மாஜிதாவின் “சுவை” பெண் வெற்றியின் கொண்டாட்டம்
பழகிய வழியில் பயணிப்பதை விடப் புதிய வழியில் பயணிக்கும்போது தெரியும் காட்சிகள் அதிக ஈர்ப்பை அளிப்பதுண்டு. அதிலுள்ள புதுமையே கூடுதலான கவனத்தை உண்டாக்குவது. மனித மனத்துக்கு எப்போதும் புதுமையில் ஈடுபாடு அதிகம். புதிய ஆடைகள், புதிய ஆபரணங்கள், புதிய வாழ்க்கை, புதிய சூழல், புதிய பொருட்கள், புதிய எண்ணங்கள், புதிய வடிவங்கள் என இந்தப் புதுமையின் நாட்டம் கட்டற்று விரிந்து கொண்டேயிருப்பது. ஆசையோடு வாங்கி, இன்று நம்முடைய கையில் வைத்திருக்கும் கைபேசி (Mobile phone) அடுத்த ஆறு மாதத்தில் அதனுடைய கவர்ச்சியை இழந்து விடுகிறது. பாவிக்கக் கூடியதாக இருக்கும்போதே புதியதை (New verson) வாங்கிக் கொள்கிறோம். கலை, இலக்கியத்தில் இது இன்னும் உச்சம். புதிய உள்ளடக்கத்தை, புதிய வெளிப்பாட்டை (மொழிதலை), புதிய வடிவத்தை வாசகர்களும் பார்வையாளர்களும் எதிர்பார்க்கிறார்கள். கேட்பவர்களும்தான். என்பதால் புத்தாக்கத்தையும் புதிதளித்தலையுமே கலையும் இலக்கியமும் எப்போதும் தம்முடைய விதியாகக் கொண்டுள்ளன. சிருஷ்டி அல்லது படைப்பு என்று அதைச் சொல்வதே முன்னில்லாத ஒன்றின் புதிதையாகும். அந்தப் புதிதளித்தலே அதற்குரிய மதிப்பும். ஆனால் அது அதிர்ச்சிகரமான வெளிப்பாடாக இல்லாமல், ஆழமும் விரிவும் அடிப்படையான தகுதியும் கொண்டிருக்க வேண்டும். என்றால்தான் அவற்றுக்கு எப்போதும் நிரந்தர மதிப்புண்டு. கிளாஸிக் படைப்புகள் அத்தனையிலும் இதனைக் காணலாம். ஏறக்குறைய இந்த அடிப்படைகளைக் கொண்டதாக அண்மையில் மாஜிதா எழுதிய ‘சுவை’ (காலச்சுவடு மார்ச் 2024) என்ற கதை உள்ளது.
தமிழ்ப் புலம்பெயர் இலக்கியம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த நனவிடை தோயும் இலக்கியப்போக்கிலிருந்து விடுபட்டு, தாம் வாழ்கின்ற கள – காலச் சூழலைப் பிரதிபலிக்கும் எழுத்துகள் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. சிறுகதைகளில் ஷோபாசக்தி, ப.அ ஜெயகரன், ப. தெய்வீகன், கலாமோகன், அனோஜன் பாலகிருஸ்ணன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழ்நதி, குரு அரவிந்தன், அ. முத்துலிங்கம், ஆ.சி. கந்தராஜா, ஜீவகுமாரன், வ.ந. கிரிதரன், பொ. கருணாகரமூர்த்தி, சுமதி ரூபன் (கறுப்பி சுமதி) நோயல் நடேசன், மெலிஞ்சிமுத்தன், நிருபா, கலா சிறிரஞ்சன், நிவேதிதா போன்றோர் இந்த மாற்ற வழியில் முக்கியமானோர். சிலர் தாம் வாழ்கின்ற நாடுகளில் பிற சமூகங்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையிலான அரசியல், பண்பாட்டு உராய்வுகளைக் கவனித்து எழுதுகின்றனர். சிலர் புதிய திணையில் வேர்கொள்ள முற்படும் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். சிலர் புதிய களத்தின் ருசியை எழுதுகின்றனர். சிலர் அந்த நாடுகளில் உள்ள பிற சமூகங்களைப் பற்றி, குறிப்பாக அங்குள்ள பூர்வகுடிகளைப் பற்றி எழுதுகிறார்கள். கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து எழுதுவோர் பெரும்பாலும் இதில் அடங்குவர். இதை விட தாம் வாழ்கின்ற நாடுகளிலுள்ள அதிகார மையங்களான இனம், மதம், வர்க்கம், அரசு போன்றவற்றிற் தொழிற்படும் மேலாதிக்கத்தை அல்லது அவை செயற்படும் நியாயத்துக்குப் புறம்பான நிலையைச் சுட்டும் புனைவுகளைச் சிலர் செய்கிறார்கள்.
