August 30, 2026·உரையாடல்கள்· 10

போருக்குப் பிந்தைய வாழ்வியல் மற்றும் இலக்கியச் சூழல்

1. ‘போருக்குப் பிந்தைய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்கு’களாக நீங்கள் பார்க்கும் அம்சங்கள்?  

இந்தக் கேள்வி, ஈழ இலக்கியத்தை அரசியல் நிலைப்பட்டே புரிந்து கொள்ள முற்படுகிறது. அதில் உண்மையும் உண்டு. தவிர்க்க முடியாத நிலையில் அரசியலைச் சற்று அழுத்தமாகக் கொண்டதே ஈழ இலக்கியம். ஈழத் தமிழரின் 75 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் தீவிர அரசியல் நெருக்கடிகளும் இன ஒடுக்குமுறையும் போரும் அலைவுகளும் இதற்கு முக்கியமான காரணம். இதை மேலும் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தியாவில் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டபோது, அன்றைய இந்திய எழுத்துகளில் அது பிரதிபலித்ததல்லவா, அதைப்போன்றதே இதுவும்.  

போருக்குப் பிந்திய இலங்கைத் தமிழ்ச் சூழல் மிகச் சிக்கலானது. அது வெற்றிபெற்ற தரப்பு – தோற்கடிக்கப்பட்ட தரப்பு என்ற பிரிகோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. வென்ற தரப்பு, வெற்றிக் களிப்பில் உள்ளது. தோற்கடிக்கப்பட்ட தமிழ்த்தரப்போ உளக்காயங்களோடும் சிதைவோடும் உள்ளது. போர் முடிந்த பின் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மீள்கட்டுமானங்கள், இயல்பு நிலை உருவாக்கம், படை விலக்கல் அல்லது படைக்குறைப்பு, பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம்;  நீதி வழங்கல், அரசியற் தீர்வு என எதையும் அரசாங்கம் செய்யவில்லை. பதிலாக ஒடுக்குமுறையும் பாரபட்சமும் நில ஆக்கிரமிப்பும் தீர்வின்மையும் தொடர்ந்து கொண்டேயுள்ளது. தோற்கடிக்கப்பட்ட சமூகத்தினராகவே தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் கையாளப்படுகிறார்கள். இதனால் இலங்கைத் தமிழ்ச் சூழல் மிகக் கொந்தளிப்பான, குழப்பமான நிலைக்குள்ளாகியுள்ளது.  நான் ‘இலங்கைத் தமிழ்ச் சூழல்’ என்று குறிப்பிடுவது இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களான முஸ்லிம்கள், இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பையும் உள்ளடக்கியதாகும். இந்தச் சமூகங்களின் போருக்குப் பிந்திய இலக்கியம் ஒரே விதமானதல்ல. வெவ்வேறு புரிதல்களையும் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் கொண்டது. ஆனால் அனைத்துத் தரப்பிலும் போரைப் பற்றியும் போரின் அனுபவங்களைப் பற்றியும் பேசுவதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கிறது. அதை எப்படிப் பேசுவது? எதை முன்னிலைப்படுத்துவது? எதைச் சாராம்சப்படுத்துவது? போரில் கற்றுக் கொண்ட பாடங்களை எப்படிப் புரிந்து கொள்வது; எப்படி வெளிப்படுத்துவது? போராட்டம் போராகச் சுருங்கியது ஏன்? போராகச் சுருங்கியதன் விளைவாக போரின் தோல்வியோடு போராட்டமும் தோல்வியாக முடிந்திருப்பதைக் குறித்த பார்வைகள் என்ன? என்பதையெல்லாம் ஆழமாகப் பேசியிருப்பதாகச் சொல்ல முடியாது. முக்கியமாகப் போரின் விளைவுகளை அது எந்தளவுக்குப் பேசியுள்ளது? என்று பார்க்க வேண்டும்.

யுத்தம் முடிந்த ஆரம்பக் காலத்தில் (2009-2015) பேரதிர்ச்சி, ஆவணப்படுத்தல், இழப்பின் துயரம் (Trauma) சார்ந்த எழுத்துகளே அதிகமாக வந்தன. ஆனால், அதற்கடுத்த தசாப்தத்தில் (2015க்கு பின்) மெல்ல மெல்ல சுயவிமர்சனமும், அரசியல் ஏமாற்றங்களும், உலகளாவிய போரியல் இலக்கியப் போக்குகளுடன் ஒப்பிடும் பார்வைகளும் உருவாகத் தொடங்கியுள்ளன.

உலகப் போர்களுக்குப் பிறகு உருவாகிய இலக்கியமும் கலை வெளிப்பாடுகளும் (குறிப்பாக சினிமா மற்றும் ஓவியம்) கோட்பாடுகளும் (சிந்தனையும்) அந்தப் போர்களின் அனுபவங்களை, மானுட இருப்புடனும் வாழ்க்கையோடும் பல்வேறு உளநிலைகளோடும் இணைத்துப் பார்த்திருப்பதை நாம் காணலாம். இதைப்போல இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கால இலக்கியம் இன்னொரு அனுபவப் பிராந்தியத்தைத் திறந்ததையும் இங்கே குறிப்பிடலாம். ஆனால், நீண்ட கால ஈழப்போராட்டமும் பேரழிவில் முடிந்த யுத்தமும் தந்திருக்கும் அனுபவங்களையும் புரிதல்களையும் ஈழத் தமிழ் இலக்கியம் சரியாக வெளிப்படுத்தவில்லை என்றே சொல்வேன். ”அதற்கு அவசரப்பட வேண்டியதில்லை. காலம் இன்னும் உள்ளது” என்று யாரும் சொல்லக் கூடும். இவற்றைப்பேசுவதற்கான உளநிலை கூடாதவரையில் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் மாற்றங்களோ புதிய வரவுகளோ கிடைக்காது. யுத்தம் முடிந்து இப்போதே 18 ஆண்டுகள் கடந்து விட்டன.

