August 30, 2026·விமர்சனங்கள்· 2

உறைய முடியாக்காலம் சேரனின் கவிதைகள்

எழுதப்படும் காலத்திலும் அதற்குப் பிறகான காலவெளியிலும் உயிர்கொண்டிருக்கும் எழுத்துக்கு ஒளி அதிகம். அந்த ஒளி, அந்த எழுத்தையும் அதை எழுதிய எழுத்தாளரையும் அல்லது கவிஞரையும் காலநீட்சியில் உயிர்ப்போடு வைத்து விடுகிறது. வள்ளுவர், கம்பன், கபிலர், ஔவை, சேக்ஸ்பியர், ஷெல்லி, பாரதி, தாகூர், டோல்ஸ்ரோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகோவ், புதுமைப்பித்தன் எல்லோரும் இந்த வகையில் அமைந்தவர்களே. அவர்களுடைய எழுத்துகளும் அவ்வாறு அமையப்பெற்றவையே. சிந்தனையின் வீச்சும் ஆழ்மனதில் உணரும் சத்தியமும் அதைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் துணிவும் இதற்கு ஆதாரமானவை. இந்த அடிப்படையில்தான் சேரனுடைய கவிதைகளும் சேரனும் கால நீட்சியில் அழியாத, அழிக்க முடியாத ஜீவனாகி விடுகின்றன.

1970 இன் முற்பகுதியில் எழுதத் தொடங்கிய சேரன், 80 களின் முற்பகுதியில் தீவிர கவனத்தைப் பெற்றார். அப்போது எழுதிய கவிஞர்களிடத்தில் அவர் முன்னிலையில் இருந்தார் என்று சொல்லமுடியும். அவருடைய முதற்தொகுதியான “இரண்டாவது சூரியோதயம்” ஈழத்துக்கப்பால் தமிழ்நாட்டிலும் பெருங்கவனிப்பை உண்டாக்கியது. (சேரனுக்கிணையாக இருந்த இன்னொருவர் வ.ஐ.ச.ஜெயபாலன்) இதனால்தான் “கணிப்புக்குரிய ஒரு கவிஞன் வந்து சேர்ந்துள்ளான்” என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி சேரனைப்பற்றி எழுதினார். எவ்வாறு சேரன் அந்த முதல்நிலைக்கு வந்தாரென்றால், அன்றிருந்த சமூக, பண்பாட்டு, அரசியல் வெளியை சேரனுடைய கவிதைகள் கூருடன் ஊடறுத்தன. ‘கைதடி 1979: கோபுரக்கலசமும் பனைமர உச்சியும்’ என்ற கவிதை ஒன்றே போதும் சேரனை, அவருடைய இதயத்தை, அது உற்பத்தி செய்யும் கவிதையை, அதனுடைய உள்ளார்ந்த மற்றும் வெளிப்போந்த குரலை உணர்ந்து கொள்வதற்கு. அன்று யாழ்ப்பாணத்தில் உச்சமடைந்திருந்த சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான – ‘யாழ்ப்பாணத்தனம்’ என்று சொல்லப்படும் வேளாளப்பண்பாட்டு அடையாளத்துக்கு எதிரான குரலின் அடையாளமாகி விட்ட கவிதை இது.

“நிர்வாணம் கொண்டு

தமிழர்கள் அனைவரும்

தெருக்களில் திரிக…” என்று தொடங்கும்போதே கவிதை உக்கிரமடைகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், மனிதக் கீழ்மைத்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத உக்கிரக் கோபத்தின் வெளிப்பாடாகவே கவிதை உருக்கொள்கிறது. ஆனால் இது கவிதைக்கான மொழியில் மிகச் சாதாரண வரிகளே. அதைமீறிக் கவிதையாக ஆக்குவது இதில் – இந்தக் கோபத்தில் – உள்ள சத்தியமாகும். இதுவே கவிதையின் ஒளி. அதுதான் இங்கே இந்தக் கவிதையை உயர்த்துகிறது. தொடர்ந்து வருகின்ற அடுத்த அடிகளைப் பாருங்கள்,

“கவனியுங்கள்

நேற்று மாலை என்ன நடந்தது?

கைதடிக் கிராமத் தெருக்கள் முழுவதும்

மனித, விழுமியம் நாகரிகங்கள்

காற்றில் பறந்தன.

பனைமர உச்சியும் கோபுரக் கலசமும்

உயரவே உள்ளன.

