வந்தனர். அதைத் தங்களுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டனர். அடுத்த நிலையில் மு.பொ, சேரன், வ.ஐ.ச ஜெயபாலன் போன்றோரைக் குறிப்பிடலாம். பின்னாளில் ஜெயபாலன் புலிகளின் பக்கமாகச் சாய்வு கொண்டு விட்டார். சிவசேகரமும் ஷோபாசக்தியும் தொடர்ந்தும் எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டுமிருப்பது இன்னொரு சிறப்பாகும். இது கடினமானது. ஏனென்றால், கால நீட்சியில் சூழல் மாற்றம், அரசியற் நோக்கிலும் இலக்கியப் போக்கிலும் ஏற்படும். அதை உள்வாங்கி, நிலை பிறழாமல் தொடர்ந்தும் சீரான போக்கில் இயங்குவது எளிதல்ல. அதற்கான விலைகளைக் கொடுக்க வேண்டும். ஷோபாசக்தி ஆரம்பத்தில் எதிர்கொள்ள நேரிட்ட நெருக்கடிகளும் அழுத்தங்களும் இதை உணர்த்தும். நின்று பிடித்தபடியால்தான் இன்று அவரால் தனித்த அடையாளமாக, புறக்கணிக்கவே முடியாததாக மாற முடிந்திருக்கிறது. புனைவுகளில் அவர் நிகழ்த்திய பயில்கையும் பரிசோதனைகளும் அவரை ஏற்க வைத்தது இன்னொரு காரணமாகும். இரண்டும் இணைந்து தமிழின் மகத்தான கதைஞராக ஷோபாசக்தியை அடையாளப்படுத்தியுள்ளன. சமகால எழுத்தாளர்களில் – சமகாலத்தை எழுதுவோரில் முதன்மையாளராக்கியுள்ளது.

07

தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் ஒரு வகை. அது அந்த நிலப்பகுதிகளின், அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சவால்கள், பண்பாட்டுச் சிக்கல்கள், அங்குள்ள சமூக அமைப்பின் பிரச்சினைகள், அங்கே நிலவும் அரசியல் அதிகார மோதல்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றது. புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, மௌனி, ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், ஆ.மாதவன், கந்தர்வன், பிரபஞ்சன், பாமா, திலகவதி, அசோகமித்திரன், பா. செயப்பிரகாசம், ராஜேந்திரசோழன், பூமணி, ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஸ்ணன், கோணங்கி, அம்பை, வெண்ணிலாஈ நாஞ்சில் நாடன், தோப்பில் முகமதுமீரான்  எனப் பல நூறுபேர் வெவ்வேறு பிராந்தியங்களைத் தங்களுடைய புனைவுப் பரப்பினுள் கொண்டு வந்தாலும் – வெளிப்படுத்தினாலும் – அவை ஈழ இலக்கியத்திலிருந்து வேறுபட்டவை. மொழியும் திணைகளும் அயலும் ஒன்றாக இருந்தாலும் இரண்டு தளங்களுக்குமான அரசியல் சூழலும் சமூக அமைப்புகளும் வேறு. என்பதால் இவை இரண்டு நிலவழித் தேச இலக்கியத்தையும் நிறத்திலும் குணத்திலும் துல்லியமாக வேறுபடுத்தி விடுகின்றன. இன்னொன்று புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் எழுத்துகள். இவை உள்ளெடுத்திருக்கும் அரசியல் மற்றும் பண்பாட்டு மோதுகை இன்னொரு மாற்றுச் சூழலை தமிழ் மனதால் அறிய விளையும் இலக்கியமாகும்.

சமகால ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஒரு கூறு ஈழ விடுதலைப்போராட்டத்தின் நிழலாட்டமாகவும் கொதிப்பாகவும் உள்ளது. இதில் புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் எழுத்துகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் (1970, 1980 களில்) அரச பயங்கரவாத்த்தை எதிர்த்த, விடுதலைப்போராட்டத்தை ஆதரித்த அல்லது வலியுறுத்திய எழுத்துகள் அதிகமான வெளிப்பட்டன. 1980 களின் நடுப்பகுதியிலிருந்து இவ்வாறிருந்த போக்கு மாறியது. விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேலாதிக்கப் போக்கும் அதுவரையான அரசியல், இலக்கியச் செல்நெறியில் உடைப்பையும் மாற்றத்தையும் உண்டாக்கின. கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ இதற்கான சான்றுப் பிரதி. அதற்குப்பிறகு ஒரு பிரிவினர் ஜனநாயக மறுப்புகளுக்கான குரலாக – எதிர்ப்பிலக்கியமாக – தம்மையும் தமது இலக்கியத்தையும் கொண்டனர். இன்னொரு கூறு மலையக, முஸ்லிம் தரப்பினரின் அடையாள இலக்கியமாகத் தொழிற்படுகிறது. இன்னொன்று புலம்பெயர் வாழ்வுச் சிக்கல்களையும் அந்த அனுபவங்களையும் சாரப்படுத்திப் பேசுகிறது. மலேசிய, சிங்கப்பூர் இலக்கியம் இன்னொரு தன்மையுடையது. இப்படிப் பன்முகத் தன்மையோடிருக்கும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் தூக்கலாக, பொதுமைப்படுத்தக் கடினமான அடையாளங்களோடு சில எழுத்தாளர்களின் படைப்புகள் இருப்பதைக் காண்கிறோம். அதில் ஒருவர் ஷோபாசக்தி.

தொகுத்துச் சொன்னால், ஈழப்போராட்டம், போர், இலங்கை அரசியல், ஈழத்தமிழரின் புலப்பெயர்வு, புலம்பெயர்ந்தோரின் வாழ்வு, உலகளாவிய அகதி நிலை, அகதிகளைப் பற்றிய மேற்குலகத்தின் அக்கறையும் அணுகுமுறையும், விளிம்பு நிலை மாந்தர்களின் பிரச்சினைகள், புலம்பெயரிகளின் வரலாற்றுத் துயர், அவலப்படும் மனிதர்களுடைய நிலைமை போன்ற பெரும்பரப்பின் சித்திரத்தையெல்லாம்  தொடர்ந்து கவனப்படுத்தி எழுதுவதன் மூலம் முன்னிலைப்படுகிறார் ஷோபாசக்தி. இன்னும் அழுத்தமாகச்  சொல்வதெனில், ஈழத்தமிழ்ப் படைப்பாளியாகவும் சர்வதேச எழுத்தாளராகவும் இரு நிலைகளில் ஷோபாசக்தி உள்ளார் எனலாம். இந்தச் சிறப்பு அடையாளமே ஷோபாசக்தியை சினிமா, நாடகம் எனப் பிற துறைகளிலும் சிறப்பாக அடையாளம் காண வைத்தது. மட்டுமல்ல, அவருக்குச் சர்வதேச வாய்ப்புகளையும் அளித்தது. சிலர் இதை மறுத்து, ‘ஷோபாசக்தி, ‘புலிஎதிர்ப்பு இலக்கியம்’ படைக்கிறார். குறிப்பாக ஈழப்போராட்டத்தைப்பற்றிய ஒரு கோணத்தை மட்டுமே எடுத்தாள்கிறார். தனக்கு உவப்பில்லாததை மறுக்கிறார் – மறைக்கிறார் என்று குறுக்கிச் சொல்லக் கூடும். அது தவறு. அதேவேளை, ‘இதற்கு மறுபக்கமும் உண்டு. அது ஈழவிடுதலைப்போராட்டத்தின் வீரமும் தியாகமும் இணைந்த இன்னொரு பக்கம்’ என்று அவர்கள் கூறலாம் – வாதிடலாம். அவர்கள், அந்தப் போராட்டத்தில் நடந்த அல்லது நிகழ்த்தப்பட்ட ஜனநாயக மறுப்பைப் பற்றியோ மக்கள் விரோதச் செயற்பாடுகளைப் பற்றியோ ஒரு சொல் எழுதுவதில்லை; பேசுவதில்லை. என்பதால் சார்பிலக்கியவாதிகளாவே (கட்சி ஆட்களைப்போல) சுருங்கிக் கொள்கிறார்கள். அது அவர்களுடைய அரசியல் நிலைப்பாடும் (சார்பும்) இலக்கிய விருப்புமாகும். ஆனால், அவர்களும் இன்னொரு கோணத்தை அல்லது சில கோணங்களை தவிர்த்திருக்கிறார்கள்; தவிர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாப் பக்கத்தின் மீதும் ஒளி சுவறுவதை அவர்கள் விரும்புவதில்லை. அப்படி எல்லாப் பக்கமும் ஒளி படரும்போது தெரியும் (அவர்களுக்கு விருப்பமற்ற – அவர்கள் மறைக்க விரும்பும்)  காட்சிகள் அவர்களைச் சங்கடப்படுத்தும் என்று அச்சமடைகிறார்கள்.  என்பதால் அவர்கள் தாம் நிற்கும் புள்ளியிலிருந்து தமது விருப்பத்துக்கும் வாய்ப்புக்கும் ஏற்றமாதிரித்  தேர்ந்தெடுக்கப்பட்ட கூறுகளை மட்டும் பார்க்கிறார்கள். அதையே காட்ட விளைகின்றனர். இதனால், ஜனநாயக விரோதத்தைப் பின்பற்றுவோராக மாறுகின்றனர். இதற்கு அவர்கள் தேர்வு செய்திருக்கும் அரசியல் ஈர்ப்பும் விருப்புமே காரணமாகும். உதாரணம், தீபச்செல்வன், அ. இரவி வகையறாக்கள்.