இப்போது வந்து கொண்டிருக்கின்ற போருக்குப் பிந்திய ஒரு தரப்பினரின் எழுத்துகளும் கலை வெளிப்பாடுகளும் பல வகையானவை. குறிப்பாக

1. விடுதலைப் புலிகள் நிலைப்பட்டவை அல்லது தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பட்டவை.

2. மக்கள் நிலைப்பட்டவை.

3. போர் எதிர்ப்புணர்வைக் கொண்டவை.

4. கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய விளைவுகளை – புதிய திசைகளைத் திறக்க முயற்சிப்பவை

என வகைப்படுத்திக் கொள்ளலாம். 

விடுதலைப் புலிகள் நிலைப்பட்டவை அல்லது தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பட்ட எழுத்துகள், ‘சிங்கள இனவாதமும் அதனால் வழிநடத்தப்படும் இலங்கை அரசும் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகின்றன, இனவழிப்புச் செய்கின்றன’ என்பதைக் கடுந்தொனியில் விமர்சிக்கின்றன. தீபச்செல்வன், ஆதிலட்சுமி சிவகுமார், வெற்றிச்செல்வி, கருணைரவி, அ.இரவி, வாசு முருகவேல் போன்றோருடைய எழுத்துகள் இந்த வகைக்குச் சான்று. இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு ஆதரவாக இந்தியாவும் உள்ளது எனச் சிலர் கண்டித்தும் விமர்சித்தும் எழுதுகிறார்கள். தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ போன்றவை இதற்கு உதாரணம். கூடவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையும் போராளிகளின் தியாகமும் கூட இவர்களுடைய வெளிப்பாடுகளில் பேசப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இருந்தும் இவை புதிய சேதி எதையும் தரவில்லை. மாற்றுப் பார்வை, சுயவிமர்சனம் என எதையும் கொள்ளாதவை. அதனால் பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணமுடையவை. ஏன் இவை ஒற்றைப் பரிமாணமுடையவை என்று சொல்கிறேன் என்றால், போராட்டத்திலும் போரிலும் நடந்த தமிழ்த் தரப்பின் (தமது தரப்பின்) தவறுகளைப் பற்றிப் பேசுவதையும் தமது பார்வைக்கு வெளியே வேறுபார்வைகளும் நிலைப்பாடுகளும் உள்ளன என்பதையும் இவை தவிர்க்கின்றன.   

போராட்டத்தின் போதான இலக்கிய முன்னெடுப்பு வேறாக இருப்பதுண்டு. அது போராட்டத்தை உத்வேகப்படுத்துவதற்கான தார்மீகப் பொறுப்பாகத் தன்னை உருவகித்துக் கொள்வதால், அங்கே தவிர்க்க முடியாமல் ஒருபக்க நியாயத்தை அதிகமாக வலியுறுத்த நேர்ந்து விடுகிறது. அது கூடத் தவறானது, ஒற்றைப்படைத்தானது என்ற விமர்சனங்கள் உண்டு. இதுவோ போர் முடிந்த பிறகான சூழலிலிருந்து வரும் இலக்கியம் அல்லது கலை வெளிப்பாடு என்பதால், அதைப்பற்றிய மதிப்பீடுகள், சுயவிமர்சனங்கள், மறுபார்வைகள் எனப் பல பரிமாணத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இவர்களுடைய எழுத்துகளில் நேரவில்லை. சுயபரிசீலனையற்ற எந்தக் கோட்பாடும் நிலைப்பாடும் பாதகமான விளைவுகளையே தொடர்ந்தளிக்கும். அதிலும் தோற்றுப்போன தரப்பு அதைக்குறித்த பரிசீலனைகளைச் செய்வது அவசியம். அதைத் தவிர்த்து, இரக்கங்கோருதலும் நீதியைக் கேட்டலும் அநீதியை எதிர்ப்பதாகப் பாவனை செய்வதும் ஏற்புடையதல்ல. இதில் ஒரு ‘தந்திரத் தவிர்ப்பு’ உள்ளது. இந்தத் தவிர்ப்பு எதேச்சையாக நடப்பதல்ல. திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுவது. இந்தத் திட்டமிட்ட அரசியலில் தமது தரப்பைப் புனிதமாக்கலும் பிற தரப்பைக் குற்றப்படுத்தலும் நிகழ்கிறது. தம்மைப் புனிதமாக்குதலும் எதிர்த்தரப்பைக் குற்றப்படுத்துதலும் ஒருபோதும் நீதிக்குரியதாக அமைவதல்ல. இலக்கியத்தின் அடிப்படையைப் பேணுவதுமல்ல. மறுபக்கத்தில் இதையொத்த தவறுகளே நடக்கின்றன. இலங்கை அரசாங்கமும் சிங்கள மேலாதிக்கச் சக்திகளும் தம்மைப்புனிதப்படுத்தவே விளைகின்றன. அதனால்தான் இலங்கைத்தீவில் அமைதியும் சாமாதானமும் நீதியும் நல்வாழ்வும் கிட்டாதிருக்கிறது.

என்னதான் உண்மைகள், நியாயங்கள் இருந்தாலும் இந்த வகையான எழுத்துகளுக்கும் செயற்பாடுகளுக்கும் வரலாற்றில் மதிப்பில்லை. எதிர்த்தரப்பின் தவறுகள், குற்றங்களைப் பற்றிப் பேசும்போது, நம்முடைய குற்றங்களையும் தவறுகளையும் தவிர்க்காமல் அவற்றையும் பேசியாக வேண்டும். இல்லையெனில் வெறுப்பை மட்டுமே உமிழ்வதாகி விடும்.  தமது தரப்பைச் சுயவிமர்சனம் செய்வதானது ஒருபோதும் எதிர்த்தரப்பை குற்றமற்றவர்களாகவும், நியாயவாதிகளாகவும் கட்டமைக்காது. எங்களைப் போராடத் தூண்டிய அடிப்படைக் காரணங்களே போதும் அவர்கள் நியாயவாதிகள் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு. 