அரசியல் பிழைப்பில் ஆழ்ந்து போயிருக்கும்

அனைவரும் உணர்க

உங்கள் முதுகுநாண் கலங்கள் மீதும்

சாதிப் பிரிவினைப் பூஞ்சண வலைகள்.

கங்கை கொண்டு

கடாரம் வென்று

இமய உச்சியில் விற்கொடி பொறித்துத்

தலை நிமிர்வுற்ற தமிழர் ஆளுமை

குனிந்த அலையுடன், அம்மணமாகத்

தெருக்களில் திரிக.

ஆலயக் கதவுகள்

எவருக்காவது மூடுமேயானால்

கோபுரக் கலசங்கள்

சிதறி நொறுங்குக.

யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே

உனது உலகம் மிகவும் சிறியது

கிடுகு வேலி

வேலியில் கிளுவை

எப்போதாவது வேலியில் பூக்கும்

சிவப்பு முள்முருக்கு.

…..

ஆயிரம் ஆயிரம் கோயில் கதவுகள்

உன்னை உள்ளே இழுத்து மூடின.

நிர்வாணமாக

உயர்த்திய கையுடன்

தெருக்களில் திரிக

தமிழர்கள்

இந்தத்

தமிழர்கள்”

கவிதையிலுள்ள சத்தியக் கோபம் தீயாக எரிகிறது. அது கவிதையைத் தீயாகவே   மாற்றி விடுகிறது. ‘இத்தகைய போக்கு பெரும்பாலான முற்போக்குக் கவிஞர்களிடத்தில் (குறிப்பாக வானம்பாடிக் கவிஞர்களிடத்தில்) அல்லது அரசியற் கவிதைகளில் வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். இதிலென்ன புதுமை உள்ளது? அரசியற் கட்சிகளின் துண்டுப் பிரசுரத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடுண்டு?’ என்று யாரும் கேட்கலாம். கவிதை அதற்கப்பால் தொடந்து  செல்வதைக் கவனிக்க வேண்டும்.

அது மானுட அநீதிக்கு எதிரான ஒரு தீர்க்கமான கலக அரசியற் குரலாக மேற்கிளம்புகிறது. மானுட அநீதியை (ஒடுக்குமுறையை, அதை மேற்கொள்ளும் அதிகாரத்தை) க் கொண்டிருக்கும் பண்பாட்டையும் அந்தப் பண்பாட்டைக் கொண்டிருக்கும் சமூகத்தையும் கேலிப்படுத்தி எதிர்க்கிறது. முதலில் அது ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அதனுடைய வீரயுகப் பண்பாட்டுப் பெருமிதங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏறக்குறைய இதே தொனியில் ராஜராஜசோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோயிலைப்பற்றியும் இன்குலாப்பினுடைய ஒரு கவிதை உண்டு. சற்று வேறான ஆனால், இந்த இடத்தில் நினைவெடுத்துப் பேச வேண்டிய இன்னொன்று, மஹாகவியின் ‘தேரும் திங்களும்’.   அடிமை, குடிமைகளை வைத்துக் கொண்டு பண்பாட்டுப் பெருமிதங்களை நாம் பேச முடியாது என்பதே இந்த மூன்று கவிதைகளினதும் சாராம்சமாகும்.

அடுத்த கட்டமாக “யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே, உனது உலகம் மிகவும் சிறியது” என விளித்து, யாழ்ப்பாணச் சமூகத்தை நேர்முகமாக விமர்சிக்கிறது சேரனின் கவிதை. சாதியின் பேரால் ஒரு தொகுதி மக்களுடைய உரிமைகள் மறுக்கப்படுதற்காக “ஆலயக் கதவுகள்  எவருக்காவது மூடப்படுமேயானால் கோபுரக் கலசங்கள் சிதறி நொறுங்குக” என்று சபிப்பது, பிரகடனப்படுத்துவது அந்தச் சமூகத்திற்குள்ளிருந்து கலகம் செய்யும் வலுவானதொரு போர்க்குரலாகும். இந்தப் போர்க்குரல் சாதாரணமானதல்ல. “தனியொருவருக்கு உணவில்லை எனில் இந்த  ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியின் குரலுக்குச் சமனானது. “கவிஞன் பெருமூச்சு விட்டால் வானமும் தீப்பற்றும்” என்று சோலைக்கிளி சொன்னதும் ஏறக்குறைய இதையே. உண்மைதான். கவிஞர்கள் தம்முடைய குரலை வரலாற்றில் அழியாத முறையில் ஏற்றி விடக் கூடியவர்கள். பண்பாட்டின் வேர்களில் அவர்கள் மொழியாலும் சிந்தனையாலும் நிலைபெறுகின்றவர்கள். என்பதால் கவிஞர்களின் சீற்றத்துக்கு வலு அதிகம். 