ஆனால், இலக்கியமொன்றும் நிறுதிட்டான வரலாற்று ஆவணமில்லை. வரலாற்றைத் தொட்டும் இடையறுத்தும் நிகழும் பகடையாட்டமே அது. ஷோபாசக்தி தன்னுடைய விதிகளின்படி தன்னுடைய கதைகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அதில் போராளி இயக்கங்கள் மட்டுமல்ல, இலங்கை அரசு தொடக்கம், அவர் புகலிடம் தேடியிருக்கும் பிரெஞ்சு அரசையும் மேற்குலக நடைமுறைகளையும் விமர்சிக்கிறார். உண்மைக்கும் நியாயத்துக்கும் நீதிக்கும் எதிரான நிலைப்பாட்டினைக் கலைப்படுத்தும் இந்த விரிபரப்பே இங்கே கவனத்திற்குரியது.

இத்தகைய இலக்கிய உருவாக்கத்தை அல்லது போக்கை, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க, குர்டிஸ் இலக்கியத்திலும் நாம் காண முடியும். விடுதலைக்கான அவசியத்தையும் ஒடுக்குமுறைகளின் கொடூரத்தையும் எழுதுவதோடு, போராட்டச் சக்திகளின் அகப் பிராந்தியத்தில் நிகழும் – நிகழ்த்தப்படும் – ஜனநாயக மறுப்பையும் உரத்துப் பேசும் குரலைக் கொண்டிருப்பது இது. இதனால் ஒரு வகையில் இதொரு இலக்கிய சாட்சியமாகவும் அமைகிறது. சாட்சியத்துக்கு எப்பொழுதும் மதிப்புண்டு. அது உண்மையைத் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் ஏந்தி நிற்பதால், அதற்கு இந்தச் சிறப்புண்டு. என்பதால் ஷோபாசக்தி போன்றவர்களை உலகெங்கும் – வரலாறெங்குமுள்ள நெருக்கடிச் சூழலில் காணலாம். இவர்கள்

வரலாற்றில் இயக்கமுறும் இடம், காலம், மனிதர்கள், சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் ஆகிய நான்கு தரப்பையும் இணைத்துப் புனைவாக்கம் செய்வதில் வல்லவர்கள். இதைச் சிறப்பான முறையில் கையாள்கிறார் ஷோபாசக்தியும். இதில் அவர் வல்லவர் மட்டுமல்ல, இவற்றின் ஒளிப்பகுதியிலும் இருண்ட  நிழற்பகுதியிலும் ஒளியைப் பாய்ச்சிக் காட்ட விழைகின்றவர் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது இருளில் நிகழும் – நிகழ்த்தப்படும்  அதீதங்களையும் காண்பிப்பவர் என. இதுதான் ஷோபாசக்தியினுடைய கதைகளின் அடிப்படையும் சிறப்புமாகும். அவருடைய கதைகளின் களம் அல்லது கவனம் என்பது, ‘சமூகப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும்’ என்ற தீவிர  நிலைப்பாட்டின்படியான தேர்வுப் பரப்பென்பதால் இப்படி அமைகிறது.

இதனால்தான் ஷோபாசக்தியின் கதைகள், ஏதோ ஒரு வரலாற்று நிகழ்ச்சியில் அல்லது வரலாற்று மனிதர்களில் அல்லது வரலாற்றுக் காலத்தில் தொட்டு நிற்க வேண்டியதாகிறது. அவற்றை அழிய விடாமல் பேச விரும்புகின்றன; முயற்சிக்கின்றன. நேர்ச்சுருக்கமாகச் சொன்னால், அவருடைய கதைகள்  அவர் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளோடும் அவரறிந்த சமூக மனிதர்களோடும் அவரோடும் இணைத்துப் பேசப்படுகின்றன. பெரும்பாலான கதைகளில் நாம் அறிந்த இடமும் காலமும் சம்பவங்களும் அவற்றோடிணைந்த மனிதர்களுமே பாத்திரங்களாகி வருகிறார்கள். அதனுடைய அரசியல் நோக்கும் அதுவே. மகிந்த ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா, சந்திரிகா குமாரதுங்க, றோகண விஜேவீர, பிரபாகரன், கருணா போன்ற அரசியற் தலைவர்கள். பாப்லோ நெருடா தொடக்கம் முத்துலிங்கம் வரையான பிரபலங்கள். தன்னுடன் கூடப்படித்த, பழகிய, வேலை செய்த, பயணங்களில் அறிமுகமான மனிதர்கள் அல்லது  ஷோபாசக்தியே ஒரு பாத்திரமாக நிற்கிறார். அவ்வாறே நாம் அறிந்த இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் போன்றவையும் வருகின்றன. சில கதைகளில் புனைவாகவே சில இடங்களை உருவாக்கிக் கொள்வதுமுண்டு. ஆனால், அந்த இடங்கள் கூட நமக்குத் தெரிந்ததைப்போன்ற ஓர் உணர்வை உண்டாக்கும். அப்படித்தான் கதையில் வருகின்ற அல்லது காட்டப்படுகின்ற நிகழ்வுகளும் சம்பவங்களும். குண்டு வீச்சுகள், தண்டனை விதிப்புகள், கொலைகள், இடப்பெயர்வுகள், புலம்பெயர்வின்போது சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தும்.

கதைகளைப் படித்துக்கொண்டு செல்லும்போது, சிலவேளை ஷோபாசக்தியின் தன்வரலாறோ என்று ஒரு எண்ணம் நம்முடைய உளத்தில் எழும். அதிலும் மொத்தத் தொகுப்புக் கதைகளையும் ஒன்றுசேரப் படிக்கும்போது இந்த உணர்வு ஏற்படுவது தவிர்க்கவே முடியாமல் உள்ளது. அதாவது தன்வரறாறு போலவும் சம்பவங்களின் தொகுப்புப் போலவும் ஓருணர்வைத் தருகிறது. சில கதைகளில், நிகழ்வுகளை நேரடியாக விவரிப்பது, ஒரு வகையான அறிக்கையிடல் போன்றுள்ளது (In some stories, directly describing events is like a form of reporting). ஆனால், கதைகளைப் படிக்கும்போது நாம் நன்றாக அறிந்த சங்கதிகள் போல, தகவல் விவரிப்பாக விரிந்து செல்லும் கதைகள், நம்மை அறியாமலே மெல்ல மெல்ல அதிலிருந்து விலகி, கதையம்சம் கொண்டு புனைவாக எழுச்சியடைந்து சிறப்பான கலையாக்கமாகி விடுகின்றன. இதனாற்தான் ‘நீங்கள் அறிந்த செய்திகளையும் படித்த கட்டுரைகளையும் இலக்கியமாக்குகிறேன்’ என அவரால் துணிந்து சொல்ல முடிகிறது. அவற்றை இலக்கியமாகவே படிக்கவும் முடிகிறது.