மாஜிதாவின் ‘சுவை’ கதை, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டது. அங்கே நிலவுகின்ற வெள்ளையின மேலாதிக்க நுண்ணரசியலையும் அகதிக் கோரிக்கையை அணுகுவதில் உள்ள சட்டப் பிரச்சினைகள், அதற்கான அணுகுமுறைகளையும் பேசுகிறது. கூடவே சமபாலுறவு (LGPD) பிரச்சினையையும். ஆக மூன்று முக்கிய பிரச்சினைகளைச் சமனிலையில் வைத்து மிகச் சிறப்பாக கதையை உருவாக்கியுள்ளார் மாஜிதா.
அகதிகளின் விடயத்திலும் பாலுறவு சம்மந்தமான சட்டங்களிலும் பிரித்தானிய அரசும் சட்டங்களும் தாராளத் தன்மையைக் கொண்டிருந்தாலும் அதற்கு வெளியே சமூகச் சூழலிலும் தனி மனிதர்களிடத்திலும் இது எதிர்நிலையில் பல சமயங்களிலும் தொழிற்படுகிறது. சட்டமும் அரசியற் சாசனமும் கல்வியும் முற்போக்கானதாக இருக்க, சமூக யதார்த்தமும் தனி மனித உளநிலையும் பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. இந்த முரண் உலகளாவிய தன்மையைக் கொண்டது. பிரித்தானியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் நிலவும் பொதுப் பிரச்சினை. இலங்கையில் இது இன்னும் தீவிரமானது. சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட – ஏற்றுக் கொள்ளப்பட்ட பல விடயங்கள், சமூக நடைமுறையிலும் தனிமனித உளநிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் முரணாக இருக்கின்றன. இதனால்தான் இலங்கையில் இனவாதம் தொடக்கம் சாதியம் வரை தொடர்ந்தும் கொதிப்போடுள்ளது. சாதி, மத, பால், மொழிச் சமத்துவத்தையெல்லாம் வலியுறுத்தும் அரசியற் சாசனமும் சட்டமும் இருந்தாலும் எதுவுமே பயனற்றவை. நம்பிக்கையில்லாதவை என்று நீடிக்கும் நிலை உள்ளது. சட்டத்தையும் சாசனங்களையும் அர்த்தமாக்குவது அவற்றின் நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ள அதிகாரத் தரப்பினராகும். அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால் சட்டமும் சாசனமும் பாதிக்கப்படுவோரிடத்தில் நம்பிக்கையை இழந்து விடும். பிரித்தானியாவில் இது மென்னிலையில் தொழிற்படும் நிறவாதமாகவும் மேல்வர்க்கக் குணாம்சமாகவும் உள்ளது. இதற்குக் குறியீடாக எட்வேர்ட் என்ற பாத்திரத்தை மாஜிதா உருவாக்கியுள்ளார்.