வெளியில் மட்டுமல்ல, தன்னுடைய சமூகத்திற்குள்ளிருக்கும் ஜனநாயக மறுப்புக்கெதிராக, அதனுடைய அதிகாரத்துக்கு எதிராக, மானுடக் கீழ்மைக்கெதிராகவும்  கலகம் செய்வது எழுத்தாளரின் – கவிஞரின் – அறிஞரின் – முதற்பண்பு. “விதியே விதியே தமிழ்சாதியை என் செய நினைத்தாய்? எவ்வகை விதித்தாய்?” என்று பாரதி குமுறுவது இந்தப் பண்பின் அடிப்படையிலேயே. இதையே சுந்தர ராமசாமியும் (ஜே.ஜே. சிலகுறிப்புகள்) ராஜ் கௌதமனும் டானியலும் என்.கே. ரகுநாதனும் செய்தனர். உலகம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்களின் பொதுக்குணவியல்பு இது. நம்முடைய குறைகளையும் தவறுகளையும் குற்றங்களையும் களைவதே – அதற்கெதிராகப் போராடுவதே முதற்பணி. அதைச் செய்யாமல்,  அவற்றைக் கண்டும் காணாமலும் இருப்பது அநீதியாகும். அப்படி இருந்து கொண்டு நமக்கு எதிரிலுள்ள தரப்பின் அநீதியைப் பற்றியும் ஒடுக்குமுறையைப் பற்றியும் நாம் பேச முடியாது. இதனால்தான் “முதலில் எங்களுக்கு (சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான) உரிமையைத் தாருங்கள். எங்களைச் சமமாக நடத்துங்கள். அதற்குப் பிறகு சிங்கள ஒடுக்குமுறையைப் பற்றி, அந்த அநீதியைப் பற்றி சேர்ந்து நாம் பேசுவோம். அதற்கெதிராகப் போராடுவோம்” என்று கே.டானியல் சொல்ல வேண்டியிருந்தது.

அநீதியைப் பற்றியும் அறத்தைப் பற்றியும் பேசுவதற்கான முதற்தகுதியை நாம் பெற வேண்டுமானால் நாம் நீதியுடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கான நீதியை, உரிமைகளை மறுத்துக் கொண்டு நமக்கான நீதியை, உரிமையைக் கோரினால் அது மிகப்பெரிய கோமாளித்தனமாகும். சேரனுடைய எழுத்தியக்கம் இதை மிகத் துல்லியமாகச் சுட்டுகிறது. அவர் எப்போதும் தமிழ்ச்சமூகத்துக்குள் நிலவிய அனைத்து ஒடுக்குமுறைகளைப் பற்றியும் கடுந்தொனியில் எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அது சாதிய ஒடுக்குமுறை, முஸ்லிம்கள் மீதான தமிழர்களின் ஒடுக்குமுறை, இயக்க அதிகாரம் –  ஒடுக்குமுறை என அனைத்தையும்.

இதைச் செய்து கொண்டே சிங்கள பௌத்த அரச ஒடுக்குமுறையைப் பற்றியும் அதற்கு அனுசரணையாக இருக்கும் சர்வதேச (வல்லாதிக்கத் தரப்புகளின்) ஒடுக்குமுறையைப் பற்றியும் பேசுகிறார். ஒடுக்குமுறையைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியை ஒருவர் பெற வேண்டுமானால் அவர்  அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரானவராகத்  தன்னைப் பொதுவெளியில் நிறுத்த வேண்டும். ஆனால் நம்முடைய தமிழ்ச்சூழலில் இந்தப் பண்பு மிகக் குறைவு. பலரும் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைய அல்லது அதனுடைய மேலாதிக்கத்தை எதிர்ப்பார்கள். தம்முடைய சமூகத்துக்குள் நிலவும் சாதி, பால், பிரதேச ஒடுக்குமுறையை எதிர்ப்பதில்லை. மட்டுமல்ல, அவற்றை மேற்கொள்வோராகவும் இருக்கின்றனர். “நாம் விடுதலை பெற வேண்டுமானால், அதற்குத் தகுதியானவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று சு. வில்வரெத்தினம் சொன்னதை நாம் இங்கே மனதிற் கொள்வது அவசியம். ஆக அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலாகவும் விடுதலைக்கான வேட்கையாகவும் இயங்குவதே சேரனின் ஐம்பது ஆண்டுகால கவிதை உள்ளிட்ட எழுத்தியக்கத்தின் அடிப்படை.