08

தன்னுடைய இலக்கிய நிலைப்பாட்டைப் பற்றி ஒழிப்பு மறைப்பில்லாமல் வெளிப்படையாகச் ஷோபாசக்தி சொல்வதே தானொரு அரசியல் போராளி என்ற அடிப்படை உணர்விலிருந்தும் அறிவுப் பொறுப்பில் இருந்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்துதான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை உருவாக்கிக் கொள்கிறேன். என்னுடைய அரசியல் பார்வையிலிருந்துதான் என்னுடைய கதைகளைக் கண்டடைகிறேன். ஆம், என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன. என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்..” என்று அவர் சொல்வது இதற்குச் சான்று.

இலக்கியத்தில் அல்லது கலையில் அரசியலுக்குத் தவிர்க்க முடியாத இடமுண்டு என்பவர்களுக்கு ஷோபாசக்தியினுடைய இந்த வாதத்திலும் நிலைப்பாட்டிலும் பிரச்சினையிருக்காது. அரசியல் நிலைப்பாட்டில் வேறுபட்டு நின்றாலும் இந்தக் கருத்தில் அவர்கள் உடன்படுவர். ‘கலையையும் இலக்கியத்தையும் அரசியல் பாழ்படுத்தி விடும் – பாழாக்கிக் கொண்டிருக்கிறது’ என்ற கருத்துடையோருக்கு ஷோபாசக்தியின் இந்த வார்த்தைகள் பதட்டத்தை உண்டாக்கக் கூடியன. அவர்கள், ‘அரசியல் வேறு. கலையும் இலக்கியமும் வேறு’ என்ற கருத்துறுதியுடன் இருப்பவர்கள். ‘கலை, இலக்கியத்தினுடைய ஆதாரசுருதி அழகியலே, அழகியலின் வழியான ரசனையே’ என்று வியாக்கியானம் செய்வோர். இந்த வழியிலேயே அவர்களுக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் அதிகம். அது அவர்களுக்குச் சற்றுச் சௌகரியமானதும் கூட. இந்தப் பக்கமும் சாராமல் அந்தப் பக்கத்துக்கும் நோகாமல் இருந்து விடலாம் அல்லவா! இதைக் கூடச் ஷோபாசக்தி ஒரு நேர்காணலில் பகடி செய்கிறார், ‘நான் என்ன இறைதூதரா வானிலிருந்து அருள்வாக்கோ அசரீரியோ பெற்றுச் சுளுவாக எழுதிவிடுவதற்கு. இலக்கிய உள்ளொளி, தரிசனம் போன்றவையும் எனக்கு வசப்படாதவையே. எனவே என் எல்லா நாவல்களையும் வலிந்தே எழுதினேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். தஸ்தயேவ்ஸ்கி கூட இப்படி வலிந்தும் அச்சத்தோடும் தன்னம்பிக்கையின்றியும்தான் ‘அசடன்’ நாவலை உருவாக்கினார் எனப் படித்திருக்கிறேன். அவரது அந்தப் புலம்பலைக் குறிப்பிட்டுத்தான் எனது ‘இச்சா’ நாவலைத் தொடங்கியிருந்தேன்’  என்று.

அவர்களுடைய அந்தப் பதட்டத்தைத் தன்னுடைய வெளிப்பாட்டுத் திறனாலும் (Expressiveness) – ஆக்கத்திறனாலும் (Creativity) கலையாக்கத்தினாலும் (Artistry) நீக்கி விடுகிறார் ஷோபாசக்தி. ‘யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும் செய்திகளாகக் கட்டுரைகளாகப் பதிவாகியிருக்கிறது. அதை இலக்கியமாக்கியிருக்கிறேன்’ எனச் சாதாரணமாக ஷோபாசக்தி சொன்னாலும் அவற்றில் சிறப்பான கலை வெற்றிகளைச் சாதித்து விடுகிறார். கலையாடி தானும் உருக்கொண்டு, தன்முன்னே இருப்போரையும் உருவேற்றும் ஆற்றலைக் கொண்டிருப்பார். (இங்கே மதநிலைப்பட்டு இதைச் சொல்லவில்லை நான்) அத்தகைய ஒரு தன்மையாக இதை உணரலாம். இதுதான் ஏனையவர்களிடமிருந்து ஷோபாசக்தி வேறாகத் தெரிகின்ற இடமும் விதமுமாகும்.

அரசியலை இலக்கியத்தில், கலையில் பேசலாம் என்பது மட்டுமல்ல, பேசியே ஆக வேண்டும். ஆனால், அதைப் பேசுவதற்குரிய கலையை, கலையின் நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். அதில் செம்மையேற்பை ஏற்படுத்த வேண்டும். புதுமைகளை உண்டாக்க வேண்டும். நேரடியாக அரசியல் காண மறுக்கின்ற தரிசனத்தை, அரசியல் உணர்த்த மறுக்கின்ற உண்மையை இலக்கியமும் கலையும் உணர்த்த வேண்டும். அப்படி அமைந்தால்தான் அரசியலினால் ஏற்படுத்த முடியாத பகுதியை – இன்னொரு பிராந்தியத்தை – இலக்கியமும் கலையும் நிரப்பும். ஷோபாசக்தி பச்சையாகவே அரசியலைப் பேசுகிறார். அவரிடம் அரசியல் இல்லாத ஒரு கதை கூட இல்லை. ஏன் ஒரு சொல் கூட இல்லை. ஆனால், அதை நாம் உணராதவாறு தன்னுடைய கலை நுட்பத்தினால், கலையாற்றலினால் வென்று சாதித்து விடுகிறார். ஷோபாசக்தியைப்போலவே தீவிர நிலையில் வெளிக் கிளம்பியவர் சக்கரவர்த்தி. ஆனால், ஏனோ அவர் அதை வீச்சுடன் தொடராமல் இடைநின்று விட்டார். அதொரு இழப்பே.

வெளிப்படையாகவே அரசியலை, அந்த அரசியலில் நிகழ்ந்தவற்றையும் நிகழ்கின்றவற்றையும் தன்னுடைய நோக்கு நிலையிலிருந்து எழுதினாலும் அவற்றை எவரும் புறக்கணிக்க முடியாத அளவுக்குக் கலையாக்கமாக்கி விடுவதால், ஷோபாசக்தியின் அரசியல் வார்த்தைகளைக் குறித்து ‘இலக்கியத்தை அரசியல் பாழ்படுத்தி விடும்’ என்போரால் மறுத்துரைக்க முடியவில்லை. அவர்களும் ஷோபாசக்தியை ஏற்றுக் கொண்டாட வேண்டிய விதியாகியுள்ளது. ஷோபாசக்தியின் அரசியலை ஏற்க முடியாமல் மறுப்பவர்கள், ஷோபாசக்தியின் கதைகளை நிராகரிக்காமல் வாசிக்கும் நியாயம் இதுதான். இந்த நுட்பத்திறனால்தான் இவற்றை வெறும் வரலாற்றுக் குறிப்புகளாகவோ, ஆவணத் தரவுகளாகவே, உடன்பாடற்ற பிரதிகளாக இல்லாமல், கதைகளாகக்  கொண்டாடுகிறது நம்முடைய உளமும். இதுவே ஷோபாசக்தி பெற்றுள்ள இலக்கிய அந்தஸ்தாகும்.