கதையின் தொடக்கத்திலேயே பிரித்தானாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெள்ளையின சட்ட நிறுவனமொன்றின் பொறுப்பில் உள்ள எட்வேர்ட்டைப் பற்றிய சித்திரத்தைத் தருகிறார் மாஜிதா. எட்வேர்ட்டின் பணிமனையில் வேலை செய்கின்ற இன்னொரு உதவியாளரானா அல்பியும் ஏறக்குறைய எட்வேர்ட்டின் குணாம்சத்தோடு ஒத்தவனே. அங்கேதான் கதையில் இன்னொரு பாத்திரமாக வரும் கதை சொல்லியான இலங்கைப் பெண், சிரமங்களின் மத்தியில் வேலை செய்கிறாள். அவளுடைய இயல்பும் அவள் சந்திக்கும் நெருக்கடியும் அதிலிருந்து மீள்வதற்காக அவள் எதிர்பார்த்திருந்த சூழலும் அதொரு வாய்ப்பாக வந்தமைவதும் கதையின் உயிரான பகுதிகள். கதையில் இலங்கைப் பெண், பிரித்தானியச் சட்டவாளர் மற்றும் உதவியாளர், ஆபிரிக்கப் பெண் என மூன்று வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பாத்திரங்கள் இயங்குகின்றன. ஆனால் நடைமுறை அர்த்தத்தில் இதை இரண்டு பிராந்தியங்களாகவே கொள்ள முடியும். வெள்ளையர் (பிரித்தானியர்) அல்லாத ஆசிய, ஆபிரிக்கர்கள் அனைவரும் ஒரே பிராந்தியத் தன்மைக்குரியவர்கள் என்ற யதார்த்தமே அது. அதுவே கதையிலும் நிகழ்கிறது.
பிற நாட்டிலிருந்து அகதிகளாக வருவோரை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுதல், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குதல், வேலை செய்வதற்கான அனுமதியை அல்லது உரிமையைக் கொடுத்தல் என்றெல்லாம் பிரித்தானிய அரசு தாராளத் தன்மையைக் கொண்டிருந்தாலும் இவற்றை எட்டுவதற்கு ஒவ்வொரு அகதியும் படுகின்ற சிரமங்கள் எளிதானவையல்ல. (இது ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ள பொதுச் சூழலாகும்) இது முதற்கட்டம். அப்படி அகதி ஏற்பு, வேலை செய்யும் உரிமை, குடியுரிமை போன்றவை எல்லாம் சரிவந்தாலும் ஆசிய, ஆபிரிக்க மக்கள் அங்கே மிக நூதனமான முறையில் வேறுபடுத்தப்படுவது இயல்பு. இதை நுட்பமாகக் கவனப்படுத்தியிருக்கிறார் மாஜிதா.
இந்த மாதிரி விசயங்களைப் புனைவில் அதுவும் சிறுகதையொன்றில் கொண்டு வருவது சவாலானது. ஏனென்றால் இது பண்பாடு, அரசியல், அதிகாரம் சார்ந்த தீவிரமான பிரச்சினை. கட்டுரையாக அல்லது நாவலாக எழுதும்போதே இந்தப் பிரச்சினையின் ஆழ, அகலத்தையும் அதன் தீவிர நிலையையும் வெளிப்படுத்த முடியும். ஆனால், சிறுகதையிலேயே இந்தப் பிரச்சினையை மட்டுமல்ல, LGPD யைப் பற்றியும் சிறப்பாகப் பேசி விடுகிறார் மாஜிதா. எங்குமே எதைப்பற்றியும் தனித்து நின்று பிரச்சாரமாகப் பேசும் தொனியில்லை. அனைத்தையும் புனைவுக்குரிய அம்சத்தோடு பேசிக் கொள்கிறார்.
ஆபிரிக்கப்பண்பாட்டுச் சூழலில் (நைஜீரியாவில்) இருந்து பிரித்தானியப் பரப்பிற்குள் அகதியாகவும் LGBD யாகவும் நுழையும் டேயோ என்ற இளம்பெண்ணின் பிரச்சினையைக் கையாள்வதே கதையின் வெளித்தோற்றம். ஆனால் கதையின் தொடக்கம் வேறாக ஆரம்பித்து நமக்கு வேறொன்றை முதலில் காட்டுகிறது. அது // ஏய் மிஸ். கம்யூனிஸ்ட் , உன்னை மிஸ்ட்டர். எட்வேர்ட் அவருடைய கெபினுக்கு கூ
உன்னை மிஸ்ட்டர் எட்வேர்ட் அழை
அகதியாகவும் LGBD யாகவும் நுழையும் டேயோவின் பிரச்சினையைக் கையாளும் இளைய சட்டவாளரான ஆசியப் பெண்ணே கதைசொல்லி. தானொரு இளைய சட்டவாளர், ஆசியப் பெண், பணியிடத்தில் இன்னும் வலுவான இடத்தைப் பெற்றுக் கொள்ளாதவள் என்பதையெல்லாம் கடந்து, துணிச்சலோடு டேயோவின் வழக்கைக் கையாள்வதன் மூலம் தன்னை நிலைப்படுத்தி மேலெழுகிறாள். கூடவே டேயோவையும் வலுப்படுத்தி, அவளுடைய வழக்கை வென்று இருவரும் வெற்றியைப் பெறுகின்றனர். இதற்குள் டேயோவினுடைய பாட்டியின் எதிர்மறையான மனநிலையையும் வென்று விடுகிறாள். சம நேரத்தில் பாட்டி, எட்வேர்ட், அரசு, சட்டம், நீதிமன்றம் எனப்பல நிலைகளில் காணப்படுகின்ற பல பிரச்சினைகளை விவேகம், புத்திக்கூர்மை, துணிச்சல் போன்றவற்றினால் வெற்றி கொள்வதாகக் காட்டுவதன் மூலம் எதையும் நாம் எதிர்கொள்ள முடிந்தால் வெற்றியை எட்டலாம் என்று உணர்த்துகிறது கதை.