கைதடி 1979: கோபுரக்கலசமும் பனைமர உச்சியும் என்ற இந்தக் கவிதை எழுதப்பட்டபோது சேரனுக்கு ஏறக்குறைய 20 வயதிற்குள்தான் இருக்கும். அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்றிது. இதுவோ அல்லது இப்பொழுது எழுதப்படுகின்ற கவிதையோ மட்டுமல்ல, இனிமேல் எழுதப்படுகின்ற கவிதை கூட மேற்சொல்லப்பட்ட அடிப்படையில்தான் அமையும். இதை மீறிச் சேரனால் சிந்திக்க முடியாது. அப்படி மீறியோ மாறியோ சிந்தித்தால் அது சேரனாக, சேரனுடைய கவிதையாக   அல்லது அவருடைய எழுத்தாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவருடைய மன அமைப்பும் சிந்தனையும் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் ஜனநாயக மறுப்புக்கும் மனித நாகரீகக் கேட்டுக்கும் அதிகாரத்துக்கும் எதிரானதாக அமைந்து விட்டன. என்பதால்தான் சாதிய ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, இயக்க அதிகாரம் அல்லது இயக்க ஒடுக்குமுறை, ஜனநாயக மறுப்பு, அரச ஒடுக்குமுறை போன்றவற்றைத் தொடர்ந்தும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார். ஏறக்குறைய அரை நூற்றாண்டு எதிர்ப்புக்குரலையுடையவர்  அல்லது மாற்றுக்குரலுடையவர் சேரன்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகமான அரசியற் கவிதைகளை எழுதிய தமிழ்க்கவிஞர்களில் சேரன் முதல்நிலைக்குரியவர். (ஏனைய மூவர் சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை). அரசியற் கவிதைகளை எழுதாத எந்தவொரு ஈழக்கவிஞரும் இல்லை. அந்தளவுக்கு அரசியல் ஈழக்கவிஞர்களிடத்திலே தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இருந்தாலும் சேரனுடைய அரசியற்கவிதைகளில் இலங்கையின் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தையும் ஈழப்போராட்டத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வரைபடம்போலத் தெளிவுறக் காணலாம். கூடவே தமிழ்பேசும் மக்களின் கையறு நிலை மற்றும் நீதிக்கான குரலையும். இந்தச் சமனிலை முக்கியமானது. ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல அனைத்துப் பழிகளையும் பழித்துரைப்பது.

‘யமன்’ இன ஒடுக்குமுறையின் சித்திரம் என்றால் ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’, ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’ இரண்டும் இயக்க அதிகாரத்துக்கு – ஒடுக்குமுறைக்கு எதிரான வெளிநடப்பு எனலாம். இதனால்தான் சேரனுக்கு நெருக்கடிகள் உண்டாகின. 1980 களின் நடுப்பகுதியிலிருந்து 2009 இல் ஈழப்போர் முடியும்வரையிலும் உயிராபத்துகளின் நடுவேதான் சேரன் வாழ வேண்டியிருந்தது என எண்ணுகிறேன். ஏறக்குறைய  கால்நூற்றாண்டு. அதுவும் அவருடைய முக்கியமான வாழ்க்கைப் பருவத்தில் (இளமைக்காலகட்டத்தில்). என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொண்டவாறே சேரன் இயங்கியிருக்கிறார். இது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம். இதற்காக அவர் வேறு பலரையும் போல வாழும் களங்களை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் பின்னர் கொழும்பிலிருந்து கனடாவுக்கும் என மாற்றியிருக்கிறார். ஆனால், தன்னுடைய குரலை – நிலைப்பாட்டை – எந்தச் சூழலிலும் தளர விட்டதில்லை; மாற்றியதில்லை.  இதேவேளை அவருடைய கவிதைகளின் மொழியிலும் மொழிதலிலும் (வெளிப்பாட்டிலும்) மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. பிந்திய கவிதைகள் மிகச் செறிவும் அடர்த்தியும் கூடியவை. தொடக்ககாலக் கவிதைகளில் விவரிப்புத் தன்மை அதிகம்.  