தன்னுடைய புனைவை இப்படி வெற்றிகரமாக ஆக்கியளிப்பதன் மூலம் ஒருவகையில் மறைக்கப்படும் வரலாற்றைப் பதிந்து விடும் பணியில் போராளிக்கு உரிய சிறப்புடன் நிற்கிறார் ஷோபாசக்தி. அந்த வரலாற்றுப் பதிவு என்பது வழமையான முறையில் அதிகாரத் தரப்புகளாலும் அவற்றைச் சார்ந்திருப்போராலும் கட்டமைக்கப்படும் வரலாறு அல்ல. அதற்கு மாறான – எதிரான – மறைக்கப்பட்ட வரலாறு. உலகெங்கும் வரலாறு எங்கும் நவீன இலக்கியம் இப்படித்தான் உள்ளது. ஒடுக்கப்பட்டோரின் மறைக்கப்படும் உண்மைகளாகவும் விழுமியங்களாகவும் மக்களுக்கு விரோதமான சக்திகளின் கொடுஞ்செயல்களை பகிரங்கப்படுத்துவதாகவும். ஆபிரிக்க இலக்கியத்தின் பெருங்குணம் இதுவே. இப்படிப் பதிவு செய்யும்போது அது வெறுமனே பதிவாக அல்லாமல், சமாந்தரமாக வரலாற்றை விசாரணைக்குட்படுத்தியதாகவும் அமைகிறது. இது முக்கியமான ஒன்று. இந்த விசாரணைதான் ஷோபாசக்தியின் அடுத்த வெற்றியாகும். பாதிக்கப்பட்ட சனங்களின் உணர்வையும் குரலையும் ஏந்தியொலிக்கும் சாட்சிக் குருவியாக இருப்பது. அதுவே அவர் மீதான தீராத கவர்ச்சியும். எல்லாவற்றையும் விசாரணை செய்வது. ஆம், ஒரு மாற்று விசாரணைக் கமிஷனாக.

வரலாற்றை கேள்விக்குட்படுத்தி, விசாரணை செய்யும்போது சமூக வெளியில் உருவாக்கப்பட்டிருக்கும் அல்லது நிலைபெற்றிருக்கும் இயக்கம், அரசு, கட்சி, அதிகாரம், தலைமை, பண்பாடு, மதம் போன்றவற்றைப் பற்றிய கற்பிதங்கள், புனிதங்கள், வரையறைகள், நம்பிக்கைகள், விசுவாசங்கள் எல்லாம் தகர்கின்றன. வரலாற்றின் மீது நிகழ்த்தப்படும் இடையீட்டின் – விசாரணையின் – சிறப்பே இதுதான். பின்நவீனத்துவப் புரிதலில் இதை இன்னும் இலகுவாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள முடியும். அதிகாரத் தரப்புகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றினால் மறைக்கப்படும் வரலாற்றுக்குப் பதிலாக, மாற்றான – உண்மையான – புறக்கணிக்கப்படும் –  வரலாற்றை நிறுத்துவது. இதுதான் மக்கள் யுகத்தின் – பின்நவீனத்துவத்தின் – வரலாற்றுப் பணியும் பண்புமாகும். இதற்கு ஷோபாசக்தியின் கதைகளில் ஒன்றான ‘மிக உள்ளக விசாரணை’ யை இங்கே உதாரணமாக வைக்க முடியும்.

ஷோபாசக்தி பிறந்து வளர்ந்த கிராமமான அல்லைப்பிட்டி – மண்டைதீவுப் பகுதியில் 1990 இல் இலங்கைப் படையினரால் படுகொலைசெய்யப்பட்டோரைப் பற்றிய நீதி விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கும் கதை இது. இதில் கொல்லப்பட்டவர்கள்  எல்லோரையும் ‘பயங்கரவாதிகள்’ என்கிறது இலங்கை அரசு. “இல்லை அது பொதுமக்களே“ என்கிறார் ஷோபாசக்தி. (இதைக்குறித்து ஷோபாசக்தியினால் எழுதப்பட்ட இன்னொரு நூல் ‘1990 லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்‘) சாதாரணமக்களே கொல்லப்பட்டனர் என்று அங்குள்ள மக்கள் மற்றும் தமிழ்ப்பத்திரிகைகள் தொடக்கம் தமிழ் அரசியற்தரப்பினர் வரை ஏற்கனவே பல தரப்புகளாலும் நிரூபிக்கப்பட்டதே இந்தக் கொலைகள்.

இதனால் எழுந்திருக்கும் நெருக்கடிக்குப் பதிலளிப்பதற்காக, இந்தமாதிரியான கொலைகளை, வெளித்தரப்பின் – சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் விசாரணைகளால் அல்ல.  ‘உள்ளக விசாரணை‘ மூலமே கண்டறியலாம். இவ்வாறான சம்பவங்களில் ‘நடந்தவை என்ன?’ என்று அறிவதற்கு உள்ளக விசாரணைக்கு அரசாங்கம் உடன்படுகிறது’ என்று இலங்கை அரசு தந்திரமான முறையில் பம்மாத்துப் பண்ண முயற்சிக்கிறது. அதாவது கொலையாளியே விசாரணையாளராகவும் நீதி வழங்குநராகவும் இருப்பதாக. இந்த ‘உண்மை மறைப்பு முயற்சி’யைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், சமகாலத்திற்கான அரசியல் எதிர்ப்பை மட்டுமல்ல, இந்தக் குற்றமறைப்பை வரலாற்றில் அழிக்கவே முடியாத அளவுக்கு நிலைபெறச் செய்தும் விடுகிறார் ஷோபாசக்தி. மட்டுமல்ல, நீதிமன்றங்கள் என்பது நீதியை நிலைநாட்டுவதற்கா அல்லது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கா? உண்மையின் மெய்யான தன்மை என்ன? நீதியின் போலித்தனம் எப்படியாக உள்ளது? சமாதானத்திற்கான விலை என்பது உண்மையை அடக்கி வைப்பதன் மூலம் கட்டப்படுவதா? சமாதானம் உண்மையிலேயே சமாதானம்தானா?  அது ஒரு ஏமாற்று வித்தையா? பொறியா? போன்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்படுகின்றன.  

இந்தக் கதையில் மட்டுமல்ல, ஷோபாசக்தியின் வேறு கதைகளிலும் கூட, நிலைமாறு காலகட்டத்திற்குரியதாக வலியுறுத்தப்படும் உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக் கூறல், நீதி வழங்கல் போன்றவற்றையெல்லாம் இலங்கை அரசு எப்படித் தந்திரோபாயமாக விலக்கி விட முயற்சிக்கிறது என்பது கேலிப்படுத்திச் சொல்லப்படுகிறது. உண்மைக்கும் நீதிக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் சவால்களையும் அவற்றினுடைய இன்றைய தாற்பரியத்தையும் விளக்கப்படுகிறது. இதைப் பல நூறு கட்டுரைகளாகவோ அல்லது அறிக்கையாகவோ புள்ளி விவரங்களோடும் ஆதாரத் தரவுகள், ஒளிப்படங்கள், வாக்குமூலச் சாட்சியங்களோடும் முன்னிறுத்த முடியும். ஆனால், அதெல்லாம் உறங்கும் அறிக்கைகளாகவே விரைவில் ஆகிவிடும். அப்படிப் பெறுமானமற்று உறங்கும் அறிக்கைகள் உலகம் முழுவதிலும் பல கோடியுண்டு. மாறாக அவை இவ்வாறு இலக்கியமாக்கப்பட்டால், அவற்றை ஒருபோதும் நிராகரிப்புச் செய்ய முடியாது. அது உறைய முடியாத இரத்தமாக, அணைக்க முடியாத நெருப்பாக சூட்டோடு எப்போதுமிருக்கும். அதனுடைய பரிமாணமும் வேறாகி விடும். மட்டுமல்ல, அது காலத்தைக் கடந்து, நிலங்களையும் சமூகங்களையும் கடந்து பல திசைகளிலும் பயணிக்கும். அது இந்தக் கதைகளிலும் நிகழத தொடங்கியுள்ளது. இலக்கியத்தினதும் கலையினதும் ஆற்றலும் சிறப்பும் இதுவாகும். என்பதால், தன்னுடைய கதைகள் அரசியல் ரீதியானவை. சற்றுப் பெரிய துண்டுப் பிரசுரங்கள்தான் என்று ஷோபாசக்தி உரத்துச் சொன்னதற்கு அமைய, அரசியல் வீரியம் கொண்ட இலக்கியப் பிரதிகளாக வளர்ச்சியடைந்துள்ளன.