இலக்கியம் அரசியற் கட்சியின் வேலையைச் செய்வதல்ல. அது உண்மையோடும் அறத்தோடும் விழுமியங்களோடும் உறவுடையது. அவற்றின் சேர்வைக்கே மதிப்பு அதிகம். அதுவே இலக்கியப் பெறுமானத்துக்கான அடிப்படையைப் பேணும்.

இன்னொரு தரப்பினர், தமிழ் மக்களின் நிலைப்பட்டுப் பேசுகிறார்கள். இந்த வகையான எழுத்துகள் ஒடுக்குமுறையினாலும் போரினாலும் தமிழ் மக்கள் – தமிழ் பேசும் மக்கள் – எப்படியெல்லாம் பாதிப்பைச் சந்தித்தனர், இன்னும் எவ்வாறான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. போரிலும் போருக்குப் பிறகும் மக்கள் சந்தித்த – சந்தித்து வரும் நெருக்கடியையும் வாழ்க்கையையும் பேசுகின்றன. சாந்தன், தாமரைச்செல்வி, தாட்சாயணி, ஸர்மிலா ஸெய்யித், ஜிப்ரி ஹஸன் போன்றோருடைய எழுத்துகள் இவ்வகையானவை. இவற்றிலும் போதாமைகள் உண்டு. அது தனியாகப் பேசப்பட வேண்டியது. இதில் இன்னொரு வகையையும் சேர்த்துக் கொள்ளலாம். போருக்கு முன்பும் பிறகும் முழுவிசையோடு தொடரும் திட்டமிட்ட ரீதியான நில ஆக்கிரமி்ப்பு, மத மேலாதிக்கம் போன்றவற்றை எதிர்க்கும் – அவற்றின் விளைவுகளைச் சொல்லும் எழுத்துகள். செங்கதிரோனின் ‘கனகர் கிராமம்’ இதில் முக்கியமான ஒன்று. ஆனால், இந்த வகை எழுத்தில் கலையாக்கம் என்பதற்கு அப்பால், ஆவணப்படுத்தலே அதிகமான நிகழ்கிறது.   

போரின் பாடுகளையும் அது உண்டாக்கிய பேரவலத்தையும் அதன் துன்பியல் வெளிப்பாடுகளையும் இன்னொரு நிலையில் அழகியல் எழுத்துகளாக முன்வைப்போரும் உள்ளனர். சேரனின் ‘காடாற்று’, பா. அகிலனின் ‘சமரகவிகள்’ போன்றவை இதற்கு உதாரணம்.   

இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேசவிளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் அதற்குக் காரணமான இரு தரப்பினரையும் விமர்சிக்கின்றனர். குறிப்பாகப் பலரும் பேசத்தயங்குகின்ற விடுதலைப்புலிகள் தரப்பின் தவறுகளையும் பிற இயக்களின் குற்றங்களையும் இவை பேசுகின்றன. இந்தவகை எழுத்தில் தமிழ்க்கவி, ஷோபாசக்தி, நிலாந்தன், சயந்தன், தேவகாந்தன், நடேசன், ப. தெய்வீகன், கிரிசாந், தமிழினி, தில்லை, மு.பொ, சி. சிவசேகரம், இராகவன், யோ. கர்ணன், நவமகன், யதார்த்தன் போன்றோரைக் குறிப்பிடலாம். ஓரளவுக்கு இவை போர் மறுப்பு இலக்கியத்துக்கு நெருக்கமானவை எனலாம். ஆனாலும் இவையும் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியவை. குற்றம் சுமத்துவது, எதிர்ப்பது என்ற எளிய சூத்திரத்துக்கு அப்பால் அகத்தைத் திறப்பது, பொறுப்புணர்த்துவது, புதிதாகச் சிந்திக்க வைப்பது என்ற இலக்கியப் பண்புகளை நோக்கி நகர வேண்டும். எப்படியென்றால், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் நியாயப்பாடுகளையும், போரினால் அனுபவித்த வலிகளையும் சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளக்கூடிய, ஏற்கக் கூடிய,  தமிழ் மக்களுக்கு ஆதரவான உளமாற்றத்துக்கான தமிழ் இலக்கியங்களே போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் முக்கிய தேவை.

முந்திய இரண்டு தரப்பிலும் புதியவை என்று அதிகமில்லை. போருக்கு முன்பும் போர் நடந்தபோதும் இவ்வாறான எழுத்துகள் தாராளமாக வந்துவிட்டன. போருக்குப் பிந்தியவற்றில் சில போரின்போது என்ன நடந்தது என்பதைச் சொல்வதாக – ஆவண விவரிப்பாக – உள்ளன.  அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டுதான்.