நிகழ்வுகளையும் நிகழ்களத்தையும் அல்லது சூழலையும் இவற்றில் இயங்கும் பாத்திரங்களையும் கொண்டு உருவாக்கப்படும் கவிதை அமைப்பையே நீண்ட காலமாகப் பின்பற்றி வந்தார் சேரன். அந்தக் கவிதைகளைப் படிக்கும்போது காட்சிகள் விரியும். அவற்றின் உள்ளும் வெளியுமாக படிப்போர் நிற்கும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருக்கும். ‘எல்லாவற்றையும் மறந்து விடலாம்’, ‘அவர்கள் அவனைச் சுட்டுக்கொன்றபோது’ போன்ற கவிதைகள் இதற்கு உதாரணம். ஆனால், பிந்திய கவிதைகள் இதிலிருந்து விலகிவிட்டன. இதற்கு –

தாலாட்டு

காலற்றவளின்

ஒரு கையில் குழந்தை

மறுகையில் கணவனின் துண்டிக்கப்பட்ட தலை

தொடைகளுக்கு இடையில்

வன்புணரும் படையாளின் துர்க்கனவு.

ஓலமிட மனிதரற்றுப் புகை மண்டிய ஊர்ப்புறத்தே

பசி. தாகம். விரக்தி. குரல் கரையும் குருவி.

வாலற்ற நாய். வெறுப்பில் மிதக்கும் காயா மரம்.

புழுதில் அலையும் இலவம் பஞ்சு. இமைப்பொழுதில்

அற்ற குளம். கடம்பு உதிரச் சிவந்த

நிலம்.

அலையடிக்கும் காற்றில்

அகல் விளக்குச் சிந்தும்

ஒளித் துளியில்

குழந்தைக்கு ஒரு தாலாட்டு

இந்தக் கவிதையைப் படித்து முடிக்க முடியாமல் மின்னதிர்வு நமக்குள் உண்டாகிறது. கொடுமையின் உக்கிரத்தை படிமாக்கி அளிக்கிறது கவிதை. இதில் நேரடியான காட்சி விவரிப்பில்லை. ஆனால், கவிதையின் தொடக்கத்தில் அப்படியொரு மங்கலான தோற்றமுண்டு. காலற்றவளின் / ஒரு கையில் குழந்தை / மறுகையில் கணவனின் துண்டிக்கப்பட்ட தலை என ஒரு அதிர்ச்சியளிக்கும் நொடிப் பொழுதுக் காட்சி மனதில் எழுகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணொருத்தியின் அவல நிலை அப்படியே நம்முடைய அகத்துள் கூரீட்டியாக இறங்குகிறது. இந்தக் காட்சி நிலையைச் சட்டென முறித்து, தொடைகளுக்கு இடையில் / வன்புணரும் படையாளின் துர்க்கனவு என கருத்து நிலைப்படிமத்தை உண்டாக்குகிறார் சேரன். கவிதை இன்னொரு தளத்துக்கு உயர்ந்து விரிகிறது. அந்தப் பெண்ணின் அவலம் மேலும் கூராகிறது. அப்படியே கூராகிச் செல்லும் கவிதையின் இறுதிப் பகுதி, இந்த அவலத்திலும் அவள் தன்னுடைய அந்தக் குழந்தைக்குத் தாலாட்டுப் படிக்கிறாள். தாலாட்டுப் பாடுவதைக் கவிதை காட்சிப்படுத்தவில்லை. ஆனால், அந்த நிலையை நம்முடைய அகத்திற்குள் படிமமாக்குகிறது. இத்தகைய அவலப்பரப்பை விரிக்கும் இன்னொரு பாடல் இங்கே நினைவில் எழுகிறது.