எனவே இலங்கை அரசின் ‘உள்ளக விசாரணை’ என்ற பிடிவாதத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கூர்மையான இலக்கிய விமர்சனம் – இலக்கியக் கலகம் – இத்தகைய கதைகள் மூலம் வலுவாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அரசியற் கட்சிகளையும் சக்திகளையும் அரசு ஏய்க்கலாம். இலக்கியப் பிரதியின் மீதும் இலக்கியப்படைப்பாளியின் மீதும் ஏய்ப்புக் காட்ட முடியாது. இதன் மூலம் ஷோபாசக்தி ஒரு தீவிரமான எதிர்ப்புச் சக்தியாளராக (போராளியாக) மாறி நிற்கிறார். அவர் முன்வைக்கும் இந்த விமர்சனம், இந்தக் கலகம், எள்ளலின் மூலமாக அரசாங்கத்தைப் பரிகசித்தல் எல்லாம் உலகத்தின் மனச்சாட்சியைக் கேள்விக்குள்ளாக்கிக் கேலிசெய்கிறது; கலக்கமடைய வைக்கிறது. இங்கே உலகம் என்பது முதன்மையாக அதிகாரத் தரப்புகளேயாகும். கூடவே மந்தைத் தனமாகச் சிந்திக்கும் மனிதர்களையும் கூட உள்ளக்குகிறது. இவர்களே தங்களுடைய சிந்தனைக்குறைபாட்டினால் அதிகாரத்தைப் பலமடைய வைக்கிறார்கள். மோசமான தரப்புகளுக்கு அதிகாரமூட்டுகிறார்கள்.

இந்த வகையில் மேலும் சில எடுத்துக் காட்டைச் சொல்ல  ‘ஆறாங்குழி’ என்ற இன்னொரு கதை. இது 1970 களின் முற்பகுதியிலும் 1987 – 1989 லும் இலங்கையில் ஆயுதரப்புரட்சியை நடத்திய ஜே.வி.பியின் தலைவர் றோகண விஜேவீர கொல்லப்பட்டதைப்பற்றியது. நிகழ்வில் நேரடியாக பங்கேற்ற ஒருவரின் கண்ணோட்டமாக, கதாநாயகன் யக்கடயாவின் (இரும்பு மனிதனின்) வாய்மொழியில், ‘உண்மையான’ சம்பவம் வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் அரசு மூலமாக அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பதிப்பிற்கு  முற்றிலும் மாறுபட்ட ஒரு உண்மைப் பிரதி நமக்குக் கிடைக்கிறது. வரலாற்றில் மறைந்திருக்கும் குரூரமான, குழறுபடியான மற்றும் கட்டுக்கதையான பொய்களை விலக்கி, உண்மையை வெளிக்கொணர்கிறது இந்தக் கதை.

கதையில், குற்ற உணர்ச்சி, நியாயப்படுத்தல் மற்றும் மனச்சாட்சியினால் ஏற்படும் துயருறு நிலை (Distress) அல்லது உளநெருக்கடி (Mental distress) போன்றவை வலிமையோடு பேசப்படுகின்றன.

‘யக்கடயா’ என்றால் இரும்பு மனிதன். அவ்வாறான உறுதியான ஒரு இராணுவ வீரர். ஆனால் ரகசியமாக அரசுக்கு எதிரான ஜே.வி.பி. இயக்கத்தின் அனுதாபியாக இருக்கிறார். இந்த இரட்டை நிலை அவருக்கு மன அழுத்தத்தையும் தனிமையையும் தருகிறது. தவிர்க்க முடியாமல், தான் விரும்பிய இயக்கத்தின் தலைவரை (றோகணவை) அவரே கொல்ல நேர்கிறது. பிறகு, கடந்த காலத்தில் அவர் செய்த கொடூர செயல்களை நினைவுகூர்வதும், அவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலும் அந்த இரும்பு மனிதரை (இராணுவ வீரரை) ஒரு குற்றவுணர்ச்சியும் உள நெருக்கடியும் உள்ளவராக்கி விடுகிறது. அதனால் படையை விட்டு விலகித் தப்பிச் சென்று விடுகிறார்.   

இத்தகைய பாத்திரங்கள் வரலாறு முழுவதிலும் பல இடங்களிலும் உண்டு. சூழ்நிலையினால் தமக்கு உடன்பாடில்லாத அமைப்பில் சிக்கியிருப்பார்கள். அவர்களுடைய உளநிலை வேறாகவும் இருப்பும் செயற்பாடும் வேறாகவும் இருக்கும். இருப்பும் புறச்செயற்பாடுகளுமே வெளிப்பரப்பில் அடையாளமாகும். உளமோ  தீராத குற்றவுணர்ச்சியில் புளுங்கிக் கொண்டிருக்கும். இதெல்லாம்  சிறப்பான முறையில் இந்தக் கதையில் வெளிப்படுத்தப்படுகிறது. ஷோபாசக்தியே இதற்கு உதாரணமான ஒரு பாத்திரம்தான்.

ஒரு சூழலில் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அன்ரனிதாசன், அகநிலையில் ஏற்பட்ட மாறுதலான – முரண்பாடான எண்ணங்களினால், அரசியல் விழிப்பினால், அதிலிருந்து வெளியேறுகிறார். வெளியேறியது மட்டுமல்ல, யக்கடயாவைப்போல இன்னொரு நிலையில் உண்மைகளை – மறைக்கப்பட்ட – புனையப்பட்ட – கதைகளை உடைத்துப் பேசத் தொடங்கிய ஷோபாசக்தியாகியிருக்கிறார்.

இந்தக் கதையின் உண்மைப் பதிப்பையொத்த விவரிப்புடன் கூடிய கட்டுரை ஒன்றை என். சரவணன் 1997 நவம்பரில் ‘சரிநிகர்’ பத்திரிகையில் எழுதியிருந்தார். பின்னர், அதில் சில புதிய விடயங்களைச் சேர்த்து தன்னுடைய ‘நமது மலையகம்’ (www.namathumalayagam.com) என்ற தளத்தில் எழுதிப் பதிவிட்டுள்ளார். ஆனால், அது தகவல்களைப் பரிமாறும் கட்டுரை மட்டுமே. ‘ஆறாங்குழி’யில் அது முற்றிலும் மாறுதலடைந்து, அவ்வளவும் கதையாக – கலையாக – உருப்பெற்றுள்ளன. இதுதான் எழுத்துக் கலைஞரின் சிறப்பாகும்.  

வேறொன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் பாலியல் வன்முறை பற்றியது (கருங்குயில்).

நெருடா, சிலி நாட்டிற்கான தூதராக இலங்கையில் தங்கியிருந்த 1920 அல்லது 1930 களில் நிகழ்கிறது கதை. அப்போதிருந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைகள், பொருளாதாரப் பற்றாக்குறை, சமூகத்தில் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு மனப்பான்மை ஆகியவை வலுவாக சித்தரிக்கப்படுகின்றன. நெருடாவின் தங்குமிடத்தில் சுத்திகரிப்புப்  பணிப்பெண்ணாக வர நேரும் சம்பங்கியின் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை, அதிகார உறவுகளின் மேல்நிலைச் சக்தியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நெருடாவின் பாலியல் அத்துமீறலைப் பேசி, நெருடாவின் ஒளி மிக்க புகழைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சமவேளையில் சம்பங்கிக்கு நெருடா இழைத்த அநீதியை பல பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் இலக்கியத்தின் வழியே உயிர்ப்படைய வைத்து, சம்பங்கிக்கு ஆதரவான தளமொன்றை உருவாக்குகிறார். இந்தக் கதையும் நெருடாவின் நாட்குறிப்பில் உள்ள பதிவு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு வெளியான தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான். ஆனால், புனைவில் உச்சமடைந்து வெற்றிபெற்றது.

இன்னொன்று – ‘அந்திக் கிறிஸ்து’: பைபிளில் வரும் பிலாத்து, மரியா மற்றும் இயேசு கிறிஸ்து ஆகியோரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரு சர்வாதிகாரத் தனமான சமகால அரசியல் கட்டுக்கதையுடன் கலக்கிறது. பைபிள் கதாபாத்திரங்கள் முற்றிலும் மாறுபட்ட சூழலில் (இலங்கை அரசியல், சிறை, இராணுவ ஆட்சி, காணாமல் போனவர்களின் போராட்டம் போன்றவற்றில்) வைக்கப்படுவதால், அசலான அதிகாரம் கேள்விக்குள்ளாகிறது.