இலங்கை அரசாங்கத்தையும் சிங்கள பௌத்த இனவாதத்தையும் எதிர்க்கவும் விமர்சிக்கவும் வேண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை நாம் ஒரே விதமான  வாய்பாட்டுத்தனமாக எழுதுவது வாசகர்களுக்குப் புதிய உணர்வையோ சேதியையோ தராது. அரசும் சிங்கள பௌத்த இனவாதமும் ஒடுக்குமுறை இயந்திரமாக இயங்குவதற்கான உள்ளார்ந்த காரணங்கள் என்ன? அவற்றை மீறி அவற்றினால் சிந்திக்க முடியாதிருப்பது ஏன்? அதற்கான சமூக, வரலாற்று, அரசியற் பின்புலம் என்ன? இனவாதத்தினால் உண்டாகும் பாதிப்புகள் இலங்கைச் சமூகங்களை எப்படிப் பாதிக்கின்றன? இதற்கான மாற்றுக்கள் எவை? சமாதானத்தையோ இனவாதமற்ற  சூழலையோ உருவாக்க முடியாமலிருக்கும் தோல்வி, வெட்டக்கேடானதில்லையா? என்ற வகையிலான – புதிய முறையிலான – எழுத்துகள் வர வேண்டும். சிங்கள மக்களின் – ஏன் மொத்த உலகத்தின் – மனச்சாட்சியையும் சிந்தனையையும் உலுக்கக்கூடிய எழுத்துகளாக அவை இருக்க வேண்டும். ‘ஒடுக்குமுறையைத் தொடர்ந்தும் மேற்கொள்வது கீழ்மையானது; குற்றத்துக்குரியது’ என்பதை உணர்த்தக்கூடிய வகையில் எழுதப்படும் இலக்கியமே இன்றைய தேவை. குறிப்பாக, எதிர்த்தரப்பின் மீது தொடர்ந்து வன்மத்தையும் பழிவாங்கலையும் தூண்டாமல், போரின் அவலத்தையும் அதன் தேவையற்ற தன்மையையும் உணர்த்துவது. அரசியல் தரப்புகள்; தலைவர்களைத் தாண்டி, போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள், அகதிகள், குழந்தைகள், அவர்களின் உளத்தாக்கங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, போராளிகளின் இன்றைய வாழ்க்கை, போரினால் மாற்றுத்திறனாளிகளானவர்களின் வாழ்வு, போரில் பங்குகொண்ட பெண்களின் உளநிலை, இனவாத அரசை ஆதரித்த தமிழ் குழுக்கள் தொடர்பான விமர்சனப்பார்வை தொடக்கம் உண்மையான துயரங்களை முன்னிறுத்துவது. மேலும் மீண்டெழ முயற்சிக்கும் கதைகளை (Surviving stories) இலக்கியமாக்குவது என இவை நிகழ்வது அவசியம்.  இனங்களுக்கிடையேயான  பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கையட்டல், மீள்கட்டமைப்பு மற்றும் மலையகம், முஸ்லீம், வடகிழக்கு தமிழர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவம்   போன்ற கருப்பொருள்கள் இன்னும் போதிய அளவில் பதிவுசெய்யப்படாமல், விவாதிக்கப்படாமல் உள்ளன. இவற்றைப் பேசாமல்,   இனத்தூய்மைவாதம் பேசுகின்ற ஆரோக்கியமற்ற போக்கே இன்னமும் தொடர்கிறது. இந்தப் போக்கானது, அடுத்த தலைமுறையினரையும் இன்னொரு பேழிவுக்கும் பின்னடைவுக்குமே  அழைத்துச் செல்லக்கூடியது.  மாற்றாக, மானுட விழுமியங்களை நோக்கியதாக  அமையும்போதே அது உலக இலக்கியம் என்ற நிலையை எட்டக் கூடியதாக இருக்கும்.

இதை விடுத்து தொடர்ந்தும் பிறர் மட்டும் விரலை நீட்டும் எழுத்துகளாக இருந்தால் அவற்றுக்குப் பெறுமதியோ ஈர்ப்போ இருக்காது.  போரிலும் போராட்டத்திலும் என்ன நடந்தது என்பதை அறிக்கையிடுவது ஆவண மதிப்புடன் சுருங்கி விடும். மேற்சொன்னவை அதிகமும் ஈழத்தமிழர்களின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டது.

இந்த யுத்தத்தின் அனுபவங்களை இன்னொரு கோணத்தில் பெற்ற – பார்க்கின்ற – முஸ்லிம்களின் எழுத்துகள் வேறு விதமானவை. அவை தமிழ், சிங்களம் என்ற இரட்டை அதிகாரத் தரப்புகளின்  ஒடுக்குமுறையைப் பற்றியவை. அவற்றின் அரசியலும் இலக்கிய முன்வைப்பும் வேறானது. மலையகத்தின் இலக்கியமும் இப்படித்தான், சற்று வேறுபாடுடையது. மலையகம் யுத்தப் பிராந்தியத்துக்கு அப்பாலானது என்பதாலும் அவர்கள் இன்னொரு அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர் என்பதாலும் இந்த வேறுபாடுகள் உண்டு. மலையகத்தில் நிலமற்ற நிலையும் வாழ்க்கை நெருக்கடியும் ஊதியக்குறையும் தீராப்பிரச்சினையாக நீடிக்கின்றன. போர் முடிவுக்கு வந்த பின், இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதார நெருக்கடியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு இன்னமும் விளிம்பு நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பேசும் போக்கை பலரும் கவனப்படுத்த விளைகிறார்கள்.  இதைக்குறித்தே அவர்களுடைய கதைகளும் கவிதைகளும் அதிகமாகப் பேசவிளைகின்றன. ஆனாலும் அவர்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் யுத்தத்தின் பாதிப்பை ஓரளவுக்கு எதிர்கொள்ள நேரிட்டவர்கள்.

இப்படி ஒவ்வொரு தரப்பும் சந்தித்த நெருக்கடிகளுக்கும் இழப்புகள், காயங்களுக்கும் ஏற்றமாதிரி அவ்வத் தரப்பின் பிரதிகள் உருப்பெற்றிருக்கின்றன. எல்லாவற்றிலும் பங்காளிகளாக இருக்கும் சிங்களத் தரப்பைப் பற்றியும் நாம் பேச வேண்டும்.   