தான் ஒரு இளநிலைச் சட்டவாளர், தனக்கு மேலுள்ள எட்வேர்ட்டின் தீர்மானத்துக்கும் உளநிலைக்கும் மாறாக டேயோவின் வழக்கை எடுத்து வெற்றியடைவேன் என்ற தீர்மானத்தை அவள் (கதை சொல்லி) எடுக்கும் இடம் முக்கியமானது. அதுவே கதையின் உயிர். அதிலிருந்தே, அந்தத் தீர்மானப் புள்ளியிலிருந்தே அனைத்தும் நிகழ்கின்றன. கூனியின் விருப்பமே கைகேயின் விருப்பமாகி, அதுவே தசரதனின் தீர்மானமாகி, ராமன் அயோத்தியை விட்டுப் புறப்பட்டது தொடக்கம், ராம – ராவண யுத்தம் வரை சென்றதைப்போல இங்கே அவள் எடுக்கும் அந்தத் துணிகர – சவாலான தீர்மானமே ஏனைய அனைத்துமாகின்றன. மட்டுமல்ல, கதையின் பெரும்பாலான பாத்திரங்கள் பெண்களே. வெற்றியடைவதும் பெண்களே. தோற்கடிக்கப்படுவது எட்வேர்ட் மற்றும் டேயோவின் கணவன் என ஆண்கள் மட்டுமல்ல, அதிகார அமைப்பும் அதனுடைய மனநிலையும்தான்.
வழக்கில் மட்டுமல்ல, அதற்குப் பிறகு அதைப்பற்றி எட்வேர்ட் கேட்கும்போது, “இந்த வெற்றி உங்களால்தான் ஏற்பட்டது. நீங்கள் சொன்ன “காலத்திற்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் நிகழும்போது சுவையையும் ரசனையையும் சட்டத்திற்கும் வழங்க வேண்டும் அல்லவா!” என்று அவர் ஒருபோது அவளுக்குச் சொன்னதையே எட்வேர்ட்டிடம் கேட்டு அவரை மடக்கி விடுகிறாள். இது, எட்வேர்ட் ஏற்கத் தயங்கிய வழக்கை எடுத்து அவரைத் தோற்கடித்தது மட்டுமல்ல, அவர் சொன்னதை வைத்தே அவரை வழக்கிற்கு வெளியேயும் தோற்கடித்ததாகும்.
ஆக, இது பெண்களுக்கு மேலும் ஊக்கத்தையும் தெம்பையும் அளிக்கின்ற கதையுமாகும். அதிலும் தன்பாலுறவுப் பிரச்சினையை பொதுநிலையிலும் சட்டத்திலும் எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதொரு வளர்ச்சியடைந்த உறவு நிலை என்பதையும் உணர்த்திச் செல்கிறார் மாஜிதா.
கதையில் இவற்றையெல்லாம் கவனப்படுத்தி, புதிய பரப்பொன்றைத் திறந்து சர்வதேசத் தன்மை ஒன்றைத் தமிழ்ப்பரப்பில் உருவாக்கியிருக்கிறார் மாஜிதா. தமிழ்ச்சிறுகதையின் இன்னொரு பரிமாணம் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய புதிய விரிதளத்தையே காலம் வேண்டி நிற்பது.