பிலாத்துவின் சிறைவாசமும், மரியாவின் கற்பனைக் காதல் கடிதங்களும் சுவாரசியமானவை. கிறிஸ்துவின் காணாமல் போதலும் ‘உண்மையான’ நிகழ்வுகளின் தன்மையைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. அதிகாரத்தின் பல்வேறு முகங்களைக் கதை ஆராய்ந்து பார்க்கிறது. அரசியல் அதிகாரம் (அதிபர், இராணுவம்), மத அதிகாரம் (மதகுரு), மற்றும் பாலியல் அதிகாரம் எனப் பலதையும்.

ஒரு சர்வாதிகார ஆட்சியில் அரசியல் எதிர்ப்பு, காணாமல் போனவர்கள் மற்றும் மனித உரிமைகள் மீதான அடக்குமுறை போன்ற வலுவான அரசியல் விடயங்களைக் கதையாக – இலக்கிய வெளிப்பாடாக, இலக்கிய அழகியலாக, இலக்கிய அரசியலாகப் பார்க்க முடியும்.

இன்னொன்று, எனக்கு மிகப்பிடித்த கதைகளில் ஒன்றான ‘கண்டிவீரன்’. “ரோஸ்டி” என்ற ஒரு சிறிய, நடைமுறைத் திறனற்ற இயக்கம், தனக்கு மிகவும் பெரியதும் சிக்கலானதுமான ஒரு நபரை (கண்டிவீரன்) கையாள முயல்வதைப் பற்றியது. கொள்கைப் பிடிப்புக்கும், நடைமுறைக் குறைபாடுகளுக்கும் இடையே உள்ள மோதல் (மரண தண்டனை விதிக்கும் தீர்மானம், அதை நிறைவேற்ற துப்பாக்கி / பணம் இல்லாதது (கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி) கதையில் நிகழ்த்தப்படுகிறது. “சமூக விரோதி” என்று குறிப்பிடப்படும் கண்டிவீரன், இறுதியில் அவர்களைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்படுவது வேடிக்கையும் உச்சமான எள்ளலுமாகும்.

ரோஸ்டி இயக்கம், ஆரம்பத்தில் கோட்பாட்டளவில் இறுக்கமான, நடைமுறையில் அனுபவமற்ற, படிப்படியாக தன்னம்பிக்கை இழக்கும் குழுவாக வர்ணிக்கப்படுகிறது. கொள்கைப் பேச்சுக்கும், அதை நடைமுறைப்படுத்தும் திறனுக்கும் இடையேயான பெரும் இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது கதை. கண்டிவீரன் (காந்திராஜன்)  ஆரம்பத்தில் ஒரு சமூக விரோதியாக அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக அவனது திறமைகள், புத்திசாலித்தனம், மற்றும் ஒரு விசித்திரமான நேர்மையும் கொண்ட சிக்கலான பாத்திரமாக வளர்க்கப்படுகிறான். சிறையில் இருந்து தப்ப மறுக்கும் அவனது நிலை, கதையின் மைய முரண்பாட்டை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. ரோஸ்டி இயக்கம் ஒரு கைதியின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக நம்புகிறது, ஆனால் நடைமுறையில் கைதியே அந்தக் கட்டுப்பாட்டை – அதிகாரத்தைக் கைப்பற்றுகிறான். கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான வெளியில் என்ன நிகழும் என்பது, எல்லா இயக்கங்களும் எதிர்கொள்ளும் அடிப்படை மோதலாகும் என்பதை இக்கதை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது.

மட்டுமல்ல, கண்டிவீரனாகிய காந்திராஜன் மலையகத்தைச் சேர்ந்தவர் என்ற பாத்திரத் தேர்வும் அவருக்கு இடப்பட்டுள்ள பெயர்களும், இங்கே ஊன்றிக் கவனிக்க வேண்டியது. யாழ்ப்பாண மேட்டிமைத்தனத்தை உச்சமாகக் கேலிப்படுத்தும் தேர்வுகள் இவை. ஏனெனில், மலையகத் தமிழர்களை இந்திய வம்சாவழியினராகவும் தம்மையும் விடத் தாழ்ந்தவராகவும் நோக்கும் யாழ்ப்பாணத்து மனநிலை ஈழவிடுதலை இயக்கங்களையும் விட்டு நீங்கவில்லை. அதற்கான அடியே இது என்பதைச் ஷோபாசக்தி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

1980, 90 களிலிருந்த தமிழ் ஆயுத இயக்கங்களின் உள் – இயக்கப் போட்டிகள், கொள்கை மோதல்கள், நிதி தேடல், மற்றும் ‘வரி’ வசூலிப்பு, மரண தண்டனை விதிப்புப்போன்ற நடைமுறைகளை நையாண்டி செய்கிறது. மறுவளமாக சீழ்ப்பிடித்த வரலாற்றை நினைவூட்டுகிறது. நாம் அடக்க முடியாமல் சிரித்து நம்முடைய ‘அந்த நாட்களை’ வெட்கத்தோடு நினைத்துக் கொள்கிறோம். இவ்வாறு பல கதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் பேச வேண்டும். ஆனால், அது படைப்புக்குப் பொருள் கூறுவதாக அமைந்து விடுவதாக அமைந்து விடக் கூடாது என்பதால் அதைத் தவிர்த்து விடுகிறேன். இருந்தபோதும் ‘புனைவு என்னும் புதிர்’ என்ற தலைப்பில் விமலாதித்த மாமல்லன் ஷோபாசக்தியின் 12 கதைகளைத் தனித்தனியாக எடுத்து எழுதியிருக்கிறார். அது தனியொரு நூலாகவே வந்துள்ளது.

இப்படி எல்லாவற்றையும் மீளப் பேசி, கேள்விக்குள்ளாக்கி, கேலிப்படுத்தி, வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மைகளை மிகச் சாதாரணமாக உடைத்து விடுகிறார் ஷோபாசக்தி. இதன் மூலம் உயர்த்தி நிறுத்தப்பட்டிருக்கும் கற்பிதங்கள், நம்பிக்கைகள், புனிதங்களையெல்லாம் மீறுவதற்கான ஒரு அசாத்தியத் துணிவைச் சமூகத்திற்கு அளிக்கிறார். இதுவும் முக்கியமானதாகும். அதிகார பலமடைந்துள்ள அரசுகளையோ, இயக்கங்களையோ அதிகாரத்திலுள்ள அரசியற் தலைவரையோ, வரலாற்றுப் பெருமிதமுடைய பிரமுகரையோ பொதுவாக எவரும் எதிர்க்கவோ கேள்விக்குட்படுத்தவோ விமர்ச்சிக்கவோ முடியாத ஒரு பொதுச் சூழல் தமிழர்களுடையது. அப்படித்தான் புனிதப்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் பண்பாட்டையும் மரபையும் இலகுவில் யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இவற்றை மீற முடியாதென்றில்லை, பலரும் அதற்குத் துணிவதில்லை. ஆனால், ஷோபாசக்தி அதைச் செய்கிறார். அவர் பிறந்த வளர்ந்த நாடான இலங்கை அரசையும் கேலிப்படுத்துகிறார்;  கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் புகலிடம் பெற்ற பிரான்ஸ் நாட்டையும் (அதனுடைய அதிகாரத்தையும்)  கேள்விக்குட்படுத்துகிறார். இவ்வாறு செய்வதன் மூலமாக இவற்றிலுள்ள கோளாறுகளையும் குறைபாடுகளையும் குற்றங்களையும் அப்பலப்படுத்தி விடுகிறார். கலைஞர் ஒருவரின் சிறப்பும் அழகும் இதுவே. அப்படி அம்பலப்படுத்தும்போது சனங்களுக்கு இவற்றின் மீதான (இந்த அதிகாரச் சக்திகளின் மீதான) மதிப்பும் நம்பிக்கையும் குறைகிறது. என்பதால் இந்த அதிகாரத் தரப்புகளை மீறுவதற்கும் கேள்விக்குட்படுத்துவதற்குமான துணிவு மக்களிடம் ஏற்படுகிறது. அடுத்த கட்டமாக “போங்கடா நீங்களும் உங்களுடைய அரசும்“. “போங்கடா உங்களுடைய நீதியும் ஆட்சியும்…‘ அப்படித்தான் “சரி காணும், கிளம்புங்கோ நீங்களும் உங்களுடைய இயக்கங்களும்“ என்று எள்ளல் செய்கிறார்கள்.