2. இலங்கையில் உள்ள பிராந்திய (மலையகத் தமிழர், முஸ்லிம்கள், வடக்குக் கிழக்குத் தமிழர்கள்) இலக்கிய வடிவங்களை எப்படிக் கவனிக்கிறீர்கள்? 

இலங்கையின் பிராந்திய இலக்கியம் சமூகப் பிராந்தியமாகவும் புவியியற் பிராந்தியமாகவும் இருவகைப்பட்டுள்ளது.  சமூகப் பிராந்திய நோக்கில் பார்த்தால், ஒவ்வொரு சமூகத்திற்கும் உள்ள தனித்தன்மைகளும் வகைப்பாடுகளும் வெவ்வேறானவையாகவே உள்ளன. பண்பாடு, சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள், வாழ்க்கைமுறை, மொழிப்பிரயோகம் என ஒவ்வொன்றுக்குமிருப்பது  தனித்தனியானவை; வேறுபட்டவை.

‘மலையக இலக்கியம்’, சமூகப் பிராந்தியமாகவும் (Social region) புவியியற் பிராந்தியமாகவும் (Geographical region) இருநிலைகளில் இணைந்து தொழிற்படுகிறது. இந்திய வம்சாவழியினராகவும் தோட்டத்தொழிலாளர்களாகவும்  ‘மலையகத்தமிழர்’ என்ற தேசிய இனத்தவர்களாகவும் அவர்களுடைய அடையாளமும் அரசியலும் உள்ளது. இலக்கியமும் இந்த அப்படையிலானதே! ஆனால், இந்த அடையாளம் மிகச் சிக்கலானது. துயரும் அவலமும் நிறைந்தது. அதற்கான வகையில் போராட்ட வரலாற்றையும் கொண்டது. சி.வி. வேலுப்பிள்ளை, தெளிவத்தை யோசப், என். எஸ். எம். இராமையா போன்ற மூத்த தலைமுறையினர் தொடக்கம் இன்றைய தலைமுறையினரான சு. தவச்செல்வன், ஜெயசீலன், வே. தினகரன் வரை மலையக மக்களின் வாழ்க்கைச் சவால்களையும் பண்பாட்டையும் எழுதியளித்துள்ளனர்.

‘முஸ்லிம்களின் இலக்கியத்தில்’ சமூகப் பிராந்தியமே கூடுதலான தொனிப்பைக் கொண்டிருக்கிறது. ‘சோனகச் சமூகத்தினர்’ எதிர்கொள்கின்ற நெருக்கடிகளும் அவர்களுடைய வாழ்க்கையும் அவர்களுடைய எழுத்தில் முதன்மையாக உள்ளன. இதில் ஒரு சிறிய வேறுபாட்டைப் பற்றியும் நாம் பேச வேண்டும். வடக்குக் கிழக்கு முஸ்லிம்களின் அனுபவமும் வாழ்க்கையும் பண்பாட்டம்சங்களும் அரசியல், சமூகப் பிரச்சினைகளும் வேறானது. வடக்குக் கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் எழுத்தில் உள்ள அடையாளங்களும் முன்னிலைப்படுத்தல்களும் வேறுபட்டது. அவரவர் வாழ்கின்ற புவியியற் பிராந்தியத் தன்மையும் அங்கு நிலவும் அரசியல், சமூகச் சூழலும் இங்கே செல்வாக்குச் செலுத்துகின்றது. வடக்குக் கிழக்கில் உள்ள முஸ்லிம் எழுத்தாளர்களிடத்திலிருந்து வருகின்ற பிரதிகளில் விவாதிக்கப்படும் (வெளிப்படுத்தப்படும்) உள்ளடக்கமும் தொனியும் பெரும்பாலும் அரசு – புலிகள் அல்லது தமிழ்த்தரப்பினர் என்ற எதிர்நிலைகளைப் பற்றியும் சிங்கள இன ஒடுக்குமுறையைப் பற்றியும் பேசுவதாக இருக்கும். வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களிடமிருந்து வெளியாகின்ற பிரதிகளின் அனுபவமும் வெளிப்பாடுகளும் இதற்கு வெளியே சற்று வேறானதாக இருக்கும். அவை இந்த அரசியலைப் பேசுவது குறைவு. பொதுவாக அவற்றில் அரசியல் அழுத்தம் குறைவு. தாம் வாழ்கின்ற சிங்களச் சமூகச் சூழலில் நிகழும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் அவற்றின் அனுபவத்தையும்தான் அவை அதிகமாகப் பேசுகின்றன.

இவை இரண்டுக்கும் அப்பால், ‘ஈழத்தமிழர்கள்’ எனக் குறிப்பிடப்படுவோரின் பிரதிகள் இன்னொரு வகையானவை. அவை தமிழ்த்தேசியவாதம், சாதிய எதிர்ப்பு, சிங்கள இனவாதத்துக்கு எதிரான தொனிப்பு போன்றவற்றை அதிகமாகக் கொண்டவை. ஈழத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் இதுவே பெரும்போக்காகக் கட்டமைக்கப்படுகிறது. இது விவாதத்திற்குரியது. இவற்றிலும்  வடக்குக் கிழக்கு என புவியியற் பிராந்தியத்தினதும் உயர்சாதியினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் எனச் சமூகப் பிராந்தியத்தினதும்  செல்வாக்குகள் உண்டு. தேசிய இனப்பிரச்சினைக்கு அப்பால், பிராந்திய ரீதியான வாழ்க்கைமுறையையும் பண்பாட்டையும் வேறுபட்ட உளநிலையையும் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகின்ற பிரதிகளில் அதிகமாகக் காண முடியும். தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்தும் செறிந்தும் வாழ்கின்ற பிராந்தியம் என்பதால், அந்தச் சமூக, பண்பாட்டு, அரசியற் சூழலும் அங்குள்ள புவியியல் அமைப்பு மற்றும் கிழக்கின் பண்பாட்டுக்கூறுகளும் வேறானது. இவற்றை கிழக்குப்பிராந்திய எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன.