ஆவீன மழைபொழிய / இல்லம் வீழ / அகத்தடியாள் மெய்நோக / அடிமை சாக /

மாவீரம் போகுதென்று விதைகொண்டோட / வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள / கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க / குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க /  பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்க / பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே

–          ராமச்சந்திரக் கவிராயர்

இரண்டும் வெவ்வேறு சூழல், வேறு வேறான நிலைகள், யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை என்றாலும் அவலத்தினது – துயரத்தினது கூர்முனை ஒன்றே. பெருங்கவிகள் ஒன்றிணைகின்ற புள்ளிகள் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். இலக்கிய வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால் எதுவும் புதிதல்ல என்று தோன்றும். அடிப்படைகள் என்றும் ஒன்றுதான். அவற்றை அணுகும் விதமும் வெளிப்படுத்தும் விதமும்தான் ஆளுக்காள், ஆளுமைக்கு ஆளுமை வேறுபடுகிறது. அது அவரவர் தனித்திறன், வாழ்களம், வாழ்காலம் போன்றவற்றின் சேர்க்கையினாலும் உருவாகிறது.

இலங்கை அரசியலில் நிகழ்ந்த இன வன்முறை, போராட்ட எழுச்சி, போர் என எல்லாப் பெரு நிகழ்வுகளையும் சேரனுடைய கவிதைகள் அநேகமாகப் பிரதிபலித்துள்ளன. அதற்காக அவை ஏதோ செய்தி அறிக்கை – பத்திரிகைச் செய்தி என்ற அளவில் உலர்ந்து போகுமாறு அமையவில்லை. இந்த நிகழ்வுகள் இலக்கியத்தில் கலையாக்கமாகியுள்ளன. அதுவே இவற்றின் பேசக் கூடிய – கவனிக்கக் கூடிய பெறுமதியாகும். அதற்கான மொழியைக் கையாண்டு இவற்றை நிலைபெறச் செய்திருக்கிறார் சேரன்.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான  போராட்டத்தை ஊக்கப்படுத்தியதில் சேரனுடைய கவிதைகளுக்கு முக்கியமான பங்குண்டு.

எனது நகரம் எரிக்கப்பட்டது

எனது மக்கள் முகங்களை இழந்தனர்

எனது நிலம் எனது காற்று

எல்லாவற்றிலும்

அன்னியப் பதிவு.

கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி

யாருக்காகக் காத்திருந்தீர்கள்?

முகில்களின் மீது நெருப்பு

தன் சேதியை எழுதியாயிற்று

இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து

எழுந்து வருக

(இரண்டாவது சூரிய உதயம்) என்று 1983 இல் தமிழ்ச் சமூகத்தை நோக்கி அழைப்பு விட்டார் சேரன். இப்பொழுது 2024.  இடையில் 40 ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்குள் எவ்வளவோ நடந்தேறியும் விட்டன. ஈழப்போராட்டம் சிதைந்து அழிந்து விட்டது. சேரனே அதையும் எழுத வேண்டிய அவல நிலை.

உயிர் இருந்த இடம் கூற

ஒரு குறிப்பும் இல்லை

கரையில்

விரிந்திருந்த பனையின்மீது

கிழிந்து தொங்கும் சேலை

நிலத்தின் கீழ்

குழந்தைகளின் அலறல் ஒலி கேட்டேன்

தாழை மர வாசம் இன்று

காற்றினில் இல்லை.

என் இயலாமையின் கண்ணீரில்

தீ வளரும் நாடற்ற நாடு

என்றும்

வெந்து தணியாத

காடற்ற காட்டுக்குச் சென்றோம்

ஒரு குருவி கிடையாது

எனவும்

….. முற்றிற்று என்று சொல்லி

காற்றிலும் கடலிலும் கரைத்து விட்டுக்

கண்மூட

காற்றும் கிடையாது

கடலும் கிடையாது

காடாற்று எப்போது?

என்பதாகவும்

உள்ளும் வெளியும் தீ மூள

இருளின் அலறல்

குழந்தைகளை மனிதர்களை

வெள்ளம் இழுத்து வந்து

தீயில் எறிகிறது

என்றும்

காயம் பட்ட

இரண்டரை வயதுக் குழந்தையின் கைகளை

மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்

இக்கணம் கடவுள்

நீரற்ற விழிகளுடன் அலறும் தாய்

ஒரு பிசாசு

எனவும் கையறு நிலைப் பெருந்துயரோடு எழுதப்பட்ட கவிதைகளே ‘காடாற்று’ உள்ளிட்ட பிந்திய தொகுதிக் கவிதைகள். இவற்றில் பெண்களும் குழந்தைகளுமே சேரனுடைய கவலையை அதிகரிக்கின்றனர். ஏனென்றால் ஈழப்போராட்டம் போராகச் சுருங்கி, அழிவாக முடிந்தது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான்.

பகிருங்கள் Facebook WhatsApp

கருத்து எழுதுங்கள்