கலையிலும் இலக்கியத்திலும் உள்ள வசதி வாய்ப்பு இதுதான். இதை இன்னும் சிறப்பாகச் செய்யக் கூடியது, கார்ட்டூனாகும். கார்ட்டூனில் எந்தப் பெரிய அதிகாரத்தரப்பின் மூக்கும் மூளையும் பகிரங்க வெளியில் உடைக்கப்படுகிறது. அங்கே பயன்படுத்தப்படும் கேலியே அதைச் சாத்தியமாக்குகிறது. அடுத்தது சினிமா. சினிமாவில் இவை இன்னும் காட்சிபூர்வமாக்கப்படுத்தப்படும்போது  அதனுடைய தாக்கம் பெரிதாகிறது. என்பதாலேயே பல சினிமாக்கள் உலகெங்கும் தடைசெய்யப்படுகின்றன. இவை இரண்டுக்கும் நிகரானது ஷோபாசக்தியின் எழுத்து – புனைவு. சில இடங்களில் கார்ட்டூனையும் மிஞ்சி நிற்கும் ஷோபாசக்தியின் கேலிப்படுத்தலும் அதனடியாக ஓடும் கூரிய எதிர்ப்பும் நமக்கு வியப்பையும் ஈர்ப்பையும் அளிக்கின்றன. மட்டுமல்ல, நமக்குள் துணிவையும் அறிவுத் தூண்டலையும்கூட.

09

மகத்தான இலக்கியத்துக்கும் கலைக்கும் விழிப்பூட்டல், அகத்தூண்டலை நிகழ்த்துதல் போன்ற அடிப்படைகளும் அம்சங்களும் இருப்பதுண்டு. கலையின் வரலாறும் இலக்கியத்தின் அடையாளமும் இதுதான். அவை எதிலும் தலையீடு அல்லது இடையீடு செய்கின்றன. இதையே கூர்மையும் பொறுப்பும் கொண்ட படைப்பாளிகள் வரலாறு முழுவதிலும் செய்து வந்துள்ளனர். அவை செயலுக்குத் தூண்டும் விசைகொண்டதாக இருக்கும். உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்குமுறைக்கு எதிரான எழுத்துகளும் படைப்புகளும் இந்தப் பண்பைக் கொண்டவை. என்பதால் இவற்றை பங்கேற்பு இலக்கியம் (Participatory literature) அல்லது பங்கேற்பு எழுத்து (Participial writing) என்று சொல்லப்படுவதுண்டு.  இதனால் இவை தலையீட்டு இலக்கியம் (Interventional literature) அல்லது இடையீட்டு எழுத்து என்றும் சொல்லப்படுகிறது. 

புனைவில் பலவிதமான சாத்தியங்களை உருவாக்கி, வாசிப்போரிடமும் இலக்கிய விமர்சகர்களிடத்திலும் வெற்றியடைந்த ஷோபாசக்தி, சில கதைகளில் தாழ்வு நிலையைக் கொண்டிருப்பதாக  உணர்கிறேன். ‘பல்லிராஜா’, ‘மெய்யெழுத்து’, ‘வர்ணகலா’ உள்ளிட்ட மேலும் ஒன்றிரண்டு கதைகள். இவையும் வரலாற்று மனிதர்கள், மெய்யான சம்பவங்களை இணைத்து உருவாக்கப்பட்ட (புனையப்பட்ட) கதைகளே. ‘மெய்யெழுத்து’ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியான திலீபனைப் பற்றிய கதை. திலீபனுடன் சமகாலத்தில் அதே இயக்கத்தில் போராளியாக இருந்தவர் ஷோபாசக்தி. என்பதால் திலீபனுடன் பழகி நன்றாக அறிந்தவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர் நீத்த திலீபனின் உடல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைக்கு திலீபனின் விருப்பத்தின்படி வழங்கப்பட்டிருந்தது. 1990 களின் நடுப்பகுதியில் இலங்கைப் படைகளின் ஆக்கிரமிப்பினால் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வெளியேற நேர்ந்தபோது, திலீபனின் உடலையும் தங்களுடன் கூடவே எடுத்துச் சென்றனர். அப்படிக் கொண்டு சென்ற அந்த உடலைத் தங்களுடைய மருத்துவத்துறைப் பராமரிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். 2009 இல் வன்னியில் இலங்கைப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இறுதிப்போரில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு, முற்றாக அழியும் நிலை ஏற்பட்டபோது, திலீபனின் உடல் என்னவாகியது என்பதே கதை.

திலீபனுடைய மரணமே மிக உணர்ச்சிகரமானது. முன்வைத்த அரசியற் கோரிக்கைக்காகச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர். இன்றும் அந்தச் சாவுக்கு தமிழ்ச் சமூகத்திடம் உணர்ச்சிகரமான மதிப்புண்டு. திலீபனுடைய உடலைத் தங்களோடு புலிகள் எடுத்துச் சென்றது கூட உணர்வுபூர்வமான ஒரு முடிவினால்தான். கதையும் இந்த உணர்வுத் தளத்தில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய புனைவுத் திறனால் இந்தக் கதையையும் முடிந்தவரையில் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.  ஆனாலும் அது நிகழ்ச்சிகளின்  தகவல் விவரிப்பாகவே பெருமளவுக்கும் உள்ளது. சிலவேளை இந்த விவரங்கள் எல்லாமே தெரிந்த வாசகனாக நான் இருப்பதால், அப்படியொரு உணர்வு ஏற்படுகிறதோ தெரியவில்லை. ஏனென்றால், இந்தக் கதையை வேறு பல வாசகர்கள் சிறப்பெனக் கூறுகிறார்கள்; கொண்டாடுகிறார்கள்.

இப்படித்தான் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் நடந்த சாதிக் கொலையைப் பற்றிய ‘வர்ணகலா’வும் முல்லைத்தீவு மாட்டத்திலுள்ள குருந்தூர் மலையில் அத்துமீறிப் புத்தர் சிலையை வைக்கும் பௌத்த பிக்குவைப் பற்றிய  பல்லிராஜாவும். இவை அவருடைய ஏனைய கதைகளைப் போல இந்தக் கதைகள் வெற்றியடையவில்லை. ஷோபாசக்தியின் கதைகளாக இவற்றை உணரமுடியவில்லை. புனைவில், அதற்கான நுட்பத்தில் சோர்வடைந்துள்ளன. கப்டன், எழுச்சி, பரபாஸ், வெள்ளிக்கிழமை, ரம்ழான், F இயக்கம், எம்.ஜி.ஆர். கொலைவழக்கு, மிக உள்ளக விசாரணை, அந்திக்கிறிஸ்து, யாழ்ப்பாணச் சாமி, மூமின் …. என்றெல்லாம் எழுதிச் சாதித்தவர் இந்தக் கதைகளில் தாழ்வு கொண்டது ஏன்?

முடிவாக – ஷோபாசக்தி விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கிறார் என்பது உண்மை. அதையும் மிஞ்சியதாக இலங்கை அரசையும் அவர் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் பிரான்ஸின் அரசியல் நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கிக் கண்டிக்கிறார். இன்னும் விரிந்து உலமயமாக்கலையும் அதிற் தொழிற்படும் வல்லாதிக்கச் சக்திகளையும். கூடவே நம்முடைய தமிழ்ச் சூழலில் உள்ள சாதி, பால் வேறுபடுத்தல்களில் நிகழும் ஒடுக்குமுறைகளையும் மேலாதிக்கத்தையும். ஆனால், பெருந்திரள் மக்கள் கேள்விகளற்ற நிலையில் ஜனநாயக அடிப்படைகளில் பலவீனத்தைக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியவாத அரசியல் முன்னெடுப்புகளையும் சிங்கள இனவாத்த்தையும் ஆதரிக்கும் உள நிலையைக் குறித்து எழுதவில்லை. அல்லது குறைவு. அப்படித்தான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெருந்திரளின் உளநிலைப் பண்புகளைக் குறித்தும் அவர்கள் முன்வைக்கும் நியாயப்பாடுகள் பற்றியும் எழுதியது குறைவு. எதிர்காலத்தில் இதை எதிர்பார்க்கலாம் என்று கருதுகிறேன்.