அப்படித்தான் வடக்கிலும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள வன்னிப் பிராந்தியப் படைப்புகளிலும் வேறுபாடுகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் சாதியம், பெண்ணொடுக்குமுறை போன்றவை தீவிர நிலையில் இருப்பதால், அவற்றைப் பற்றிய உரையாடல்களும் பிரதிகளும் அதிகமாக நிகழ்கின்றன. அத்துடன், தீவிரத் தமிழ்த்தேசியவாத அரசியல் வேட்கையைப் பிரதிபலிக்கும் களமாக யாழ்ப்பாணம் இருப்பதால், அதனுடைய தொனிப்பு வடக்கில் அதிகமுண்டு. இதுவே புலம்பெயர் இலக்கியத்திலும் அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. விலகல்களும் உள்ளன. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சக்கரவர்த்தி, விமல் குழந்தைவேல், ஸர்மிலா ஸெய்யித், மாஜிதா போன்றோரின் பிரதிகள் இந்த விலகலுக்குரியவை. இவர்கள் அனைவரும் கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.

பின்நவீனத்துவ எழுத்துகளும் பரிசோதனை முயற்சிகளும் அதிகமாகக் கிழக்கு மாகாணத்திலிருந்தே வருகின்றன. மஜீத், மிஹாத், த. மலர்ச்செல்வன், திசேரா, கௌரிபாலன், நஸ்புள்ளா, சாஜித், றியாஸ் குரானா எனப் பலர் புதிய வடிவங்களிலும் புதிய கோட்பாடுகளிலும் பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறார்கள். இராகவன், ந. மய+ரரூபன் என வடக்கிலும் சிலர் உள்ளனர். ஆனால், மிகக் குறைவு. வடிவ ரீதியாக இயல்பான பரிசோதனைகளை கவிதையில் நிலாந்தனும் செய்து வருகிறார்.

இவையெல்லாம் வெவ்வேறு கிளைகளிலிருந்து ஊற்றெடுத்தோ பெருகியோ வந்து சேர்கின்ற நதிகளே. இவை வந்து சேர்வது ஈழத்தமிழிலக்கியத்துக்கே என்ற வகையில் அதற்கு வளமும் சிறப்பும் அதிகம்.

இலக்கியமும் கலையும் எப்போதும் பன்முகத்தோடிருக்க வேண்டும். முரண்களும் இணைவுமே இவற்றின்  அடிப்படையும் ஆதர ருசியும். எனவே இந்தப் பிராந்தியத் தன்மைகள் அவசியமாக இருக்க வேண்டியது.

3. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளில் இன்னும் நினைவு, இழப்பு, இடம்பெயர்வு ஆகியவை என்ன மாதிரியான பரிணாமங்களை அடைந்துள்ளது?

ஒடுக்குமுறை நிகழும் சமூகங்களின் வாழ்க்கையிலும் அரசியல் வெளியிலும் இழப்பும் இடப்பெயர்வுகளும் முக்கியமானவை. அவற்றைக் கவனப்படுத்தி, உறுதிப்படுத்திக் கொள்வது நினைவுகளே. குறிப்பாக, அதிகார வர்க்கம் தனது தேவைகளுக்காக வரலாற்றை மாற்றவோ, மறைக்கவோ முயலும்போது, அதனை உண்மையோடு அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நினைவுபடுத்துதல்களும் மறதிகள் மற்றும் மறக்கடிக்கப்படுவதற்கான போராட்டமுமாகும். ஆகவே நினைவு கொள்ளல், நினைவு படுத்துதல் தவிர்க்க முடியாதது. “அதிகாரத்துக்கு எதிராக மனிதர்கள் போராடுவது என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டம்” (The struggle of man against power is the struggle of memory against forgetting) என புகழ்பெற்ற நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் கருத்தை இங்கே நினைவுபடுத்துகிறேன். ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. உணவுக்கு உப்புச் சேர்க்கப்படுவது அவசியம். அதற்காக உப்பிலேயே உணவைத் தயாரித்து விட முடியாதல்லவா! அதைப்போலவே இழப்புகள், இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் என்ற அலைவுகளும்.

எதையும் எல்லை மீறிச் சொல்ல விளைந்தால் அது புலம்பலாகவும் ஒப்பாரியாகவும் மாறி விடும். துக்கத்தையும் கூட ஒரு எல்லைக்குமேல் அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தால் யாரும் அதைப் பொருட்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

4. போர், இனவாதம், தேசியம் போன்ற கருப்பொருட்கள் இலக்கியத்தில் எவ்வாறு சொல்லப்படுகிறது? இன்னும் எவ்வாறு சொல்லப்பட வேண்டும்? என நீங்கள் கருதுகிறீர்கள்?

ஒடுக்குமுறையும் அரசியல் முரண்களும் தேசியப் பிரச்சினைகளும் புதியவையல்ல. அவற்றை இலக்கியத்தில் பேசுவதோ எடுத்தாள்வதோ புதிதல்ல. அவற்றைப் பேசும் – கையாளும் – முறைமையும் விதமுமே புதியது. ஈழத்தில் அதை நாம் திருப்தியாக இன்னும் காணவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தாம் ஏதோ ஒரு அரசியற் தரப்பின் பிரதிநிதிகளாக நின்றே பேச விளைகிறார்கள். அதனால் இவற்றின் பன்மைத்துவம், பல் பரிமாணத்தன்மை போன்ற நல்லம்சங்கள் காணாமல் போய் விடுகின்றன. இதைமீறி அல்லது இதிலிருந்து விலகி நிற்கும் குரல்களும் உண்டு. அவை மெலிந்து, நலிந்தவையாக உள்ளன. அவர்களால் சுயாதீனமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் செயற்பட முடியவில்லை. சூழலின் மீதான அச்சமும் தயக்கமும் அவர்களைச் சுய கட்டுப்பாட்டுக்குள் தள்ளி விடுகின்றன. இதை மீறி வந்தால் (எழுந்தால்) சிறப்பான பல வரவுகள் கிடைக்கும்.

சற்று விளக்கமாகச் சொல்வதென்றால், வரலாற்றில் போர் பற்றிய பல நோக்கிலான பிரதிகள் உலகம் முழுவதும் வந்துள்ளன. அவற்றை மீளப்பேசாமல், புதியதாக நாம் பேசவேண்டும். அப்படித்தான் இனவாதத்தைப் பற்றியும் தேசியவாதத்தைப் பற்றியும் புதிய கோணத்தில் நோக்குவது அவசியம். எதைப்பற்றிப் பேசுவதாக அல்லது எழுதுவதாக இருந்தாலும் அது புதிய நோக்கில், புதிய அனுபவத்தில் விளைந்தால் மட்டுமே கவனம் பெறும். ஆகவே அதை நோக்கி விரிவு கொள்ள வேண்டும்.

கலையிலும் இலக்கியத்திலும் வாய்பாடுகள் காலாவாதியானவை; மதிப்பிழந்தவை. புதியனவற்றுக்கு மதிப்பும் கவனமும் அதிகமுண்டு.  

5. இலங்கை எழுத்தாளர்களிடையே தாயக நினைவுகளும் புலம்பெயர்ந்து சென்ற புதிய நாட்டின் அனுபவங்களும் எவ்வாறு வெளிப்படுகிறது என பார்க்கிறீர்கள்?

புலம்பெயர் இலக்கியத்தில் தாயக நினைவுகளில் திளைத்தல் (nostalgically) அல்லது வேதனையுறுதல் முக்கியமான ஒரு பண்பாக நீண்டகாலம் (ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல்) இருந்தது. இப்பொழுது அது அதை விட்டு, அந்தந்தத் தேசங்களில் உள்ள வாழ்க்கை, அங்குள்ள பண்பாடு, அரசியல், சமூகச் சூழல் பற்றியதாக இணைந்து வெளிவரத் தொடங்கி விட்டது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து எழுதும் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள், அங்குள்ள ப+ர்வகுடிகளைப் பற்றியும் அவர்களுக்கும் தமக்கும் இடையிலான உரிமைகளற்ற, ஒடுக்கப்பட்ட, அதிகார நெருக்கடிகள் மிக்க நிலையை – அதன் ஒத்த தன்மைகளைப் பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். ஆஸ்திரேலியப் ப+ர்வமக்களான அபோரிஜிக்களைப் பற்றி ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். அப்படித்தான் கனேடியப் ப+ர்வகுடிகளைப் பற்றி அங்குள்ள ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலரும் எழுதி வருகிறார்கள்.

தாயகத்தில் நிலவும் தணிக்கைகளுக்கு (Censorship) அப்பால், சுதந்திரமாக எழுத முடிந்தது என்பதால் இவ்வகை இலக்கியப் போக்கில் புகலிட/புலம்பெயர் இலக்கியப்பங்களிப்பு மிக முதன்மையானதாகும். தாயகத்தில் எழுத முடியாத தணிக்கையற்ற (Uncensored) அரசியல் விமர்சனங்களையும், போரின் பின்னான அலைந்துழல்வையும் புலம்பெயர் எழுத்தாளர்களே அதிகம் எழுதினர்.

நேரடிக் கூற்றாகச் சொல்ல முடியாத துயரங்களைச் சொல்ல மாய யதார்த்தவாதம் (Magical Realism) மற்றும் புனைவுசார் குறியீடுகளை எழுத்தாளர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்

புலம் பெயர் இலக்கியம் கடந்த பத்து ஆண்டுகளில் (2010 களின் பின்) புதிய தளங்களை நோக்கி விரியத் தொடங்கி விட்டது. புதியதொரு பிராந்தியத்தைத் தமிழுக்குத் தருகிறது. இந்த நிலையில் இதை ‘ஆறாம்திணை’ என்று கவிஞர் சேரனும் ‘உலகத் தமிழ் இலக்கிய வரைபடமொன்றை வரையக் கூடிய சூழல் இன்று அவசியமாக உள்ளது’ என பேராசிரியர் அ. ராமசாமியும் கூறிவருவது கவனத்திற்குரியது.  

6. முகநூல், இன்ஸ்டா, ஈ புக் போன்ற டிஜிட்டல் வாசிப்பு யுகத்தில் இலக்கியம் மற்றும் பதிப்புத்துறை எவ்வாறு உள்ளது என நீங்கள் பார்க்கிறீர்கள்?

இந்த டிஜிட்டல் யுகம் என்பது எழுத்தையும் வாசிப்பையும் மூச்சாகக் கொண்ட யுகம் அல்ல; இது பார்த்தல், கேட்டல் என்ற ‘காட்சிகாண் – ஒலி கேண்’ (Audio-Visual) யுகமாகும். ஆழ்ந்து நோக்கின், எதையும் தீவிரத்தன்மையுடன் அணுகாமல் வேடிக்கையாகப் பார்க்கின்ற ஒரு பிம்பங்களின் யுகமாகவே இது தெரிகிறது. பிரெஞ்சுச் சிந்தனையாளர் ழான் போத்ரியாத் (Jean Baudrillard) சுட்டிக்காட்டுவதைப் போல அசலை விட நகலுக்கே (Simulation) மதிப்பும் கவர்ச்சியும் அதிகமாகிவிட்ட காலம் இது.