பல சந்தர்ப்பங்களிலும் நாம் உலக அரசியலையும் உலகளாவிய அநீதியையும் விமர்சித்து எழுதி விடலாம். அந்தளவுக்கு உள்ளுர் அரசியலையும் உட்சமூக நிலவரங்களையும் எழுத முடியாது. தமிழ்ச் சூழலின்  நிலவரம் இது. இலங்கையில் மட்டுமல்ல, இந்தியச் சூழலிலும் இந்த நெருக்கடி உண்டு. அப்படி எழுதுவதாக இருந்தால் அதற்கு மிகுந்த துணிவு வேண்டும். சவால்களையும் பாதிப்புகளையும் ஏற்பதற்கான திராணியும் தயார் நிலையும் வேண்டும். இது உயிராபத்துகள் வரையில் நீளக் கூடியது. இதேவேளை ஒடுக்குமுறைக்கும் நீதி மறுப்புக்கும் எதிராக அரசியற் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் செய்ய முடியாதவற்றை இலக்கியத்தின் வழியாகச் செய்யலாம். அது இங்கே எப்படியோ நடக்கிறது, நடந்துள்ளது.

எழுத்தாளருக்குரிய பொறுப்பும் சிறப்பும் இதுதான். பத்திரிகையாளரோ, அரசியல்வாதியோ வரலாற்றாசிரியர்களோ, சட்டவாளர்கள், நீதியாளர்களோ தொடமுடியாத மையங்களையும் உணர்ச்சிப் புள்ளியையும் விவாதங்களின் கூர்முனைகளையும் படைப்பாளி தொட்டுத் திறந்து விடுகிறார். ஒரு மாற்று விசாரணைக் கமிஷனைத் திறந்து மக்களிடம் கையளித்து விடுகிறார். அல்லது மக்களாகவே ஒரு மாற்று விசாரணைக் கமிஷனைத் திறப்பதற்கு ஏதுவாகிறார்.

ஷோபாசக்தியின் கதைகளைப் படித்தவர்களில் பலர், அவர் கதைகளில் நிறுத்தியுள்ள பாத்திரங்களைக் குறித்தும் வரலாற்றுச் சம்பவங்களைக் குறித்தும் மீள் விசாரணையைச் செய்கின்றனர்;  அவற்றைத் தேடுகின்றனர். கதைகளில் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அழுத்தம் பெற்றவை. வலிமையானவை. அத்தனை நெருக்கடிகளிலும் துயரங்களிலும் கலக்கத்திலும் வாழ்வை எதிர்கொண்டு நிற்பவை. அதிலும் பெண் பாத்திரங்களுக்குத் தனிச் சிறப்புண்டு. உதாரணம், கருங்குயில் கதையில் அந்தக் கவிஞருக்கு (பாப்லோ நெருடாவுக்கு) மேலாக நிற்கிறார், அவரால் பாலியல் சுரண்டலுக்குள்ளாகிய சம்பங்கி. அப்படித்தான் வர்ணகலாவும்……. அவர் உருவாக்கிய அத்தனை பாத்திரங்களுக்கும் வரலாற்று அடையாளமும் வாழ்க்கையும் இலக்கியத்தில் அழிவற்றது. தஸ்தாயெவ்ஸ்கியின் அன்னகரீனாவைப்போல, மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும் நீலவ்னாவைப்போல, மாண்டோவின் கதைகளில் வருகின்ற பாத்திரங்களைப் போல வாழும் பாத்திரங்கள். அப்படியேதான்  கதைகளில் நிகழ்த்தப்படும் அல்லது பதிவு பெறும் சம்பவங்களும் மறைவற்றவையாகி விடுகின்றன. கால நீட்சியில் அந்தச் சம்பவங்களிற் பல மறைந்து மங்கலடைந்து விட்டன. ஆனால், அவற்றை இலக்கியத்தில் நிலைப்படுத்துவதன் மூலம், மீளவும் அவற்றைக் குறித்த உரையாடல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவை பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன. கதைகள் வாசிக்கப்படும்தோறும் இது நிகழ்கிறது. இந்த நிகழியக்கத்துக்கு முடிவேயில்லை. காலவெளியில் நிகழ்த்தப்பட்ட அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்புக்குரல் கலகம் செய்கிறது; மோதலை நிகழ்த்துகிறது. என்பதால் இது ஒருவகையிலான போராட்டமே, போரே. ஆம் மறதிக்கு எதிரான போர். அப்படியே அதன் வழியாக வரலாற்றுக்கும் ஒளியூட்டப்படுகிறது.

இதேவேளை வரலாற்றுச் சம்பவங்களை எழுதுவதன் மூலம் அநேகமானோர் செய்வதைப்போல, தட்டையான ஆவணமாக்கலையோ, சாட்சியப் பிரதிகளை உருவாக்குவதையோ துயரத்தைப் பெருக்கிக் கழிவிரக்கத்தைக் கோருவதற்கோ  ஷோபாசக்தி முயற்சிக்கவுமில்லை. அந்த வழிமுறையை அவர் நிராகரிக்கிறார். நம்முடைய நீதியுணர்வின் மூலமும் நீதியான செயற்பாடுகளின் வழியாகவும் நீதியை நிலைநாட்டுவோம். நீதியைப் பெறுவோம். அதுவே அறமாகும். அதுவே சரியான வழியாகும் என்பதே ஷோபாசக்தி முன்வைக்கும் நிலைப்பாடாகும். அதற்கு நாம் குற்றமற்றவர்களாக, நீதியாளர்களாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய வாதமாகும்.

ஷோபாசக்தி கதைகளில் நிறுத்தும் வரலாற்றுச் சம்பங்களை மட்டுமல்ல, அங்கே நிறுத்தப்பட்ட இடங்களைத் தேடுவதும் நிகழ்கிறது. கதைகளைப் படித்து விட்டு இலங்கைக்கு வரும் பல நண்பர்கள் (வாசகர்கள்), அவருடைய கதைகளில் உள்ள இடங்களைப் பார்க்க வேணும் என்ற ஆவலோடு தேடுவதைப் பார்த்திருக்கிறேன். அந்தளவுக்கு எழுத்தின் வழியே அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஷோபா. இதற்கெல்லாம் காரணம், அவரிடமுள்ள அரசியல் பொறுப்புணர்வும் மனிதர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய கரிசனையுமே. எந்தப் புனித இலட்சியங்களையும் விட மக்களுடைய வாழ்க்கையே மேலானது, அவர்களுடைய துயரமே பொருட்படுத்த வேண்டியது என்பதே ஷோபாசக்தியின் கதைகளுடைய மைய இழை. என்றபடியால்தான், அரசியலிலும் அரசியல் மேலாதிக்கத்தோடு வரலாற்றிலும் ஆதிக்கம் செலுத்தி நிர்க்கதியாக்க முயற்சிக்கும் உண்மைகளையும் நீதியையும் தன்னுடைய படைப்புகளின் வழியே நிலைபெறச் செய்ய முடிகிறது ஷோபாசக்தியினால். இதை இந்தப் பெருந்தொகுதியின் நீளத்துக்கும் காண முடியும்.

புனைவின் வழியே மொழியை, அதனுடைய பிரயோகத்தை மேலும் நவீனப்படுத்தி, வலுவூட்டுவதன் மூலம் மொழிக்கும் அதன் வழியே பண்பாட்டுக்கும் சமநேரத்தில் அரசியலுக்கும் அதனூடாக மக்களுக்கும் பங்களிக்கிறார் ஷோபாசக்தி. இந்தச் சாதனை எளியதல்ல. மதித்துக் கொண்டாடப்பட வேண்டியது.

ஷோபாசக்தி கதைகள்

(1997 – 2024)

கருப்புப் பிரதிகள்

B 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை

சென்னை 600 005

விலை: 1100 /= (இந்திய ரூபாய்)

00

பகிருங்கள் Facebook WhatsApp

கருத்து எழுதுங்கள்