இதனால் இன்றைய தலைமுறையினரிடம் ஒரு பிரதியை வாசித்து, விவாதிக்கும் பண்பு குறைந்து, எதையும் உடனடியாக நியாயப்படுத்தும் தட்டையான போக்கே பெருகியுள்ளது. மனித நாகரிகத்தின் வளர்ச்சி என்பது பார்த்தல், கேட்டல் என்ற ஆதிநிலையிலிருந்து வரைதல், எழுதுதல், படித்தல் (வாசித்தல்) என்றே முன்னகர்ந்தது. ஆனால், இன்றைய தொழில்நுட்ப விநோதங்கள் நம்மை மீண்டும் ‘பார்த்தல், கேட்டல்’ என்ற ஆதிநிலைக்கே பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை மனிதனின் கவனத்தைச் சுரண்டும் ‘கவனப் பொருளாதாரத்தை’ (Attention Economy) மையமாகக் கொண்டு இயங்குகின்றன.

இதனால்,  ஒரு பிரதியை வாசித்து, அதைத் தமக்குள் செரித்து, உரையாடி, விமர்சிக்கும் பண்பு குறைந்துபோய், எதையும் தட்டையாக அணுகும் போக்கும், உடனடித் தீர்ப்புகளை வழங்கும் சுபாவமும் பெருகியுள்ளது. முக்கியமாக ‘ரீல்ஸ்’ (Reels) மற்றும் துண்டுப் பதிவுகள் வழங்கும் உடனடிக் கிளுகிளுப்பையும், ‘உடனடி எதிர்வினையையுமே’ (Instant Gratification) பலரும்  நாடுகிறார்கள். இலக்கியம் கோரும் ‘மெதுவான வாசிப்பு’ (Slow Reading) கைவிடப்பட்டு, தகவல்களைச் மேலோட்டமாகச் சேகரிக்கும் பழக்கமே ‘வாசிப்பு’ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. 

சமூக ஊடகங்களில் உடனடியாகக் கிடைக்கும் ‘லைக்குகள்’ (Likes) மற்றும் பாராட்டுக்களுக்காக எழுதத் தூண்டப்படுவதால், எழுத்தாளர்கள் தங்களின் எழுத்தில் சுயதணிக்கையையோ அல்லது வாசகர்களைத் திருப்திப்படுத்தும் ‘மலிவான சமரசங்களையோ’ செய்ய நேரிடுகிறது. இதனால் எழுத்தின் தத்துவார்த்த ஆழம் குறைகிறது.

காகித விலை உயர்வு, அச்சுப் புத்தகங்களின் விற்பனைச் சரிவு போன்ற காரணங்களால் தீவிர இலக்கிய வெளியீடுகளும், சிறுபத்திரிகைகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன.

சவால்கள் இருப்பினும், காட்சி ஊடகங்களால் இலக்கியத்தை ஒருபோதும் முழுமையாகப் பிரதியீடு செய்துவிட முடியாது என்பதே என்னுடைய நம்பிக்கை. ஏனெனில், சினிமா மற்றும் காட்சி ஊடகங்களுக்கு எல்லைகளும், சட்டகங்களும் (Frames) உண்டு. அவை பிம்பங்களை நம் கண்முன்னே தயார் செய்து கொடுத்துவிடுகின்றன; சிந்தனைக்கான இடைவெளியைக் குறைத்துவிடுகின்றன.

ஆனால், எழுத்தின் மற்றும் இலக்கியத்தின் வெளியோ பிரபஞ்ச விரிவுக்கும் அப்பாலானது. ஒரு வரியை வாசிக்கும்போது வாசகர்கள் தம் கற்பனைத்திறனால் தமக்கான உலகத்தை அள்ளியெடுத்து விரித்துக் கொள்கிறார்கள். அந்தச் சுதந்திரத்தைக் காட்சி ஊடகங்களால் தர முடியுமா என்பது கேள்வியே!.

புத்தகப் பதிப்பு முறைகள் மாறலாம்; காகிதத்தில் படித்த மனிதர் திரையில் படிக்கலாம்; அல்லது ஆடியோவாகக் கேட்கலாம். வடிவங்கள் எதுவாக இருப்பினும், மனித மனத்தின் அடியாழத்துத் துயரங்களையும், மானுட விழுமியங்களையும், தத்துவார்த்தத் தேடல்களையும் பேசும் தீவிர எழுத்தின் மதிப்பும், அறிவின் விதியும் என்றும் வீழ்ச்சியடையாது. டிஜிட்டல் யுகத்தின் பிம்பப் போலிமைகளைக் கடந்து, இலக்கியம் தனது அடுத்தகட்டப் புதிய பரிமாணத்தை நோக்கி நிச்சயம் பயணிக்கும்.

பனை ஓலைகளிலும் களிமண் பலகைகளிலும் எழுதப்பட்ட காலம் ஒன்று. குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திர வருகைக்குப் பின் காகிதத்தில் வாசித்த காலம் இன்னொன்று. இது  திரைகளிலும் (E Books), ஆடியோ வடிவிலும் (Audio books) நுகரப்படும் காலம். தொழில்நுட்பம் வாசிக்கும் கருவிகளை மாற்றியிருக்கலாமே தவிர, மனிதரின் சிந்தனைத் தேவையை மாற்றவில்லை. காகிதத்தில் வாசித்தாலும் திரையில் வாசித்தாலும், ஒரு நல்ல நாவல் அல்லது கவிதை தரும் அகக் கிளர்ச்சியும் தத்துவார்த்தத் தேடலும் ஒன்றுதான்.

அறிவின் விதி எப்படியானது என்பதைத் தொடர்ந்து கவனிக்கலாம். இதுவும் ஒரு பயணம்தான். 

பல்லவி இதழுக்கான நேர்காணல்June 2026

பகிருங்கள் Facebook WhatsApp

கருத்து எழுதுங்கள்